சம்பியன்ஸ் லீக் சுப்பர் 8 செப். 3ஆம் திகதி ஆரம்பம்

468
dcl super 8

2016ஆம் ஆண்டுக்கான டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட சுற்றுத் தொடரின் சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகும் என்று இலங்கை கால்பந்து சம்மேளனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்படி குறித்த திகதியில் கொழும்பு ரேஸ் கோஸ் சர்வதேச விளையாட்டரங்கில் ஆரம்பிக்கப்படவுள்ள சுப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் இலங்கை இராணுவப் படை அணியும் இலங்கை விமானப்படை அணியும் போட்டியிடவுள்ளன. இப்போட்டி மாலை 4 மணிக்கு ஆரம்பமாகும். அதே தினம் மாலை 6 மணிக்கு இடம்பெறும் இரண்டாவது போட்டியில் ரெனோன் மற்றும் புளூ ஸ்டார் அணிகள் மோதவுள்ளன.

குறித்த சுற்று ஆகஸ்ட் 27ஆம் திகதி கொழும்பு ரேஸ் கோஸ் சர்வதேச விளையாட்டரங்கில் ஆரம்பிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தவிர்க்க முடியாத காரணங்களினால் அது பிற்போடப்பட்டதாக கால்பந்து சம்மேளனம் தெரிவித்திருந்த நிலையிலேயே தற்பொழுது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி thepapare.com இடம் கருத்து தெரிவிக்கையில், ‘நாம் வார நாட்களிலும் போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்திருந்தோம். எனினும் அதில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, வார இறுதி நாட்களில் மாத்திரமே இந்தப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

போட்டிகள் தொடர்ந்து நான்கு வாரங்களுக்கு நடத்தப்படும். பின்னர் ஒரு இடைவேளை கொடுக்கவுள்ளோம். இலங்கை தேசிய கால்பந்து அணி கம்போடியா மற்றும் தாய்லாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளதனாலேயே இந்த இடைவேளை வழங்கப்படுகின்றதுஎன்று அவர் குறிப்பிட்டார்.  

இலங்கை அணி ஒக்டோபர் ஆரம்பப் பகுதியில் தமது வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. இதன்படி, செப்டம்பர் 3ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் சுப்பர் 8 சுற்று, செப்டம்பர் 25ஆம் திகதி வரை 4 வாரங்களுக்கு தொடர்ந்து இடம்பெறும். அதனைத் தொடர்ந்து மீண்டும் ஒக்டோபர் 22ஆம் திகதி போட்டிகள் ஆரம்பமாகும்.

டயொலொக் சம்பியன்ஸ் லீக் சுற்றின் இறுதிப் போட்டியை நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டி அட்டவணைகள் பற்றி அறிந்து கொள்வதற்கு கீழே உள்ள இணையத்தள முகவரியைப் பயன்படுத்தவும்.

போட்டி அட்டவணைகள்