இலங்கையில் இடம்பெறும் மிகப்பெரிய கால்பந்து சுற்றுத் தொடரான டயலொக் சம்பியன்ஸ் லீக் சுற்றுத் தொடரின் சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் இரண்டு மாத கால இடைவெளியின் பின்னர் மீண்டும் இவ்வாரம் (19ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ளன.

டயலொக் சம்பியன்ஸ் லீக் சுற்றுத் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாத முதல் வாரத்தில் அடுத்த சுற்றுக்கு தெரிவாகிய 8 அணிகளுக்குமான சுப்பர் 8 சுற்றின் முதல் வாரப் போட்டிகள் மாத்திரம் இடம்பெற்றன.

அதன் பின்னர், கம்போடியாவுடனான நட்பு ரீதியான போட்டி மற்றும் ஒற்றுமைக் கிண்ணத் தொடர் என்பவற்றில் இலங்கை தேசிய கால்பந்து அணி பங்குகொண்டிருந்தது. இலங்கை தேசிய அணியில் சுப்பர் 8 சுற்றில் விளையாடும் கழகங்களின் வீரர்களே அதிகமாக உள்ளடங்கி இருந்தனர்.

இவ்வாரப் போட்டிகளை நேரடியாகப் பார்வையிடுவதற்கு

எனவே தமது கழக வீரர்கள் தேசிய அணியில் இடம்பெறுவதனால், இலங்கை தேசிய அணியின் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்ததன் பின்னரே சுப்பர் 8 சுற்றை நடாத்த வேண்டும் என்று கழகங்கள் வேண்டுகோள் விடுத்தன. அதனைத் தொடர்ந்து நவம்பர் 19ஆம் திகதி வரை டயலொக் சம்பியன்ஸ் லீக் போட்டிகளை ஒத்தி வைப்பதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் அறிவித்திருந்தது.

நிறைவடைந்த போட்டிகள்

கடந்த செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் நிறைவடைந்த சுப்பர் 8 சுற்றின் முதல் நான்கு போட்டிகளும் விறுவிறுப்பானதாகவும், அதிர்ச்சியளிக்கும் முடிவுகளை தந்த போட்டிகளாகவும் அமைந்தன.

அதில் மிகப்பெரிய மோதலாக இருந்த புளூ ஸ்டார் மற்றும் ரினௌன் விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான போட்டியில் புளூ ஸ்டார் அணி எதிரணிக்கு அதிர்ச்சி கொடுத்தது. போட்டியில், பலம் மிக்க ரினௌன் அணியை 2-0 என்ற கோல்கள் கணக்கில் புளூ ஸ்டார் அணி வெற்றி கொண்டது.

அதேபோன்று இலங்கை ராணுவப்படை மற்றும் இலங்கை விமானப்படை அணிகளுக்கு இடையிலான மற்றொரு விறுவிறுப்பான போட்டியில் மதுஷான் டி சில்வாவின் இறுதிநேர கோலினால் போட்டி 2-2 என்ற கோல்கள் கணக்கில் சமநிலையானது.

டயலொக் சம்பியன்ஸ் லீக் அட்டவணை

இரண்டாவது நாள் போட்டியில் அநுராதபுரம் சொலிட் கழக அணி, இலங்கை கடற்படை அணியை 5-0 என்ற கோல்கள் கணக்கில் அபாரமாக வெற்றி கொண்டது.

இறுதியாக, நடப்புச் சம்பியன் கொழும்பு கால்பந்து கழக அணி மற்றும் நிவ் யங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி எந்தவித கோல்களும் இன்றி சமநிலையில் நிறைவுற்றது. இப்போட்டியிலும் நடப்புச் சம்பியனுக்கு நிவ் யங்ஸ் அணி கடும் சவால் கொடுத்தது.

சுப்பர் 8 சுற்றில் நடைபெறவுள்ள எஞ்சிய போட்டிகள் அனைத்தும் மிக முக்கிய போராட்டமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, இந்தப் போட்டிகள் குறித்த எதிர்பார்ப்பு இலங்கையில் உள்ள அனைத்து கால்பந்து ரசிகர்கள் மத்தியிலும் தீவிரமடைந்துள்ளது.

இரண்டு மாத இடைவெளியின் பின்னர் இவ்வாரம் ஆரம்பமாகும் இச்சுற்றின் முதல் நாளான 19ஆம் திகதி இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன. பின்னர் 20ஆம் திகதி ஒரு போட்டியும், 21ஆம் திகதி மற்றொரு போட்டியும் இடம்பெறும்.

இவ்வாரப் போட்டிகள்

நவம்பர் 19ஆம் திகதி (சனிக்கிழமை)

புளூ ஸ்டார் எதிர் விமானப்படை – களனிய கால்பந்து அரங்கு (மாலை 3.30 மணி)

கொழும்பு கழகம் எதிர் சொலிட் – கொழும்பு சிட்டி கால்பந்து அரங்கு (மாலை 3.30 மணி)

நவம்பர் 20ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை)

ரினௌன் எதிர் நிவ் யங்ஸ் – களனிய கால்பந்து அரங்கு (மாலை 3.30 மணி)

நவம்பர் 21ஆம் திகதி (திங்கட்கிழமை)

ராணுவப் படை எதிர் கடற்படை – களனிய கால்பந்து அரங்கு (மாலை 3.30 மணி)