சுபர் சன் – நியு யங்ஸ் இடையிலான ஆரம்பப் போட்டி சமநிலையில் நிறைவு

918

யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டரங்கில் நியு யங்ஸ் மற்றும் சுபர் சன் அணிகள் இடையே இடம்பெற்ற இந்த பருவகாலத்திற்கான டயலொக் சம்பியன்ஸ் லீக் (DCL) தொடரின் ஆரம்பப் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நிறைவுற்றது.  

கடந்த முறை தொடரில் மூன்றாம் இடம் பெற்ற வென்னப்புவ நியு யங்ஸ் கால்பந்துக் கழகம் மற்றும் கடந்த முறை நான்காம் இடத்தைப் பெற்ற பேருவளை சுபர் சன் விளையாட்டுக் கழகம் என்பவற்றுக்கு இடையிலான இந்தப் போட்டி நேற்று (21) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. DCL தொடரின் ஆரம்பப் போட்டியொன்று யாழ் மண்ணில் இடம்பெறுவது இலங்கை கால்பந்து வரலாற்றில் இது முதல் முறையாக இருந்தது.

ஆட்டத்தின் 6ஆவது நிமிடத்தில் நியு யங்ஸ் அணியினர் கோல் நோக்கி உதைந்த பந்து கோல் காப்பாளரின் கைகளில் பட்டு மைதானத்தில் நிறுத்தப்பட, அவ்வணியின் மற்றொரு வீரரின் முயற்சிக்கு முன்னர் சுபர் சன் வீரர் பாலகமகே சிவன்க ஹெடர் செய்து பந்தை வெளியேற்றினார்.

அடுத்த 3 நிமிடங்களில் நியு யங்ஸ் வீரர்கள் எதிரணியின் கோல் எல்லையில் அடுத்தடுத்து மேற்கொண்ட கோலுக்கான முயற்சிகளின் பின்னர், பந்தை கோல் காப்பாளர் ஜானக கோசல பிடித்துக்கொண்டார்.

சுபர் சன் அணிக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பாக, அவ்வணிக்கான கோணர் உதையின்போது கோல் நோக்கி செலுத்திய பந்து கம்பங்களை விட உயர்ந்து சென்றது.

போட்டியின் முதல் வாய்ப்பாக நியு யங்ஸ் அணியின் கோல் எல்லையின் இடது புறத்தில் பேருவளை வீரர்களுக்கு கிடைத்த ப்ரீ கிக்கை அனுபவ வீரர் அபீஸ் ஒலைமி பெற்றார். நேரே கோல் நோக்கி செல்லும் விதத்தில் உதைந்த பந்தை நியு யங்ஸ் கோல் காப்பாளர் தனுஷ்க ராஜபக்ஷ பாய்ந்து கம்பங்களுக்கு மேலால் தட்டி விட்டார்.

ஆட்டத்தின் 20 நிமிடங்கள் கடந்த நிலையில் நியு யங்ஸ் வீரர்கள் தமது பகுதியில் இருந்து உள்ளனுப்பிய பந்தைப் பெற்ற அவ்வணியின் முன்கள வீரர் நிமொ, பின்கள வீரரையும் தாண்டி பந்தைப் பெற்று, கோல் காப்பாளருக்கு மேலால் பந்தை கோலுக்குள் செலுத்தி டயலொக் சம்பியன்ஸ் லீக் 2018 பருவத்தின் முதல் கோலைப் பெற்றார். இதன்போது சுபர் சன் கோல் காப்பாளர் கம்பங்களை விடவும் முன்னே இருந்ததால் அவருக்கு பந்தை தடுப்பதற்கு எந்த வாய்ப்பும் இருக்கவில்லை.

மீண்டும் 29ஆவது நிமிடத்தில் நியு யங்ஸ் அணியின் பெனால்டி எல்லைக்கு சற்று வெளியில் வைத்து சுபர் சன் வீரர்களுக்கு கிடைத்த ப்ரீ கிக்கை டேனில் பெற்றார். அவர் உதைந்தபோது மிகவும் வேகமாக கோல் நோக்கி சென்றுகொண்டிருந்த பந்தை தனுஷ்க ராஜபக்ஷ் பாய்ந்து கைளால் குத்தி அங்கிருந்து வெளியேற்றினார்.

மீண்டும் 35ஆவது நிமிடத்தில் சுபர் சன் வீரர்களுக்கு கிடைத்த ப்ரீ கிக்கின்போது, சிவன்க உதைந்த பந்து மேல் கம்பத்தில் பட்டு வெளியேறியது.

இரு அணிகளும் பந்தை மாறி மாறி பறித்துக்கொள்ள முதல்பாதி ஆட்டம் நியு யங்ஸ் அணியின் முன்னிலையுடன் முடிவடைந்தது.

முதல் பாதி: நியு யங்ஸ் கா. 1 – 0 சுபர் சன் வி..

இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பித்த விரைவிலேயே சுபர் சன் எதிரணி கோல்கம்பத்தை ஆக்கிரமிக்க முயன்றபோது நியு யங்ஸ் பின்கள வீரர்கள் முன் அது முடியாமல் போனது.

இதனைத் தொடர்ந்து பந்து மைதானத்தின் நடுப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தது. எனினும், 48ஆவது நிமிடத்தில் சுபர் சன் அணிக்கு கிடைத்த ப்ரீ கிக்கின்போது பெனால்டி எல்லைக்கு அருகில் வைத்து உதைத்த பந்து உயரப்  பறந்தது.

எனினும் பந்து அதிக நேரம் நியு யங்ஸ் வீரர்களின் கால்களிலேயே பரிமாற்றம் செய்யப்பட்டன. 54ஆவது நிமிடத்தில் நியு யங்ஸ் வீரர் பௌஸான் பந்தை கடத்திவந்து எதிரணி பெனால்டி எல்லைக்கு அருகில் கோலை நோக்கி உதைத்தபோதும் சுப்பர் சன் பின்கள வீரர் அதனை வெளியே தட்டிவிட்டார்.

Photos : DCL – 2018 | New Youngs FC Vs Super Sun SC

ThePapare.com | Murugaiah Saravanan | 22/10/2018 Editing and re-using images without…

அடுத்த நிமிடத்திலேயே நியூ யங்ஸின் லக்ஷான் தனஞ்சய கோலை நோக்கி தலையால் முட்டிய பந்து, கம்பத்தில் பட்டும் படாமலும் வெளியேறிச்சென்றது. இதனிடையே 60ஆவது நிமிடத்தில் சுபர் சன் அணி வீரர்கள் பந்தை பெனால்டி எல்லை வரை சிறப்பாக கடத்தி வந்தபோதும் நியு யங்ஸ் பின்கள வீரர் குறுக்கிட்டதால் அந்த பொன்னான வாய்ப்பு நழுவிப்போனதோடு நியூ யங்ஸ் பெனால்டி நெருக்கடியில் இருந்து தப்பியது.

அதேபோன்று, 69ஆவது நிமிடத்தில் வைத்து சுபர் சன் அணி உதைத்த ப்ரீ கிக்கை கொண்டு அந்த அணி வீரர் தலையால் முட்டி கோலை நோக்கித் தள்ளியபோது நியு யங்ஸ் கோல்காப்பாளர் தனுஷ்க பந்தை பற்றிக்கொண்டார். அப்போது அது கோலா இல்லையா என்ற சர்ச்சையில், நடுவர் கோல் வழங்க மறுத்தார்.

எவ்வாறாயினும், ஆட்டத்தின் 78ஆவது நிமிடத்தில் நியு யங்ஸ் கோல் கம்பத்திற்கு இடதுபக்க மூலையில் இருந்து அபீஸ் அபாரமாக பரிமாற்றிய பந்தை டியோ டானியல் பறந்தபடி தலையால் முட்டி சுபர் சன்னுக்கு முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார். இதனால், சமநிலைக்கு வந்த போட்டியின் எஞ்சிய ஒருசில நிமிடங்களிலும் விறுவிறுப்பு அதிகரித்தது.

இரு அணிகளும் மாறி மாறி எதிரணி கோல் கம்பத்தை ஆக்கிரமிக்க முயற்சித்தன. இதன்போது 88ஆவது நிமிடத்தில் சுபர் சன் வீரர் லசந்த பிரதீப் தொலைவில் இருந்து உதைத்த பந்து கோல் கம்பத்திற்கு மிக உயரச் சென்றது. 89ஆவது நிமிடத்திலும் சுபர் சன் அணிக்கு கிடைத்த கோல் வாய்ப்பு ஒன்று நூலிழையில் தவறிப்போனது.

இதன்படி நான்கு நிமிடங்களாக வழங்கப்பட்ட உபாதையீடு நேரத்திலும் இரு அணிகளும் கோல் பெறாத நிலையில் போட்டி சமநிலையில் முடிவுற்றது.

எனவே, பெரும் எண்ணிக்கையிலான பேருவலை ரசிகர்கள் சூழ்ந்திருந்த யாழ் துறையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற டயலொக் சம்பியன்ஸ் லீக்கின் முதல் போட்டியின் நிறைவில் இவ்விரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெற்றுக் கொண்டன.

முழு நேரம்: நியு யங்ஸ் கா.க. 1 – 1 சுபர் சன் வி.க.

கோல் பெற்றவர்கள்

நியு யங்ஸ் கா.க. – பி.எஸ். நிமோ 22′

சுபர் சன் வி.க. – டானியல் 78’

மஞ்சள் அட்டை பெற்றவர்கள்

நியு யங்ஸ் கா.க. – மொஹமட் பௌசான்

சுபர் சன் வி.க. – டானியல்

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<