ஆறு மாதங்களின் பின்னர் மீண்டும் இந்திய அணியில் டோனி

501
Cricket.yahoo.net

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த மூன்று சுற்றுப் போட்டிகளுக்குமான (அவுஸ்திரேலிய மற்றும் நியூஸிலாந்து ஒருநாள், நியூஸிலாந்து டி20) குழாம் இன்று (24) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தேர்வுக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு மூன்று வகையான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்று வருகின்றது.

ஆஸி. அணியின் தலைவராக 7 வயதுடைய லெக் ஸ்பினர்

டி20 தொடர் முழுமையாக முடிவடைந்த நிலையில், தற்சமயம் அடுத்த தொடரான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகின்றது. இதுவரையில் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் ஒவ்வொரு போட்டி வீதம் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில், நாளை மறுதினம் (26) 3ஆவது டெஸ்ட் போட்டி ‘பாக்சிங் டே’ (Boxing day) டெஸ்ட் போட்டியாக மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான பயிற்சிகளில் இரு அணிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்து ஆரம்பமாகவுள்ள ஆஸி. அணியுடனான ஒருநாள் தொடருடன் ஆஸி. சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நியூஸிலாந்து மண்ணுக்கு புறப்படவுள்ளது.

அங்கு நியூஸிலாந்து கிரிக்கெட் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆகியவற்றில் பங்கேற்கவுள்ளது.

இந்திய அணி பங்கேற்கவுள்ள எதிர்வரும் மூன்று வகையான போட்டித்தொடர்களுக்கான குழாமை இன்று (24) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.

இந்நிலையில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட தல என்றழைக்கப்படும் மகேந்திர சிங் டோனி 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இதற்கு முன்னதாக இந்திய அணி பங்கேற்றிருந்த மேற்கிந்திய தீவுகள் அணியுடனான சுற்றுத்தொடர், அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா அணியுடனாக டி20 தொடர் என்பவற்றில் டோனி இடம்பெறவில்லை.

டோனிக்கு வயதும் சென்றுவிட்டது என்கின்ற ஒரு விமர்சனமும் நிலவிக் கொண்டிருக்கின்ற நிலையில், இவ்வாறு இரண்டு தொடர்களிலிருந்து புறக்கணிக்கப்பட்டதை தொடர்ந்து, டோனியினுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதா என்கின்ற சந்தேகம் கிரிக்கெட் ரசிகர்கள் எல்லோர் மத்தியிலும் எழுந்திருந்தது.

இந்த வார்த்தைக்கு பதிலடி கொடுக்கும் முகமாக பி.சி.சி.ஐ தேர்வுக்குழு அடுத்த மூன்று தொடர்களுக்குமான குழாத்தினை வெளியிட்டுள்ளது.

மேலும் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக், ஆசிய கிண்ண தொடரில் உபாதைக்குள்ளாகி மீண்டும் 3ஆவது டெஸ்ட் போட்டிக்கான குழாத்தில் இடம்பிடித்த ஹார்த்திக் பாண்டியா, உபாதைக்குள்ளாகியிருந்த கேதார் யாதவ்  மற்றும் கலீல் அஹமட் ஆகியோர் அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுடனான ஒருநாள் தொடருக்கான குழாமில் இடம்பிடித்துள்ளனர்.

அத்துடன் டெஸ்டில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ‘ஹிட் மேன்’ என்றழைக்கப்பட்டும் ரோஹித் ஷர்மா, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோரும் அடுத்த மூன்று போட்டித் தொடர்களுக்குமான அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இதேவேளை டோனியின் இடத்திற்காக நிரப்பட்டிருந்த ரிஷாப் பண்ட் ஆஸி. அணியுடனான ஒருநாள் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இந்திய A அணியுடனான போட்டியில் இந்திய A அணியை பிரதிநிதித்துவப்படுத்தி ரிஷாப் பண்ட் விளையாடவுள்ளதனாலேயே அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மேலும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விளையாடிய மணீஷ் பாண்டே மற்றும் தமிழக வீரர் வொஷிங்டன் சுந்தர் ஆகியோரும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து தொடருக்கான இந்திய ஒருநாள் குழாம் பின்வருமாறு,

விராட் கோஹ்லி (அணித்தலைவர்), ரோஹித் ஷர்மா (உப தலைவர்), கே. எல் ராகுல், ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதர் யாதவ், எம்.எஸ் டோனி, ஹார்த்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், ரவீத்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா, கலீல் அஹமட், முஹம்மட் ஷமி.

நியூஸிலாந்து அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியின் குழாமில் பாண்டியா சகோதரர்களில் ஒருவரான குர்ணால் பாண்டியா, ஒருநாள் அணியில் இடம்பிடிக்காத ரிஷாப் பாண்ட் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.

டெஸ்ட் தொடரை கைப்பற்றும் நோக்கோடு நியூசிலாந்துடன் மோதும் இலங்கை

டி20 குழாத்திலிருந்து சகலதுறை வீரர்களான ஜடேஜா, கேதர் யாதவ், வேகப்பந்து வீச்சாளர் முஹம்மட் ஷமி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

நியூஸிலாந்து அணித்கெதிரான இந்திய டி20 குழாம் பின்வருமாறு,

விராட் கோஹ்லி (அணித்தலைவர்), ரோஹித் ஷர்மா (உப தலைவர்), கே. எல் ராகுல், ஷிகர் தவான், ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், கேதர் யாதவ், எம்.எஸ் டோனி, ஹார்த்திக் பாண்டியா, குர்ணால் பாண்டியா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா, கலீல் அஹமட்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<