புதிய தேசிய சாதனை படைத்த இரும்புப் பெண் சுகன்தி

461

சுகததாச அரங்கில் நடைபெற்று வரும் 10ஆவது பாதுகாப்பு சேவைகள் மெய்வல்லுனர் போட்டியின் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை (14) புதிய தேசிய சாதனை ஒன்று பெறப்பட்டதோடு, மூன்று போட்டி சாதனைகள் முறியடிக்கப்பட்டன.

பாதுகாப்பு சேவைகள் மெய்வல்லுனரில் விதூஷா, சச்சினி புதிய போட்டி சாதனை

10ஆவது தடவையாகவும் ஏற்பாடு…

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த இரும்புப் பெண்மணி லக்ஷிக்கா சுகன்தி ஹெப்டத்லோன் (Heptathlon) ஏழு அம்ச போட்டிகளில் ஒரு சில மாதங்களுக்குள் தேசிய சாதனையை முறியடித்தார். சுகன்தி அண்மையில் நடந்த 96ஆவது தேசிய சம்பியன்ஷிப் போட்டியில் 4906 புள்ளிகளைப் பெற்று படைத்த தேசிய சாதனையை மேலதிகமாக 5 புள்ளிகளுடன் 4911 புள்ளிகளைப் பெற்று தற்போது முறியடித்தார்.

இலங்கையின் பன்முக தடகள வீராங்கனையான லக்ஷிக்கா சுகன்தி பெண்களுக்கான 100 மீற்றர் தடைதாண்டி ஓட்டப்போட்டியிலும் தேசிய சம்பியனாவார்.

அதேபோன்று ஆண்களுக்கான டெகத்லோன் (Decathlon) பத்து அம்ச போட்டியில் 7000 புள்ளிகளை எட்டிய இலங்கை வீரரான அஜித் கருணாரத்ன புதிய போட்டி சாதனை படைத்தார். வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில் 6961 புள்ளிகளை பெற்று 10 பந்தயங்களையும் பூர்த்தி செய்தார். அவர் அண்மையில் நடந்த தேசிய சம்பியன்ஷிப் போட்டியில் 7356 புள்ளிகளை பெற்று தனது தேசிய சாதனையை புதுப்பித்துக் கொண்டார்.     

ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கையின் முன்னணி வீரரான இந்துனில் ஹேரத் பாதுகாப்பு சேவைகள் மெய்வல்லுனர் போட்டி சாதனையை முறியடித்தார். இதன்போது அவர் 800 மீற்றர் இறுதிப் போட்டியை 1:48.00 நிமிடத்தில் முடித்தார். இதற்கு முன் 2010 ஆம் ஆண்டு 800 மீற்றரை 1:49.78 நிமிடத்தில் முடித்ததே போட்டி சாதனையாக இருந்தது.  

ஆண்களுக்கான கோலூன்றி பாய்தலில் தேசிய சாதனைக்கு சொந்தக்காரரான இலங்கை விமானப்படையின் இஷார சதருவன் புதிய போட்டிச் சாதனையுடன் முதலிடத்தை பிடித்தார். இந்தப் போட்டியில் அவர் 5.00 மீற்றர் உயரம் பாய்ந்ததோடு இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சி.பீ. செனரத்  4.45 மீற்றர்கள் பாய்ந்து இரண்டாவது இடத்தையும் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த மற்றொரு வீரரான எச்.எஸ். ஜனித் இதே உயரத்தை பாய்ந்து மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டார்.

அண்மைக்காலமாக சோபிக்கத் தவறிவரும் இஷார சதருவன் தனது சிறந்த பாய்ச்சலான 5.11 மீற்றர் உயரமே தேசிய சாதனையாக உள்ளது.  

பெண்களுக்கான பரிதிவட்ட போட்டியில் தேசிய சம்பியனான அயேஷா மதுவன்தி இந்த போட்டியில் பங்கேற்காத நிலையில் இலங்கை கடற்படையைச் சேர்ந்த மதுரங்கி அந்த வாய்ப்பை பயன்டுத்தி புதிய போட்டி சாதனையுடன் வெற்றி பெற்றார். அவர் இதன்போது 44.36 மீற்றர் தூரம் வீசினார். டபிள்யூ.எம். வீரசேகர மற்றும் வி.வி. லக்மாலி முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பெற்றனர்.

 டயலொக் அனுசரணையில் இடம்பெறவுள்ள மகாவலி விளையாட்டு விழா

பெண்களுக்கான 800 மீற்றர் இறுதிப் போட்டியை 2:06.12 நிமிடங்களில் முடித்து நிமாலி லியனாரச்சி முதலிடம் பிடித்ததோடு அவருக்கு கடும் சவால் கொடுத்த  கயன்திக்கா அபேரத்ன 2:06.40 நிமிடங்களில் போட்டியை முடித்து இரண்டாவது இடத்தை பிடித்தார். இலங்கை இராணுவப்படையின் எம்.சி. டில்ருக்ஷி 2:06.00 நேரத்தில் வந்து மூன்றாவது இடத்தை பிடித்தார்.    

இலங்கை இராணுவப் படையின் நிலானி ரத்னாயக்க 3000 மீற்றர் தடைதாண்டி ஓட்டப்போட்டியில் பெரிதாக சவாலின்றி வெற்றி பெற்றார். அவர் 10:20.71 நிமிடங்களில் போட்டியை முடிக்கும்போது இரண்டாவது வந்த இலங்கை விமானப்படையின் டபிள்யூ.பீ. துலக்ஷி போட்டியை  முடிப்பதற்கு 10:47.62 நிமிடங்கள் எடுத்துக் கொண்டார். 11:11.26 நிமிடங்களில் போட்டியை முடித்த கடற்படையின் டபிள்யூ.என். குமாரி மூன்றாம் இடம் வந்தார்.

பாதுகாப்பு சேவைகள் மெய்வல்லுனர் போட்டியின் இரண்டாவது நாளில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளின் 4×100 அஞ்சலோட்டப் போட்டிகள் விறுவிறுப்புடன் இடம்பெற்றன. இதில் இரு பிரிவுகளிலும் இலங்கை இராணுவப் படையே வெற்றி பெற்றது. இதில் பெண்கள் பிரிவில் இராணுவப்படை அணி 46.57 வினாடிகளில் முதலிடத்தை பிடித்ததோடு ஆண்கள் பிரிவிலும் இராணுவப் படை அணி 41.33 வினாடிகளில் சவாலின்றி வெற்றி பெற்றது.

ஆசிய விளையாட்டு விழாவை ஆக்கிரமிக்கும் ஆபிரிக்க நாட்டு வீரர்கள்

இரண்டாவது நாளில் மேலும் 22 பதக்கங்களை வென்ற இலங்கை இராணுவ அணி 18 தங்கங்கள் உட்பட மொத்தம் 40 பதக்கங்களுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. இதன்போது இராணுவ அணி 143 புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை விமானப்படை அணி 70 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் இலங்கை கடற்படை 32 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பு சேவைகள் மெய்வல்லுனர் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி நாள் போட்டிகள் சனிக்கிழமை (15) நடைபெறும்.