இப்பாடசாலை 1914ஆம் ஆண்டு புனித செபஸ்தியன் என்ற பெயரில் ஆங்கில கதோலிக்க பாடசாலையாக கந்தானையில் ஆரம்பிக்கப்பட்டது.

பின்னர்  1931ஆம் ஆண்டு டி லா சல்லே சகோதரர்களால் பொறுப்பெடுக்கப்பட்ட இப்பாடசாலை டி மெசனொட் கல்லூரி என்று பெயர் மாற்றப்பட்டு, கடந்த  85 வருடங்களாக பாரிய அபிவிருத்திகளைக் கண்டு வருகின்றது.

டி மெசனொட் கல்லூரி, கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் அதே நேரம் கால்பந்து போட்டிக்கும் தேசிய மட்டத்தில்  பிரசித்தி பெற்றுள்ளது. தற்காலத்தில் உள்ள பல சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கிய பெருமை இப்பாடசாலைக்கு உண்டு.

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடிய வலது கை மித வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத் மற்றும் டில்ஹாரா பெர்னாண்டோ ஆகியோர் டி மெசனொட் கல்லூரியினால் உருவாக்கப்பட்டவர்களே.

2016/17 ஆம் ஆண்டு

கடந்த பருவகால போட்டிகளில் காலிறுதிக்கு முன்னைய சுற்றுக்கு தகுதி பெற்ற டி மெசனொட் கல்லூரி, கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரியினால் மாத்திரமே தோற்கடிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த பருவகால போட்டிகளில் தர்ஸ்டன் கல்லூரி, மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரிகளுடன் மெசனொட் கல்லூரி D குழுவில் ஏழாவது இடத்தினை பெற்று சற்றே தடுமாறி வருகிறது.

இருந்தாலும் பருவகால போட்டிகளின் ஆரம்பத்தில் குருநாகல மலியதேவ கல்லூரியுடனான போட்டியில் முதல் இன்னிங்ஸ்சில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் மெசனொட் கல்லூரி அணித்தலைவர் கிரிஷான் சஞ்சுல இரட்டை சதம் விளாசினார்.

இந்த ஆண்டில் இவ்வணி தொடர்ச்சியாக இடம்பெறும் 3 போட்டிகள் மற்றும் 4 சுற்றுப் போட்டிகள் என இதுவரையில் மொத்தமாக 7 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 3 முதல் இன்னிங்ஸ் வெற்றிகளைப் பெற்றுள்ளது. அதே நேரம் கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியுடனான போட்டியில் தோல்வியுற்றது.

அணியின் முக்கிய வீரர்கள்

தலைவர் கிருஷான் சஞ்சுல 5 வருட கால அனுபவம் கொண்ட ஒரு பிரதான வீரராவார். அத்துடன்,  19 வயதுக்குட்பட்ட கடந்த பருவகால போட்டிகளில் 3 சதங்கள் உட்பட 9௦௦ ஓட்டங்களுக்கு மேல் பெற்றுக்கொண்டுள்ளார்.

மேலும், விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரராக செயற்படும் இவர்  மலியதேவ கல்லூரியுடனான போட்டியில் 249 பந்துகளில் 253 ஓட்டங்களை குவித்தமை குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர், இந்த வருடம் இடம்பெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண போட்டிகளுகளில் அவர் பங்குபற்றியமையினால் சில பாடசாலை போட்டிகளில் பங்குகொள்ள அவரால் முடியாமல் போனது.

தொடர்ந்து மூன்றாவது வருடமாக விளையாடும் துணைத் தலைவர் ஈரோஸ் டி சில்வா, கடந்த பருவகாலப் போட்டிகளில் 5௦௦ ஓட்டங்களுக்கு மேல் குவித்துள்ளார். தலைவர் கிருஷான் சஞ்சுல இல்லாத நேரங்களில் அணியை பொறுப்பெடுத்து வழிநடத்திய மற்றுமொரு பிரதான பொறுப்பு வாய்ந்த வீரராக இவர் உள்ளார்.

டி மெசனொட் கல்லூரி கிரிக்கெட் அணியின் புகைப்படத் தொகுப்பு

ஐந்தாவது வருடமாக விளையாடும் தேஷான் பெர்னாண்டோ அணியின் மூத்த மற்றும் அதிக அனுபவம் மிக்க வீரராவார். அத்துடன், டி மெசனொட் கல்லூரிக்காக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி கடந்த பருவகால போட்டிகளில் 65௦ ஓட்டங்களுக்கு மேல் பெற்றுகொண்டுள்ளார்.

கடந்த பருவகால போட்டிகளில் 22 விக்கெட்டுக்களை கைப்பற்றிய வலது கை மித வேகப்பந்து வீச்சாளர் மித்தில கீத் மற்றும் கடந்த வருடம் ஒரு சதம் உட்பட 25௦ ஓட்டங்களுக்கு மேல் பெற்றுக்கொண்ட நாடுன் டில்ஷான் ஆகியோர் இம்முறையும் இரண்டு தூண்களாக இருந்து அணியை பலப்படுத்துவார்கள்.

14 வயதேயான ரகித பெர்னாண்டோ, மேலும் ஐந்து வருடங்கள் விளையாட இருப்பதால் அவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. தமது திறமைகளை தற்பொழுதிலிருந்து வெளிப்படுத்த காத்திருக்கும் ஒரு எதிர்பார்ப்பு மிக்க வீரராக அவர் உள்ளார்.

முன்னதாக சிலாபம் புனித.மரியார் கல்லூரி கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய சஷான் தினித்து மற்றும் ரோசித்த செனவிரத்ன ஆகியோர் தற்பொழுது டி மெசனொட் கல்லூரி அணிக்காக விளையாடுகின்றனர்.

பயிற்சியாளர்கள் :

திராவின் மெதிவ்ஸ், தொடர்ந்து இரண்டாவது வருடமாகவும் டி மெசனொட் கல்லூரி கிரிக்கெட் அணிக்கு பயிற்சியளிக்கும் இவர், 1997களில் கொழும்பு புனித. ஜோசப் கல்லூரி அணியை தலைமையேற்று வழி நடத்தியவர். அத்துடன், இவர் இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸின் சகோதருமாவார் என்பது குறிப்பிடதக்கது.

புனித.ஜோசப் கல்லூரியின் அணித்தலைவராக செயற்பட்ட மற்றொரு வீரரும், இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப் படுத்தியவருமான ரனேஷ் பெரேரா அண்மையில் டி மெசனொட் கல்லூரியின் உதவிப் பயிற்சிவிப்பாளராக இணைந்து கொண்டார்.

கடந்த சில வருடங்களாக  அணியுன் மேலாளராக பணியாற்றி வரும் மாலிக் கீர்த்தி இவ்வருடமும் அப்பொறுப்பினை ஏற்றுள்ளார்.

இறுதியாக

ஒரே ஒரு முதல் இன்னிங்ஸ் வெற்றியை பெற்றிருக்கும் டி மெசனொட் கல்லூரி, மேலும் முயற்சிகள் பல செய்து வெற்றி பெற்றால் மாத்திரமே இந்த பருவகால போட்டியில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.