டயலொக் சம்பியன்ஸ் லீக்கில் மொறகஸ்முல்ல யுனைடட் விளையாட்டுக் கழக அணிக்கு எதிரான போட்டியில் அதிக நேரத்தை 10 வீரர்களுடன் விளையாடிய அநுராதபுரம் சொலிட் விளையாட்டுக் கழகம் ஆட்டத்தை 1-1 என்ற கோல்கள் கணக்கில் சமநிலையில் நிறைவு செய்துள்ளது.

ராஜகிரிய ஜனக ரனவக்க விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டி ஆரம்பமாகிய 9ஆவது நிமிடத்திலேயே, சொலிட் அணிக்கு இந்த பருவகாலத் தொடரில் அதிக கோல்களைப் பெற்றுக்கொடுத்துள்ள கஸ்தீம் ஓஜோ முதல் கோலைப் போட்டார்.

13ஆவது நிமிடத்தில் மொறகஸ்முல்ல அணிக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை இளம் வீரர் டிலான் மதுசங்க பெற்றார். பெனால்டி எல்லைக்கு சற்று வெளியில் வலது புறத்தில் இருந்து அவர் உதைந்த பந்தை அவ்வணியின் முன்கள வீரர்கள் சிறந்த முறையில் நிறைவு செய்யத் தவறினர்.

கொழும்பு – கிரிஸ்டல் பெலஸ் இடையிலான போட்டி இரண்டாம் பாதியில் இடைநிறுத்தம்

கொழும்பு கால்பந்து கழகத்திற்கும் கிரிஸ்டல் பெலஸ் கால்பந்து கழகத்திற்கும் இடையிலான போட்டி, இரண்டாம் பாதியின் முதல்…

ஆட்டத்தின் 23ஆவது நிமிடம் சொலிட் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சொலிட் அணியின் பெனால்டி எல்லைக்கு பந்தை எடுத்து வந்த மொறகஸ்முல்ல முன்கள வீரர் புபுது சகுலந்தவை சொலிட் கோல் காப்பாளர் மொஹமட் இஷான் முறையற்ற விதத்தில் வீழ்த்தியதாகத் தெரிவித்த நடுவர், இஷானுக்கு ஒரே முறையில் சிவப்பு அட்டை காண்பித்து அவரை மைதானத்தில் இருந்து வெளியேற்றினார்.

எனினும், மைதானத்தில் இருந்த பலரும் நடுவர் ஒரே முறையில் சிவப்பு அட்டை காண்பித்தமைக்கு தமது அதிருப்தியைத் தெரிவித்தனர். இதன்போது சொலிட் அணியின் ஹஸ்ஸன் கெஹின்டே மைதானத்தில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டு அவருக்குப் பதிலாக சுப்ரமித்ர மாற்று கோல் காப்பாளராக மைதானத்திற்கு உள்வாங்கப்பட்டார்.

இதன்போது மொறகஸ்முல்ல அணிக்கு கிடைத்த பெனால்டியை டிலான் மதுசங்க கம்பங்களை விட உயர்த்தி வெளியே உதைந்து சிறந்த வாய்ப்பை வீணாக்கினார்.

பின்னர் நீண்ட நேரம் இரு அணிகளும் சரி சமமான அளவிலான வாய்ப்புக்களுடன் விளையாடின. எனினும், சொலிட் அணி 10 வீரர்களுடனேயே எதிரணியின் சொந்த மைதானத்தில் போராடினர்.

ஆட்டத்தின் 40ஆவது நிமிடத்தின் பின்னர் இரு அணி வீரர்களுக்கும் பல வாய்ப்புக்கள் கிடைத்தும் அவை சிறந்த முறையில் நிறைவு செய்யப்படவில்லை.

முதல் பாதி: சொலிட் விளையாட்டுக் கழகம் 1 – 0 மொறகஸ்முல்ல யுனைடட் விளையாட்டுக் கழகம்

இண்டாவது பாதி ஆரம்பமாகி 7 நிமிடங்களில் சொலிட் வீரர் சமித் மதுரங்கவுக்கு வழங்கப்பட்ட பந்தை அவர் ஹெடர் மூலம் கோலாக்கினார். எனினும், நடுவர் அதனை ஓப் சைட் கோல் என நிராகரித்தார்.

இலங்கை இளம் அணிக்கு மற்றுமொரு தோல்வி

தஜிகிஸ்தான் நாட்டில் இடம்பெற்று வரும் 19 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான 2018ஆம்…

மறுமுனையில் மொறகஸ்முல்ல யுனைடட் வீரர்கள் தொடர்ச்சியாக அடுத்தடுத்து மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் மாற்று கோல் காப்பாளராக வந்த அனுபவம் குறைந்த சுப்ரமித்ர சிறந்த முறையில் தடுத்தார்.

போட்டியின் 60ஆவது நிமிடத்தில் மொறகஸ்முல்ல அணிக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை ரொஷான் பியவன்ச பெற்றார். அவர் பந்தை தனது சகோதரர் டிலான் மதுசங்கவுக்கு வழங்க, டிலான் இடதுபுற கம்பத்தினூடாக பந்தை செலுத்தி கோலாக்கினார்.

போட்டி சமநிலையடைந்ததும், அடுத்த கோலுக்காக மிக வேகமாக செயற்பட்ட மொறகஸ்முல்ல வீரர்கள் எதிரணியின் கோல் பரப்பை ஆக்கிரமித்தனர். எனினும், அவர்களது முயற்சிகள் இறுதித் தருவாயில் சொலிட் பின்கள வீரர்கள் மற்றும் கோல் காப்பாளர் மூலம் முறியடிக்கப்பட்டன.

83ஆவது நிமிடத்தில் சொலிட் பின்கள வீரர் அன்டனி டிலக்ஷன் மத்திய களத்திற்கு பந்தை எடுத்து வந்து முன்களத்தில் இருந்த ஞானரூபன் வினோதிற்கு பந்தை வழங்க, வினோத் வேகமாக கோலை நோக்கி அடித்த பந்து கம்பங்களுக்கு மேலால் சென்றது.

90ஆவது நிமிடத்தில் டிலான் எதிரணியின் கோல் நோக்கி உதைந்த பந்து கோலுக்குள் சென்றுகொண்டிருக்கையில், சொலிட் பின்கள வீரர் மூலம் இறுதி நேரத்தில் பந்து தடுக்கப்பட்டது.

மீண்டும் மேலதிக நேரத்தில் பெறப்பட்ட ப்ரீ கிக்கின் போது மொறகஸ்முல்ல வீரர் சாமர குனசேகர கோல் நோக்கி உதைந்த பந்தை சுப்ரமித்ர தட்டிவிட்டார்.

எனவே, 10 வீரர்களுடன் சொலிட் அணியினர் மேற்கொண்ட போராட்டத்தின் பலனாக அவர்கள் போட்டியை 1-1 என சமநிலை செய்தனர்.

முழு நேரம்: சொலிட் விளையாட்டுக் கழகம் 1 – 1 மொறகஸ்முல்ல யுனைடட் விளையாட்டுக் கழகம்

கோல் பெற்றவர்கள்

சொலிட் விளையாட்டுக் கழகம்கஸ்தீம் ஓஜோ 9’

மொறகஸ்முல்ல யுனைடட் விளையாட்டுக் கழகம்டிலான் மதுசங்க 60’

கிறிஸ்டல் பெலஸ் எதிர் சௌண்டர்ஸ்

களனி கால்பந்து மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் 10ஆவது நிமிடத்தில் கிறிஷாந்த அபேசேகர செளண்டர்ஸ் அணிக்கான முதல் கோலைப் பெற்று அணியை முன்னிலைப்படுத்தினார்.

எனினும் அதற்குப் பதில் கொடுக்கும் வகையில் 22ஆவது நிமிடத்தில் கிறிஸ்டல் பெலஸ் வீரர் மொஹமட் சாமில் முதல் கோலைப் பெற்றுக்கொடுத்து கோல் கணக்கை சமநிலைப்படுத்தினார்.

முதல் பாதி: கிறிஸ்டல் பெலஸ் 1 -1 சௌண்டர்ஸ்

இரண்டாவது பாதி ஆரம்பமாகி 4 நிமிடங்களில் போட்டியை கிறிஸ்டல் பெலஸ் அணி முன்னிலைப்படுத்தியது. அவ்வணியின் சமீர கிறிஷாந்த முன்னிலை கோலைப் பெற்றுக்கொடுத்தார்.

10 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் கால்பந்து தொடரில் கொழும்பு அணி

இந்தியாவின் கொச்சின் நகரில் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை…

மேலும் 10 நிமிடங்கள் கடந்த நிலையில் ஜேன் ப்ரான்கொய்ஸ் மூலம் கிறிஸ்டல் பெலஸ் அணி தமக்கான மூன்றாவது கோலையும் பெற்றுக்கொண்டது.

எனினும் எஞ்சிய 30 நிமிடங்களில் எந்தவொரு கோலும் பெறப்படாமையினால், மேலதிக இரண்டு கோல்களினால் கிறிஸ்டல் பெலஸ் அணி தமது மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது.

முழு நேரம்: கிறிஸ்டல் பெலஸ் 3 -1 சௌண்டர்ஸ்

 கோல் பெற்றவர்கள்

கிறிஸ்டல் பெலஸ் கால்பந்து கழகம்மொஹமட் சாமில் 22, சமீர கிறிஷாந்த 49’, ஜேன் ப்ரான்கொய்ஸ் 59’

சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம்கிறிஷாந்த அபேசேகர 10’

ஏனைய போட்டி முடிவுகள்

சுபர் சன் விளையாட்டுக் கழகம் 5 – 2 அப் கண்ட்ரி லயன்ஸ் விளையாட்டுக் கழகம்

இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம் 1 – 0 மாத்தறை சிடி விளையாட்டுக் கழகம்