ராணுவப்படையின் அதிரடியால் தவிடுபொடியாகிய புளு ஸ்டாரின் கனவு

909
Army v blue star article

ரேஸ் கோர்ஸ் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதி வாரத்திற்கான போட்டியொன்றில் ராணுவப்படை அணி 7-3 என்ற கோல்கள் கணக்கில் புளு ஸ்டார் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் புளு ஸ்டாரின் சம்பியன் கனவு வீண்போனது.

இந்த பருவகால டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் சம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்புகளுடன் சுபர் 8 சுற்றுக்கு களமிறங்கிய ராணுவப்படைக்கு ரினௌன் அணியுடனான போட்டி திருப்பு முனையாக அமைந்தது. அந்தப் போட்டியினை ராணுவப்படை வெற்றி பெற்றாலும் சட்டத்திற்கு புறம்பாக அசிக்குர் ரஹ்மானை களமிறக்கியதால் அவர்கள் வெற்றியின் மூலம் பெற்ற 3 புள்ளிகளையும் இழக்க நேர்ந்தது. இதனால் கிண்ணத்தை வெல்வதற்கான வாய்ப்பு ரினௌன் அணிக்கு அதிகரித்தது.

டயலொக் சம்பியன்ஸ் லீக் கிண்ணம் யாருக்கு? தீர்மானம் மிக்க போட்டிகள் குறித்த ஒரு அலசல்

டயலொக் சம்பியன்ஸ் லீக் கிண்ணம் யாருக்கு? தீர்மானம் மிக்க போட்டிகள் குறித்த ஒரு அலசல்

இந்த பருவகால டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் சுப்பர் 8 சுற்றின் 7ஆவதும் இறுதியுமான வாரத்திற்கான பரபரப்பான போட்டிகள் இடம்பெறவுள்ள இத்தருவாயில் நாம் உள்ளோம்.

சூப்பர் 8 சுற்றில் மிகவும் சிறப்பாக விளையாடிய புளு ஸ்டார் அணி இச்சுற்றில் ஒரு போட்டியிலேனும் தோல்வியை சந்திக்கவில்லை. அவ்வணி ரினௌன் மற்றும் கொழும்பு அணிகளை வீழ்த்தி கோப்பையை வெல்லும் கனவை தக்க வைத்துக்கொண்டது.

இந்நிலையில் லீக்கின் இறுதி வாரப் போட்டியான இந்தப் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயம் காணப்பட்டதால் மிகவும் சிறப்பாக விளையாட வேண்டிய நிர்ப்பந்தம் புளு ஸ்டார் அணிக்கு இருந்தது.

ரேஸ் கோர்ஸ் சர்வதேச அரங்கில் ஆரம்பமாகிய இந்த போட்டியின் ஐந்தாவது நிமிடத்திலேயே முதலாவது கோலினைப் பெற்றார் ராணுவப்படை வீரர் மொஹமட் இஸ்ஸதீன். மதுஷான் டி சில்வாவின் உள்ளனுப்பலை லாவகமாக பயன்படுத்திய இஸ்ஸதீன் அதனை கோலாக மாற்றினார்.

மேலும், சிறப்பாக விளையாடிய ராணுவப்படைக்கு, 9ஆவது நிமிடத்தில் சஜித் குமாரவை நசிரு ஒபயேமி தவறான முறையில் வீழ்த்த, பெனால்டி வாய்ப்பொன்று கிடைத்தது. பெனால்டியினை கோலினுள் அடித்து முன்னிலையை இரட்டிப்பாக்கினார் மொஹமட் இஸ்ஸதீன்.

பின்னர் 21ஆவது நிமிடத்தில் ராணுவப்படை அணிக்கு ப்ரி கிக் வாய்ப்பு கிடைக்கப் பெற்றது. அதனை ப்ளூ ஸ்டார் களத்தடுப்பாளர்கள் சரியான முறையில் வெளியனுப்பாததனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய சஜித் குமார போட்டியின் மூன்றாவது கோலினை பெற்றுக் கொடுத்தார்.

தொடர்ந்து 23ஆவது நிமிடத்தில் ப்ளூ ஸ்டார் கோல் தடுப்பாளர் மஞ்சுல பெர்ணான்டோவின் தவறினை சாதகமாகப் பயன்படுத்திய சஜித் குமார ராணுவப்படை அணியின் நான்காவது கோலினை தலையால் முட்டிப் பெற்றார்.

போட்டி அரை மணி நேரத்தை தாண்டிய வேளையில், 32ஆவது நிமிடத்தில் ஷன்னவின் உள்ளனுப்பலை கோலாக மாற்றி புளு ஸ்டார் அணிக்கு உத்வேகத்தை அளித்தார் இடோவோ ஹமீட்.

தொடர்ந்து, மொஹமட் இஸ்ஸதீன் மற்றும் ஷன்ன இருவருக்கும் இரு கோல் வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றும் அவர்களால் கோலினைப் பெற முடியாமல் போனது.

பரபரப்பான முதல் பாதியின் முடிவில் ராணுவப்படை 3 கோல்களால் முன்னிலை பெற்றது.

முதல் பாதி: ராணுவப்படை விளையாட்டுக் கழகம் 04 – 01 புளு ஸ்டார் விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதியின் ஆரம்பத்திலேயே இரண்டாவது கோலினை அடித்து போட்டியை மேலும் சுவாரஷ்யப்படுத்தியது புளு ஸ்டார் அணி. ஜிபோலாவின் ப்ரி கிக் உதையை மொஹமட் நஜீப் இலகுவாகவும், சிறந்த முறையிலும் உதைந்து கோலாக மாற்றினார்.

எனினும் புளு ஸ்டார் அணியின் அதிரடி ஆட்டத்திற்கு மத்தியில் கவுண்டர் அட்டாக் முறை மூலம் ஐந்தாவது கோலினை பெற்றது ராணுவப்படை. தொடர்ந்து 62ஆவது நிமிடத்தில் தனக்கு வந்த பந்தினை கோலாக மாற்றி மதுஷான் டி சில்வா புளு ஸ்டார் அணியின் கனவுகளை தவிடுபொடியாக்கினார்.

அதன் பின்பு மீண்டும் போட்டியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது ராணுவப்படை அணி. குறிப்பாக இஸ்ஸதீனுக்கு தனது ஹட்ரிக் கோலினை நிறைவு செய்யும் வாய்ப்பு காணப்பட்ட போதும் அதனை அவர் சிறந்த முறையில் நிறைவு செய்யவில்லை.

போட்டியின் 85ஆவது நிமிடத்தில் மற்றுமொரு கோலினைப் பெற்றுக்கொண்டது ராணுவப்படை அணி. மதுஷான் டி சில்வா உள்ளனுப்பிய பந்து புளு ஸ்டார் வீரர் சிவன்கவினால் கோலுக்குள் செலுத்தப்பட அது ஒவ்ன் கோலாக மாறியது.

போட்டியின் 90ஆவது நிமிடத்தில் இஸ்ஸதீன் தனது ஹட்ரிக்கினை நிறைவு செய்தார். அவரைத் தொடர்ந்து அடுத்த நிமிடத்தில் ஷன்ன புளு ஸ்டார் அணிக்கான 3ஆவது கோலினை பெற்றுக் கொடுத்தார்.

இறுதியில் முதல் பாதியின் 4 கோல்கள் மற்றும் இரண்டாவது பாதியின் 3 கோல்களுடன் மேலதிக நான்கு கோல்களினால் ராணுவப்படை அணி வெற்றியை சுவைத்தது.

முழு நேரம்: ராணுவப்படை விளையாட்டுக் கழகம் 07 – 03 புளு ஸ்டார் விளையாட்டுக் கழகம்

கோல் பெற்றவர்கள்

ராணுவப்படை விளையாட்டுக் கழகம் – மொஹமட் இஸ்ஸதீன் 05′ 09′ 90′, சஜித்
குமார 21′ 23′, மதுஷான் டி சில்வா 62′, ஷிவங்க (ஓவ்ன் கோல்) 85′
புளு ஸ்டார் விளையாட்டுக் கழகம் – இடோவோ ஹமீட் 32′, மொஹமட் நஜீப் 48′, ஷன்ன 91′

மஞ்சள் அட்டை

ராணுவப்படை விளையாட்டுக் கழகம் பண்டார வரகாகொட, ரொஷான் அப்புஹாமி, கீர்த்தி குமார

புளு ஸ்டார் விளையாட்டுக் கழகம் பாஹிர் அலி

 ThePapare.com இன் ஆட்ட நாயகன் – மதுஷான் டி சில்வா (ராணுவப்படை விளையாட்டுக் கழகம்)