DCL16 – ரினௌவ்ன், ப்ளூ ஸ்டார், க்ரிஸ்டல் பலஸ் , நேவி அணிகள் வெற்றி

331
DCL 2016 Week 1 Round Up

டயலொக் நிறுவனத்தின் அனுசரணையுடன் பதினோராவது முறையாக இவ்வருடத்திற்கான சம்பியன்ஸ் லீக் 2016 போட்டித்தொடர் கடந்த வெள்ளிக்கிழமை ஜூன் 24ம் திகதி ரேஸ் கோர்ஸ் சர்வதேச மைதானத்தில் ஆரம்பமானது.

ரினௌவ்ன் விளையாட்டுக் கழகம் 2-1 சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகம்

பலம் பொருந்திய இரு அணிகளும் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் சந்தித்துக் கொண்டன. போட்டியின் ஆரம்பத்தில் சோண்டர்ஸ் அணி சிறப்பாக விளையாடியது. அதன் பலனாக 41ஆவது நிமிடத்தில் சுந்தர்ராஜ் நிரேஷ் கோலொன்றைப் போட்டார். எனினும் அனாவசிய முறையில் சட்டையைக் கழற்றி கொண்டாடியதற்காக அவருக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது.

இரண்டாவது பாதியில் பெனால்டிப் பகுதிக்குள் வைத்து ‘டைவ்’ செய்ததற்காக இரண்டாவது மஞ்சள் அட்டை வழங்கப்பட்டு  சுந்தர்ராஜ் நிரேஷ் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பின் சுதாரித்து விளையாடிய ரினௌவ்ன் விளையாட்டுக்கு கழகம் 58ஆவது நிமிடத்தில் ஜொப் மைக்கேல் மூலமாகவும் மொஹமட் பசால் மூலமாகவும் கோல்களைப் போட்டு வெற்றிபெற்றது.

சிறப்பாட்டாக காரர்– சனோஜ் சமீர (சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகம்)


திஹாரிய விளையாட்டுக் கழகம் 1-1 ஜாவா லேன் விளையாட்டுக் கழகம்

சமபலம் பொருந்திய இரு அணிகளும் களனி விளையாட்டு மைதானத்தில் மோதிக் கொண்டன. ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் கோல் போடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும் தடுப்பாட்டக்காரர்கள் தத்தமது அணிகளுக்காகச் சிறப்பாக செயற்பட்டதால் முதல் பாதியில் இரு அணிகளாலும் கோலொன்றைப் போட்டுக் கொள்ள முடியவில்லை.

இரண்டாவது பாதி ஆட்டத்தின் ஆரம்ப நிமிடங்களில் ஜாவா லேன் விளையாட்டுக் கழக வீரர் மொஹமட் அலீம் “ப்ரீ கிக்” முறையில் கோலொன்றைப் போட்டார். அதன் பின்பு சுதாரித்து விளையாடிய திஹாரிய விளையாட்டுக் கழகம் கோல் போடும் முயற்சிகளில் ஈடுபட்டது. முயற்சியின் பலனாக 91ஆவது நிமிடத்தில் பெரேரா கோலொன்றைப் போட போட்டி சமநிலையில் முடிவுற்றது.

சிறப்பாட்டக்காரர்- மதுவாபுருச்சி (திஹாரிய விளையாட்டுக் கழகம்)


நேவி விளையாட்டுக் கழகம் 3-0 சுபர் சன் விளையாட்டுக் கழகம்

இரு அணிகளும் FA கிண்ணத்தில் சோபிக்கத் தவறியமையால் சிறப்பான ஆரம்பத்தைப் பெறும் நோக்கில் மோதின. 3ஆவது நிமிடத்திலேயே நேவி விளையாட்டுக் கழகம் சார்பாக சதுரங்க சஞ்சீவ கோலொன்றைப் போட்டு அசத்தினார். தொடர்ந்து 24வது நிமிடத்தில் நிர்மல விஜயதுங்க நேவி விளையாட்டுக் கழகத்துக்காக இரண்டாவது கோலைப் போட்டார்.

இரண்டாவது பாதியில் சுபர் சன் விளையாட்டுக் கழகம் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டினாலும் அவர்களால் கோல் ஒன்றினைப் போட முடியவில்லை. போட்டியின் இறுதி நிமிடங்களில் அனுபவ வீரர் தம்மிக ரத்நாயக கோலொன்றைப் போட்டு நேவி விளையாட்டுக் கழகத்தின் வெற்றியை உறுதிசெய்தார்.

சிறப்பாட்டக்காரர்- சதுரங்க சஞ்சீவ (நேவி விளையாட்டுக் கழகம்)


நியூ யங்ஸ் விளையாட்டுக் கழகம் 3-1 பொலிஸ் விளையாட்டுக் கழகம்

பொலிஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ஆரம்பம் முதலே நியூ யங்ஸ் விளையாட்டுக் கழகம் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டியது. 8ஆவது நிமிடத்தில் ஹசித ப்ரியங்கர கோலொன்றைப் போட்டு நியூ யங்ஸ் விளையாட்டுக் கழகத்தை முன்னிலைப்படுத்தினார்.32ஆவது நிமிடத்தில் அங்காமா ஜோர்ஜ் மற்றுமொரு கோலைப் போட்டு முன்னிலையை இரட்டிப்பாக்கினார்.

ஹசித ப்ரியங்கர தொடர்ந்து சிறப்பாக விளையாடி தனது இரண்டாவது கோலைப் போட்டுக் கொண்டார். திறமை வீரர்களைக் கொண்ட பொலிஸ் விளையாட்டுக் கழகத்தால் நியூ யங்ஸ் வீரர்களை கட்டுப்படுத்த முடியாமற்போனது. எனினும் சம்பத் பதிரன பொலிஸ் விளையாட்டுக் கழகம் சார்பாக ஆறுதல் கோலொன்றைப் போட்டார்.

சிறப்பாட்டக்காரர்- ஹசித ப்ரியங்கர (நியூ யங்ஸ் விளையாட்டுக் கழகம்)


ப்ளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் 1-0 கொழும்பு கால்பந்தாட்டக் கழகம்

கழுத்தறை வேர்னன் பெர்னாண்டோ  மைதானத்தில் பலம் பொருந்திய இரு அணிகளும் மோதிக்கொண்டன. ஆரம்பம் முதல் இரு அணிகளும் சளைக்காமல் விளையாடினாலும் இரு அணி வீரர்களாலும் கோல் போடும் வாய்ப்புகளை ஏற்படுத்த முடியாமற்போனது.

இரண்டாவது பாதியில் கொழும்பு கால்பந்தாட்டக் கழகம் பல வாய்ப்புகளை உண்டு பண்ணினாலும் ப்ளூ ஸ்டார் விளையாட்டுக் கழக தடுப்பாட்டக்காரர்கள் அவற்றை லாவகமாகத் தடுத்தனர். போட்டியின் 94ஆவது நிமிடத்தில் கொழும்பு கால்பந்தாட்டக் கழகத்துக்கு எதிராக பெனால்டி வழங்கப்பட அதனை இடுவோ ஹமீட் கோலாக்கி ப்ளூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் வெற்றியை உறுதிசெய்தார்.

சிறப்பாட்டக்காரர்- நசிரு ஒபாயெமி


க்ரிஸ்டல் பலஸ் விளையாட்டுக் கழகம்  4-1 மாத்தறை சிட்டி விளையாட்டுக் கழகம்

இரு அணிகளும் FA கிண்ணத்தில் சந்தித்தபோது அப்போட்டியில் மாத்தறை சிட்டி விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 7ஆவது நிமிடத்தில் க்ரிஸ்டல் பலஸ் விளையாட்டுக் கழக வீரர் ஐசாக் கோலொன்றைப் போட்டார். தொடர்ந்து 17ஆவது நிமிடத்தில் காலிட் அஸ்மில் கோலொன்றை க்ரிஸ்டல் பலஸ் சார்பாகப் போட்டார்.

இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் கிறிஸ்டோபர் எரஸ்ட்ஸ் க்ரிஸ்டல் பலஸ் விளையாட்டுக் கழகத்தின் மூன்றாவது கோலைப் போட்டார். மேலும் சிறப்பாக விளையாடிய கிறிஸ்டோபர் எரஸ்ட்ஸ்க 81ஆவது நிமிடத்தில் க்ரிஸ்டல் பலஸ் விளையாட்டுக் கழகத்திற்காக தனது இரண்டாவது கோலைப் போட்டார். மாத்தறை சிட்டி இறுதி நிமிடங்களில் ஆறுதல் கோலொன்றைப் போட்டது.

சிறப்பாட்டக்காரர்- காலிட் அஸ்மில் (க்ரிஸ்டல் பலஸ் விளையாட்டுக் கழகம்)


சொலிட் விளையாட்டுக் கழகம் 2-0 நீர்கொழும்பு யூத் விளையாட்டுக் கழகம்

களனி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் ஆரம்பத்தில் ஒன்றுக்கொன்று சளைக்காமல் விளையாடியது. முதலாம் பாதியின் இறுதி வரை இரு அணிகளாலும் கோலொன்றைப் போட முடியவில்லை. எனினும் முதலாவது பாதி இறுதி நிமிடத்தில் சொலிட் விளையாட்டுக் கழகம் சார்பாக எடிசன் பிகுராடோ கோலொன்றைப் போட்டார்.

இரண்டாவது பாதியில் நீர்கொழும்பு யூத் விளையாட்டுக் கழகம் சமநிலை கோலைப்  போட முயற்சித்தாலும் சொலிட் விளையாட்டுக் கழக வீரர் அபுமர் 59ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் போட்டார். தொடர்ந்து இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியாமற் போக போட்டியை சொலிட் விளையாட்டுக்குக் கழகம் கைப்பற்றியது.

சிறப்பாட்டக்காரர்– எடிசன் பிகுராடோ (சொலிட் விளையாட்டுக் கழகம்)

2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு 18 அணிகள் பங்குபெறும் இப்போட்டித்தொடர் 100 போட்டிகளின் மூலம் தீர்மானிக்கப்படும். இரு குழுக்களிலிருந்தும் தலா 4 அணிகள் ‘சுப்பர்8’ சுற்றுக்குத் தெரிவு செய்யப்படும். 100 போட்டிகளின் இறுதியில் தரப்படுத்தலில் முன்னிலையில் இருக்கும் அணி இவ் ஆண்டிற்கான சம்பியன்ஸ் லீக் 2016 போட்டித்தொடரின் வெற்றியாளர்களாக வாகை சூடப்படுவர். போட்டிகள் பெரும்பாலும் வார இறுதி நாட்களில் நடைபெறும்.

ThePapare.com Basketball