கோஹ்லியின் சாதனையை சமன் செய்த டேவிட் வோர்னர்

142
©AP

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டேவிட் வோர்னர் சதம் அடித்ததன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிவிரைவாக 16 சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து விராத் கோஹ்லியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

டேவிட் வோர்னரின் அபார துடுப்பாட்டத்தோடு அவுஸ்திரேலிய அணி வெற்றி

மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற கிரிக்கெட் ………..

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற (26ஆவது போட்டி) லீக் போட்டியில் பங்களாதேஷ் மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி டேவிட் வோர்னரின் அபார சதத்தின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 381 ஓட்டங்களை எடுத்தது.

இந்தப் போட்டியில் 110 பந்துகளில் சதமடித்த வோர்னர், உஸ்மான் கவாஜாவுடன் இன்னும் அதிரடியாக ஆடி பௌண்டரி, சிக்ஸர்களாக விளாசியிருந்ததுடன், 139 பந்துகளில் 150 ஓட்டங்களை எடுத்தார்.

அவர் 200 ஓட்டங்கள் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் துரதிஷ்டவசமாக சௌம்ய சர்க்கரின் பந்தில் பிடிகொடுத்து 166 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினார். இதில் 14 பௌண்டரிகள் 5 சிக்ஸர்களும் அடங்கும்.

இந்த நிலையில், குறித்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஒருநாள் அரங்கில் தனது 16ஆவது சதத்தை வோர்னர் பூர்த்தி செய்தார். இவர் 110 இன்னிங்ஸ்களில் 16 சதங்கள் அடித்ததன் மூலம் அதிவிரைவாக 16 சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடம்பிடித்து விராத் கோஹ்லியின் சாதனையை (110 இன்னிங்ஸ்களில் 16 சதங்கள்) சமன் செய்துள்ளார்.

எனினும், 94 இன்னிங்ஸ்களில் 16 சதங்கள் அடித்து இந்தப் பட்டியலில் தென்னாபிரிக்காவின் ஹசிம் அம்லா முதலிடத்தில் உள்ளார்.

இரண்டு முறை 150 ஓட்டங்கள்

உலகக் கிண்ணப் போட்டிகளில் இரண்டு முறை 150-க்கும் மேல் ஓட்டங்களைக் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை டேவிட் வோர்னர் பதிவு செய்தார். முன்னதாக, இவர் 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 178 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.  

அத்துடன், ஒருநாள் போட்டிகளில் 6ஆவது முறையாக 150 ஓட்டங்களைக் கடந்துள்ளார். இது ஒருநாள் போட்டிகளில் இரண்டாவது அதிகபட்சமாகும். ஒருநாள் போட்டிகளில் 7 தடவைகள் 150 ஓட்டங்களைக் கடந்த இந்திய வீரர் ரோஹித் சர்மா இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

இதில், 5 முறை 150 ஓட்டங்களை கடந்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் இருவரும் 3ஆவது இடத்தில் உள்ளனர்.

மாலிங்க இருமுறை நாடு திரும்பியமை இலங்கை அணியை பாதிக்குமா?

இங்கிலாந்து சென்று உலகக் கிண்ணத் ………..

அவுஸ்திரேலிய அணிக்காக அதிக சதம்

அவுஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் அரங்கில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் வோர்னர் 3ஆவது இடத்தைப் அடெம் கில்கிறிஸ்ட்டுடன் பகிர்ந்து கொண்டார். இருவரும் தலா 16 சதங்களைக் குவித்துள்ளனர். முதலிரண்டு இடங்களில் முறையே ரிக்கி பொண்டிங் (29), மார்க் வோஹ் (18) ஆகியோர் இடம்பெற்றுள்ளளர்.

இணைப்பாட்ட சாதனை

இந்தப் போட்டியில் முதல் விக்கெட்டுக்காக வோர்னர்பின்ச் ஜோடி 121 ஓட்டங்களையும், இரண்டாவது விக்கெட்டுக்காக வோர்னர்கவாஜா ஜோடி 192 ஓட்டங்களையும் இணைப்பாட்டமாகப் பெற்றுக்கொண்டனர். உலகக் கிண்ண அரங்கில் ஒரே போட்டியில் முதல் மற்றும் இரண்டாவது விக்கெட்டுக்காக 100 ஓட்டங்களுக்கு அதிகமாக இணைப்பாட்டங்களை பெற்றுக்கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

ஒட்டுமொத்தத்தில் உலகக் கிண்ணத்தில் இந்த நிகழ்வு 4ஆவது முறையாக இடம்பெற்றுள்ளது. இதற்குமுன், இலங்கை இரண்டு முறை (2015 பங்களாதேஷ், 2015 இங்கிலாந்து), இந்தியா (2011 தென்னாபிரிக்கா) ஒரு முறை இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தன.

ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் தொடர் இந்தியாவில் நடைபெறாது – பி.சி.சி.ஐ

இந்தியாவில் ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் ………

பறிபோன இரட்டைச் சதம்

இந்தப் போட்டியில் 166 ஓட்டங்களைக் குவித்த வோர்னர், 34 ஓட்டங்களினால் இரட்டைச் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். இதுவரை நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடர்களில் இரண்டு முறை மட்டுமே இரட்டைச் சதம் அடிக்கப்பட்டுள்ளது. 2015 உலகக் கிண்ணத் தொடரில் கிறிஸ் கெயில், மார்டின் கப்டில் ஆகிய இருவரும் இரட்டைச் சதம் அடித்து இருந்தனர்.

அதிக ஓட்டங்கள்

வோர்னர் இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் ஓராண்டு தடைக்குப் பின் பங்கேற்று விளையாடி வருகிறார். தடையில் இருந்து வந்தாலும் அதே போர்மில் தான் இருக்கிறார் வோர்னர். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 89 ஓட்டங்கள், பாகிஸ்தான் அணிக்கு எதிரான 107 ஓட்டங்கள், இந்திய அணிக்கு எதிராக 56 ஓட்டங்கள் என 447 ஓட்டங்களைக் குவித்து அதிக ஓட்டங்களைக் குவித்த வீரரகளில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார்.

அத்தடன், உலகக் கிண்ண வரலாற்றில் அவுஸ்திரேலிய அணி தனது இரண்டாவது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையை (381) பதிவு செய்தது. இதற்குமுன் 2015இல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பேர்த்தில் நடைபெற்ற போட்டியில் 417 ஓட்டங்களை அவ்வணி குவித்தது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<