குத்துச்சண்டையில் இலங்கை வீரர்களுக்கு பதக்கங்கள் பெறும் வாய்ப்பு

158

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் 21ஆவது பொதுநலவாய விளையாட்டு விழா 6ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது. இதில் இலங்கை அணி இதுவரை ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களுடன் மூன்று பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியில் 21ஆவது இடத்தில் உள்ளது. இந்த மூன்று பதக்கங்களும் பளுதூக்கல் போட்டியிலேயே பெறப்பட்டன.

பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு தேசிய சாதனையுடன் பதக்கம்

பொதுநலவாய விளையாட்டு விழாவின் முதல் நாளான…

இதேவளை, பளுதூக்கல் போட்டிகளைத் தொடர்ந்து இலங்கை அணிக்கு இன்னும் 2 பதக்கங்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிட்டவுள்ளது. இதில் பெண்களுக்கான 45-48 கிலோ கிராம் எடைப் பிரிவில் அனூஷா கொடித்துவக்குவும், ஆண்களுக்கான 46-49 கிலோ கிராம் எடைப் பிரிவில் திவங்க ரணசிங்கவும் அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதிபெற்றுள்ளமையினால் இலங்கைக்கு தங்கம், வெள்ளி அல்லது வெண்கலப் பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

அதிலும் குறிப்பாக, பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் முதற்தடவையாக பெண்கள் குத்துச்சண்டைப் போட்டிப் பிரிவில் பதக்கமொன்றை அனூஷா தில்ருக்ஷி கொடித்துவக்கு பெற்றுக்கொள்ளவுள்ளார்.

குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கை அணியின் ஒரேயொரு அனுபவமிக்க வீராங்கனையும், தேசிய சம்பியனனுமாகிய 39 வயதுடைய அனூஷா, நேற்று(08) நடைபெற்ற பெண்களுக்கான 45-48 கிலோ கிராம் எடைப் பிரிவில் முதலாவது காலிறுதிப் போட்டியில் கைமன் தீவு வீராங்கனை பிரண்டி பார்ஸை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் அபாரமாக ஆடிய அனூஷா எதிரணி வீராங்கனைக்கு சுதாகரித்துக்கொள்ளவே அவகாசம் கொடுக்காமல் தனது தாக்குதலை தொடர்ந்தார்.

இதனால் நிலைகுலைந்துபோன கைமன் தீவு வீராங்கனை 2 தடவைகள் கீழே விழுந்தார். இறுதியில் தொழில்நுட்ப ரீதியாக அனூஷா வெற்றிபெற்றதாக நடுவர்கள் அறிவிக்க, கைமன் தீவு வீராங்கனை  போட்டியில் தோற்று வெளியேறினார்.

இதன்படி, பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் முதல்தடவையாக இலங்கை வீராங்கனையொருவர் பெண்களுக்கான குத்துச்சண்டையில் அரையிறுதி வாய்ப்பை பெற்றுக்கொண்டதுடன், பதக்கமொன்றைப் பெற்றுக்கொள்ளும் முதல் வீராங்கனையாகவும் அவர் வரலாற்றில் இடம்பெறவுள்ளார்.

பொதுநலவாய விளையாட்டில் இலங்கைக்கு முதல் வெள்ளிப் பதக்கம்

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும்..

இதன்படி, அனூஷா பங்கேற்கவுள்ள அரையிறுதிப் போட்டி இலங்கை நேரப்படி நாளை(11) காலை 7.32 மணிக்கு நடைபெறவுள்ளதுடன், இதில் 5 முறை உலக சம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் மேரி கோம்மை அவர் எதிர்த்தாடவுள்ளார்.

திவங்க அரையிறுதிக்குத் தகுதி

ஆண்களுக்கான குத்துச்சண்டைப் போட்டியில் 46-49 கிலோ கிராம் எடைப் பிரிவிற்கான முதலாவது காலிறுதிப் போட்டியில் வனுஆட்டு வீரர் பெர்ரி நம்ரியை 5-0 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்திய திவங்க ரணசிங்க அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுதடன், இலங்கைக்கான மற்றுமொரு பதக்கத்தை உறுதிப்படுத்தினார்.

இந்தப் போட்டியில் அபாரமாக ஆடிய திவங்க எதிரணி வீரருக்கு சுதாகரித்துக்கொள்ளவே அவகாசம் கொடுக்காமல் தனது தாக்குதலை தொடர்ந்தார்.

முன்னதாக 16 அணிகள் பங்கேற்ற தகுதிச்சுற்றில் போட்டியிட்ட திவங்க, தென்னாபிரிக்க வீரர் சியாபுலேலாவை 4-0 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி காலிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றிருந்தார்.

இதன்படி, எதிர்வரும் 13ஆம் திகதி காலை (இலங்கை நேரப்படி 8.32 மணிக்கு) நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீரர் கலால் யபாயை, திவங்க ரணசிங்க எதிர்த்தாடவுள்ளார்.

காலிறுதியில் மேலும் இருவர்

ஆண்களுக்கான 52 கிலோகிராம் எடைப்பிரிவில் நேற்று போட்டியிட்ட இஷான் பண்டார, காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். நவுரு தீவு வீரரை 3-2 என்ற சுற்றுக்களின் அடிப்படையில் வீழ்த்திய இஷான், காலிறுதிக்கு தகுதிபெற்றார். இதன்படி, நாளை(11) நடைபெறவுள்ள. காலிறுதியில் லேசோதா நாட்டு வீரர் தாபோ மொலோபியவை இஷான் எதிர்கொள்ளவுள்ளார்.

பளுதூக்கலில் இலங்கைக்கு மற்றுமொரு பதக்கம்

பொதுநலவாய விளையாட்டு விழாவின் முதல் நாளான..

இதேவேளை, ஆண்களுக்கான குத்துச்சண்டைப் போட்டியில் 64 கிலோ கிராம் எடைப் பிரிவிற்கான 16 அணிகள் பங்கேற்ற தகுதிச்சுற்றில் போட்டியில் நியூசிலாந்து வீரர் ரிச்சர்ட் ஹெட்லோவை 4-1 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்திய தினிது சப்ரமாது காலிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார்.

எனினும், இன்று(10) நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் கடந்த முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நமீபிய நாட்டு வீரர் ஜெனாஸை எதிர்கொண்ட தினிது, 5-0 என்ற அடிப்படையில் தோல்வியைத் தழுவினார்.

நீச்சலில் மெத்யூ தேசிய சாதனை

இலங்கை அணியின் நட்சத்திர நீச்சல் வீரரான மெத்யூ அபேசிங்க, 50 மீற்றர் சாதாரண நீச்சல் போட்டியின் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் வாய்பை நேற்று(09) தவறவிட்டார்.

எனினும், அரையிறுதிப் போட்டியில் கலந்துகொண்டு 22.84 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்த மெத்யூ, 8ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

எனினும், முன்னதாக நடைபெற்ற தகுதிகாண் சுற்றில் 22.65 செக்கன்களில் போட்டியை நீந்தி முடித்து தனது சொந்த தேசிய சாதனையை அவர் முறியடித்தார்.

இதேவேளை, ஆண்களுக்கான 100 மீற்றர் சாதாரண நீச்சல் போட்டியிலும் புதிய தேசிய சாதனை நிகழ்த்திய மெத்யூ அபேசிங்க, அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

விளையாட்டு வீரர்களின் திடீர் உயிரிழப்புகளுக்கு காரணம் என்ன?

விளையாட்டுகள் உலகளாவிய ரீதியில்..

எனினும், அரையிறுதியில் 49.43 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்த மெத்யூ, 4ஆவது இடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை தவறவிட்டார்.

இதேநேரம், 50 மீற்றர் சாதாரண நீச்சல் தகுதிகாண் சுற்றில் இலங்கை சார்பாக கலந்துகொண்ட கைல் அபேசிங்க மற்றும் சிரந்த டி சில்வா ஆகியோர் பிரகாசிக்கத் தவறிவிட்டனர்.

இந்நிலையில், ஆண்களுக்கான 200 மீற்றர் பின்நோக்கிய நீச்சலில் கலந்துகொண்ட அகலங்க பீரிஸ், போட்டியை 2.11.56 செக்கன்களில் நீந்தி 8ஆவது இடத்தையும், பெண்களுக்கான பின்நோக்கிய நீச்சலில் கலந்துகொண்ட வினோலி களுஆரச்சி, 31.02 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து கடைசி இடத்தையும் பெற்றுக்கொண்டு அடுத்து சுற்றில் விளையாடும் வாய்பபை இழந்தனர்.

மிஹிலியாவுக்குத் தோல்வி

பெண்களுக்கான ஸ்குவாஷில் பங்குபற்றிய இலங்கை அணியின் தேசிய வீராங்கனையான மிஹிலியா சத்சரனி, நேற்றுமுன்தினம்(08) நடைபெற்ற பெண்களுக்கான பிளேட் பிரிவு இறுதிப் போட்டியில் பார்படோஸ் வீராங்கனை மெஹான் பெஸ்டுடன் போட்டியிட்டு 3-1 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவினார். இதன்படி, 64 வீராங்கனைகள் பங்குபற்றிய ஸ்குவாஷ் போட்டியில் மிஹிலியாவுக்கு 18ஆவது இடம் கிடைத்தது.

எனினும், பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் ஸ்குவாஷ் போட்டிப் பிரிவில் இறுதிப் போட்டியொன்றுக்குத் தெரிவாகிய முதல் வீராங்கனையாகவும் அவர் வரலாற்றில் இடம்பிடித்தார்.