சம்பியன்ஸ் கிண்ண முதல் போட்டியில் இலங்கை அணி மெதிவ்சை இழக்கும் நிலை

2462

இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்திவ்ஸ் சம்பியன்ஸ் கிண்ணத்தில் தென்னாபிரிக்காவிற்கு எதிராக இடம்பெறும் முதலாவது போட்டியில் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அவரது கெண்டைக்கால் உபாதையில் ஏற்பட்டிருக்கும் சடுதியான மேலதிக விரிசல் ஒன்றின் காரணமாக, அவர் உடற்தகுதியினை இழந்துள்ளார். இதன் காரணமாகவே மெதிவ்ஸ் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

>> ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள் – ஒரு கண்ணோட்டம்

இத்தொடரிற்கு முன்னதாக உபாதையிலிருந்த மெதிவ்ஸ், நீண்ட காலத்திற்குப் பின்னர், இச்சம்பியன்ஸ் கிண்ணத்தில் இலங்கை அணியின் ஒரு நாள் குழாத்தினை மீண்டும் வழிநடாத்துவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. எனினும், மீண்டும் தசைகளில் அவர் அவஸ்தையினை உணர்ந்த காரணத்தினால் அது சாத்தியமாவது சந்தேகமாகியிருக்கின்றது.

தற்போது அணி முகாமைத்துவக் குழு மூலம் குறிப்பிட்ட காயம் ஏற்பட்டிருக்கும் பிரதேசத்தில் கதிர்ப்படங்கள் எடுக்கப்பட்டு மெதிவ்ஸை கண்காணிக்க கட்டளைகள் இடப்பட்டிருக்கின்றன.

கடந்த ஜனவரி மாதத்தில் தென்னாபிரிக்க அணியுடனான தொடரின்போது உபாதைக்கு உள்ளாகியிருந்த மெதிவ்ஸ், அதன் காரணமாக அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுடனான தொடர்களில் பங்கேற்கவில்லை. தொடர்ந்து உடற்தகுதியினை பெற்றுக்கொண்ட அவர், இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடர் மூலம் (டெல்லி டேர்டேவில்ஸ் அணிக்காக) கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் விளையாட ஆரம்பித்திருந்தார்.

[rev_slider ct17-dsccricket]

தொடர்ந்து இலங்கை குழாத்திலும் விளையாட ஆரம்பித்திருந்த மெதிவ்ஸ், சம்பியன்ஸ் கிண்ணத்தில் அவுஸ்திரேலிய அணியுடனான பயிற்சிப் போட்டியில் 95 ஓட்டங்களினை விளாசி போராடும் வகையிலான ஆட்டம் ஒன்றினை வெளிப்படுத்தியிருந்தார். எனினும் பின்னர் இடம்பெற்ற நியூசிலாந்து அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் மெதிவ்ஸ் விளையாடியிருக்கவில்லை.

மெதிவ்சிற்கு நிபுணர்களின் பூரண கவனிப்புக்களுடன் தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வருவதால் அவர் சில நாட்களில் பூரண உடற்தகுதியினை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறானதொரு நிலையினாலேயே அவர் தென்னாபிரிக்க அணியுடனான போட்டியில் விளையாடுவதில் சந்தேகம் திகழ்கின்றது. தென்னாபிரிக்க அணியுடனான போட்டியில் மெதிவ்ஸ் விளாயாடாத பட்சத்தில் இலங்கை அணியை உபுல் தரங்க தலைமை தாங்கி செயற்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.