தென்னாபிரிக்க T20 செலஞ்ச் தொடரின் சம்பியனான லயன்ஸ் அணி

130
CRICKET SOUTH AFRICA TWITTER

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை (CSA) அதனது உள்ளூர் அணிகளுக்கு இடையில் ஏற்பாடு செய்த T20 சவால் கிண்ணத் (செலஞ்ச்) தொடரின் இறுதிப் போட்டியில் வோரியர்ஸ் அணியினை 11 ஓட்டங்களால் தோற்கடித்திருக்கும் லயன்ஸ் அணி சம்பியன் பட்டம் வென்றிருக்கின்றது.   

அதோடு, இவ்வெற்றியுடன் லயன்ஸ் அணி, மூன்றாவது தடவையாக T20 செலஞ்ச் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற அணியாகவும் மாறுகின்றது.  

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்கு கிடைத்த முதல் வெற்றி

இலங்கை அணி சர்வதேச கிரிக்கெட் அரங்கிற்கு கத்துக்குட்டியாகவே ……….

தென்னாபிரிக்காவின் ஆறு உள்ளூர் அணிகள் பங்குபெறும் இந்த T20 தொடர் கடந்த மாதம் 16ஆவது தடவையாக ஆரம்பமாகியது.  

இந்த தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இரண்டும் கடந்த வாரம் நடைபெற்றன. அரையிறுதிப் போட்டிகளில் டொல்பின்ஸ் அணியினை தோற்கடித்து லயன்ஸ் அணியும், கேப் கோப்ராஸ் அணியினை தோற்கடித்து வோரியர்ஸ் அணியும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகின.

தொடர்ந்து ஜொஹன்னஸ்பேர்க் நகரில் இறுதிப் போட்டி நேற்று (05) ஆரம்பமானது. இறுதிப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற வோரியர்ஸ் அணியின் தலைவர்  JJ. ஸ்மட்ஸ் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை லயன்ஸ் அணிக்காக வழங்கினார்.

இதன்படி முதலில் துடுப்பாடிய லயன்ஸ் அணிக்கு அதன் அணித்தலைவர் டெம்பா பவுமா மற்றும் ரஸ்ஸி வன் டர் டஸ்ஸேன் ஆகியோர் தமது அதிரடி துடுப்பாட்டம் மூலம் உதவினர்.

இதில் தென்னாபிரிக்க அணிக்கு நம்பிக்கை தரும் இளம் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான டெம்பா பவுமா, T20 போட்டிகளில் தனது கன்னிச் சதத்துடன் 63 பந்துகளில் 11 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 104 ஓட்டங்களை குவித்தார்.

Video – இலங்கைக்கு அதீத கௌரவத்தை பெற்றுத்தந்துள்ள குமார் சங்கக்கார – Cricket Kalam 12

மறுமுனையில் ரஸ்ஸி வன் டர் டஸ்ஸேன் 5 சிக்ஸர்கள் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக வெறும் 43 பந்துகளில் 71 ஓட்டங்களை குவித்துக் கொண்டார்.

இவர்களின் துடுப்பாட்ட உதவியோடு லயன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 203 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

வோரியர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பாக என்ட்ரூ பிர்ச் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 204 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய வோரியர்ஸ் அணி, 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 192 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியினை தழுவியது.

வோரியர்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் அதன் தலைவரான JJ. ஸ்மட்ஸ் சதம் ஒன்று கடந்து தனது தரப்பு வெற்றிக்காக போராடிய போதிலும் அது வீணாகியிருந்தது. ஸ்மட்ஸ் 7 சிக்ஸர்கள் மற்றும் 11 பெளண்டரிகள் அடங்கலாக வெறும் 60 பந்துகளில் 121 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

MCC இன் தலைவராக குமார் சங்கக்கார

இதேநேரம், லயன்ஸ் அணியின் வெற்றியினை ஜோர்ன் பொர்ட்டூன் 4 விக்கெட்டுகளை சாய்த்தும், மிக்கேல் ப்ரெடோரியஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தும் உறுதி செய்ய, லிசார்ட் வில்லியம்ஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி தனது பங்களிப்பினை வழங்கியிருந்தார்.

போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக லயன்ஸ் அணியின் டெம்பா பவுமா தெரிவாக, லயன்ஸ் அணியினை ஏனைய வீரரான ஜோர்ன் பொர்ட்டூன் சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதினை வென்றார்.

போட்டியின் சுருக்கம்

லயன்ஸ் – 203/4 (20) டெம்பா பவுமா 104(63), ரஸ்ஸி வன் டர் டஸ்ஸேன் 73(41), என்ட்ரூ பிர்ச் 36/3(4)

வோரியர்ஸ் – 192 (19.2) JJ. ஸ்மட்ஸ் 121(60), ஒன்கே ன்யாக்கு 27(20), ஜோர்ன் பொர்ட்டூன் 27/4(4), மிகெல் ப்ரெடோரியஸ் 35/3(3.2), லிசார்ட் வில்லியம்ஸ் 49/2(4)

முடிவு – லயன்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க  <<