கிரிஸ்டல் பலஸ் மற்றும் சொலிட் விளையாட்டுக் கழகங்கள் மோதிய டயலொக் சம்பியன் கிண்ணத்திற்கான சுற்றுப்போட்டியானது நேற்று (30) நடைபெற்றது. தனது சொந்த மண்ணில் சொலிட் கழகத்தை எதிர்கொண்ட கிரிஸ்டல் பலஸ் அணியால், சொலிட் கழகத்தை எதிர்த்து ஓரு கோலும் பெற முடியாத நிலையில் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது.

கம்பளை நகரைச் சேர்ந்த கிரிஸ்டல் பலஸ் கால்பந்துக் கழகமானது அநுராதபுர நகரத்தை சேர்ந்த சொலிட் விளையாட்டுக் கழகத்தை தனது சொந்த ஊரான கம்பளை நகரின் வீகுலுவத்த மைதானத்தில் எதிர்கொண்டது. கிரிஸ்டல் பலஸ் மற்றும் சொலிட் கால்பந்து கழகங்கள் மோதிக் கொண்ட போட்டியே கம்பளை நகரில் நடந்த முதலாவது டயலொக் சம்பியன் கிண்ணத்திற்கான கால்பந்து சுற்றுப்போட்டியாகும். மேலும் கிரிஸ்டல் பலஸ் அணியானது இதற்கு முன்னர் நடைபெற்ற போட்டியில் நிவ் யங்ஸ் விளையாட்டு கழகத்திடம் 1-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. அதேவேளை சொலிட் அணி ப்ளு ஸ்டார் அணியை எதிர்கொண்டு 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.  

போட்டியின் ஆரம்பம் முதல் இறுதி நிமிடம் வரை இரு அணிகளும் தமது அணிக்கான கோல்களை பெறுவதற்காக, எதிரணியின் எல்லைக்குள் முன்னேறிய வண்ணமே இருந்தனர்.

போட்டியின் 6 ஆவது நிமிடத்தில் கிரிஸ்டல் பலஸ் அணி கோலைப் பெறுவதற்கான முதல் வாய்ப்பை பெற்றது. முஹமத் றியாஸ் மூலம் பெனால்டி எல்லைக்குள் உள்ளனுப்பப்பட்ட பந்தைப் பெற்ற அய்ஸக் அபா, தனது தலையால் முட்டி பந்தை கோலாக்க முயன்றார். எனினும் பந்தானது கோல் கம்பங்களிற்கு வெளியால் சென்றது.

அதனை தொடர்ந்து போட்டியின் 7 ஆவது நிமிடத்தில் சொலிட் அணி கோலைப் பெறுவதற்கான முதல் முயற்சியை கஸ்தீம் ஓஜோ மூலம் மேற்கொண்டது. எனினும் அவர் பெனால்டி எல்லையில் மெற்கொண்ட முயற்சியை கிரிஸ்டல் பலஸ் அணியின் கோல் காப்பாளர் இலகுவாக தடுத்தார்.

ரினௌன் – ஜாவா லேன் மோதல் சமநிலை : கொழும்பு அணிக்கு அதிர்ச்சி கொடுத்த சுபர் சன்

அத்துடன் அய்ஸக் அபா மூலம் போட்டியின் 9 ஆவது நிமிடத்தில் மத்தியகளத்தின் இடதுபக்கத்திலிருந்து உள்ளனுப்பப்பட்ட பந்தை முஹமத் றியாஸ் பெற்று கோலை நோக்கி உதைந்த போதும், அதனை கோலாக்கும் முயற்சியில் தோல்வியுற்றார்.

அதனைத் தொடர்ந்து சொலிட் அணியின் முன்கள வீரர்களால் கிரிஸ்டல் பலஸ் அணிக்கு சவால் விடுக்கப்பட்டது. மத்தியகளத்திலிருந்து ஞானரூபன் வினோத் மூலம் அந்தோனி ரமேஷை நோக்கி தரை வழியாக உள்ளனுப்பப்பட்ட பந்தை, கிரிஸ்டல் பலஸ் அணியின் பின்கள வீரரான முஹமத் ஸிமாக் தடுக்க முயன்றபோதும் பந்து அவரை தாண்டி சென்றது. எதிரணியின் பின்கள வீரரை தாண்டிச் சென்ற பந்தை பெற்ற அந்தோனி ரமேஷ், எதிரணியின் கோல் காப்பாளரையும் தாண்டிச் சென்றபோதும் அவரால் பந்தை கோலிற்குள் செலுத்த முடியாமல் போனது.

மீண்டும் முயற்சி செய்த கஸ்தீம் ஓஜோ கிரிஸ்டல் பலஸ் அணியின் மத்தியகளத்திலிருந்து கோலை நோக்கி உதைந்தார். உதையப்பட்ட பந்து கோல் கம்பங்களில் பட்டு பின்கள வீரர்களால் பெனால்டி எல்லையிலிருந்து வெளியயேற்றப்பட்டது. கஸ்தீம் ஓஜோ எடுத்த முயற்சியை சொலிட் அணியின் பயிற்றுவிப்பாளர் உட்பட மாற்று வீரர்களும் கைதட்டி வரவேற்றனர்.

போட்டியின் 25 ஆவது நிமிடத்தில் முதல் ப்ரீ கிக் வாய்ப்பை சொலிட் அணி மத்தியகளத்தின் பெனால்டி எல்லைக்கு அருகில் பெற்றது. ப்ரீ கிக் வாய்ப்பை பெற்ற ஜீதேஸீபன் சிறப்பாக கிரிஸ்டல் பலஸ் அணியின் தடுப்புச் சுவரை தாண்டி கோலை நோக்கி உதைந்த போதும், கோல் காப்பாளரை தாண்டி பந்தை கோலிற்குள் செலுத்த முடியவில்லை.

எதிரணி அடுத்தடுத்தான வாய்ப்புக்களை பெற்று வந்த வேளை போட்டியின் 35 ஆவது நிமிடத்தில் கிரிஸ்டல் பலஸ் அணியின் முன்கள வீரரான அய்ஸக் அபாவால் சிறப்பான ஓரு முயற்சி எடுக்கப்பட்டது. ரவ்ஸான் மூலம் வழங்கப்பட்ட பந்தை பெனால்டி எல்லகைகுள் பெற்ற அய்ஸக் அபா, சொலிட் அணியின் பின்கள வீரர்களை தாண்டி கோலை நோக்கி உதைந்தார். உதையப்பட்ட பந்து வலதுபக்க மூலையால் கோலினுள் செல்லும் போது கோல் காப்பாளரால் பந்து தடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 5 நிமிடத்தில் சொலிட் அணியின் அந்தோனி ரமேஷ் மூலம் பெனால்டி எல்லையின் இடதுபக்க மூலையிலிருந்து உதையப்பட்ட பந்தானது கோலிற்கு அருகாமையால் சென்றது.

முதல் பாதி: கிரிஸ்டல் பலஸ் கால்பந்துக் கழகம் 0 – 0 சொலிட் விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதி ஆரம்பித்து 6 நிமிடங்கள் கடந்ததன் பின் கிடைக்கப்பெற்ற கோணர் வாய்ப்பில் பெற்ற பந்தை, ஜீன் பிரான்ஸிஸ்கோ தனது தலையால் முட்டி கோலாக்க முயன்றார். எனினும் பந்தானது கம்பங்களிற்கு வெளியால் சென்றது.

52 ஆவது நிமிடத்தில் கோணர் மூலம் சொலிட் அணிக்கு சிறந்த வாய்ப்பொன்று கிட்டியது. எடிசன் உள்ளனுப்பிய பந்தை எந்த வித எதிரணி வீரரின் தடையுமின்றி பெற்ற ஸஜீவன், பந்தை வேகமாக கோலை நோக்கி உதைந்தார். எனினும் அம்முயற்சியில் எதிரணியின் கோல் காப்பாளரிடம் தோல்வியுற்றார்.

நீண்ட நேர முயற்சியின் பின்னர் போட்டியின் 70 ஆவது நிமிடத்தில் ரவ்ஸான் மூலம் வழங்கப்பட்ட பந்தை பெனால்டி எல்லையின் இடதுபக்கத்திலிருந்து பெற்று அய்ஸக் அபா கோலை நோக்கி உதைந்தார். எனினும் பந்தானது கப்பங்களை தாண்டிச் சென்றது.

போட்டி நிறைவுறுவதற்கு 10 நிமிடங்கள் காணப்படும் நிலையில் ஜீன் பிரான்ஸிஸ்கோ வழங்கிய பந்தை அய்ஸக் அபா பொனல்டி எல்லையிலிருந்து கோலை நோக்கி உதைந்தார். உடனே விரைவாக செயற்பட்டு சொலிட் அணியின் பின்கள வீரர்கள் பந்தை தடுத்தனர்.

இரு அணிகளும் முதல் பாதியில் கோல் பெறுவதற்கு காட்டிய ஆர்வத்தை இரண்டாம் பாதியில் காட்டுவதற்கு தவறின. எனவே கிடைக்கப்பெற்ற வாய்ப்புக்களும் அரிதாகவே காணப்பட்டன. இரு அணிகளும் 80 ஆவது நிமிடத்தின் பின் வெற்றிகரமாக எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாதவிடத்து நடுவர் போட்டியை குறிப்பிட்ட நேரத்தில் நிறைவு செய்தார். இதனால் இரு அணிகளாலும் எதுவித கோலும் பெறப்படாத நிலையில் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது.

முழு நேரம்: கிரிஸ்டல் பலஸ் கால்பந்துக் கழகம் 0 – 0 சொலிட் விளையாட்டுக் கழகம்

மஞ்சள் அட்டை

கிரிஸ்டல் பலஸ் கால்பந்துக் கழகம் – முஹமத் இபாம் 78′