முதல் பாதியில் ரொனால்டோவின் பேச்சு எங்களுக்கு உத்வேகம் கொடுத்தது: போர்த்துக்கல் வீரர்

220
Cristiano Ronaldo

பிரான்ஸ் நாட்டில் நேற்று நடைபெற்ற யூரோ இறுதிப் போட்டியில் பிரான்ஸ்- போர்த்துக்கல் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தொடரை நடத்திய பிரான்ஸ் கோப்பையை வெல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், போர்த்துக்கல் 1-0 என வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

பிரான்ஸ் அணியில் மிட்பீல்டிங் மற்றும் தாக்குதல் ஆட்டத்தில் போக்பா, பயேட் ஆகியோர் வலுவான நிலையில் இருந்தனர். போர்த்துக்கல் அணியில் ரொனால்டோ, நானி ஆகிய இரண்டு ஆட்டக்கர்களும் பெபே, செட்ரின் சோரஸ், பான்ட்டே ஆகிய மூன்று தலைசிறந்த தடுப்பு ஆட்டக்காரர்களும் இருந்தனர். இவர்களில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அந்த அணியே வெற்றிபெறும் என்பது கால்பந்து வல்லுனர்களின் கணிப்பு.

நேற்று ஆட்டம் தொடங்கியதும் தாக்குதல் ஆட்டத்துடன் இடது விங் எடுத்து ரொனால்டோவும், ரைட் விங் எடுத்து நானியும் விளையாடினார்கள். ஆட்டத்தின் 13ஆவது நிமிடத்தில் பயேட் ரொனால்டோவை முட்டித்தள்ளினார். இதில் முழங்காலில் ரொனால்டோவிற்கு காயம் ஏற்பட்டது. அதன்பின் இரண்டு முறை சிகிச்சை பெற்ற பின்னரும் அவரால் விளையாட முடியவில்லை. கண்ணீர் விட்டு அழும் நிலைக்கு வந்த ரொனால்டோ 24ஆவது நிமிடத்தில் மைதானத்தில் இருந்து சோகத்துடன் வெளியேறினார்.

முதல் பாதி நேரத்தில் பிரான்ஸ் வீரர்கள் கிரிஸ்மான், போக்பா, ஜிரோ கோல் கம்பத்தை நோக்கி சீறிப் பாய்ந்தாலும் தடுப்பு ஆட்டக்காரர்களான மும்மூர்த்திகள் பெபே, செட்ரின் சோரஸ், பான்ட்டே ஆகியோருடன் சேர்ந்து கோல் கீப்பர் பார்ட்ரிசியோ சிறப்பான வகையில் தடுத்து நிறுத்தினார்.

இதனால் ஆட்டத்தின் முதல் பாதி நேரத்தில் 0-0 என சமநிலையில் இருந்தது. பாதி நேரத்திற்குப்பின் சற்று இடைவேளை விடப்படும். இந்த நேரத்தில் காயத்தால் சோர்ந்து விட்டாலும் மனதளவிலும், அணி வீரர்களின் நம்பிக்கையிலும் சோர்வடையாத ரொனால்டோ வீரர்களிடையே சிறிது நேரம் பேசியுள்ளார். இந்தப் பேச்சுதான் வீரர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது பேச்சு நம்பமுடியாத வகையில் இருந்ததாகவும், அது தங்களுக்கு உத்வேகத்தை அளித்தது என்றும் தடுப்பாட்ட வீரர் செட்ரிக் சோரஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து குறித்து செட்ரிக் கூறுகையில் ‘‘கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியில் இருக்கும்போது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. மனம் தளர்ந்த நிலையில் இருந்த எங்களுக்கு அவர் பேச்சு உத்வேகத்தை அளித்தது.

அது ஒரு கடினமான நிலை. அனைவரும் சற்று அதிர்ச்சியில் இருந்தோம். ஓய்வு நேரத்தில் எங்களிடம் அவர் முக்கியத்துவம் வாய்ந்த வகையில் பேசினார். அதிகமான நம்பிக்கை கொடுத்தார். அப்போதுவீரர்களே சற்று நான் சொல்வதைக் கேளுங்கள். இந்தப் போட்டியில் நாம்தான் வெற்றி பெறப்போகிறோம் என்பதை உறுதியாகக் கூறுகிறேன். ஆகவே, அனைவரும் ஒன்றிணைந்து அதற்காக போராடுங்கள்என்றார்.

இது உண்மையிலேயே நம்ப முடியாதது. அணியில் உள்ள அனைவருக்கும் இது சிறந்த அணுகுமுறை என்று நினைக்கிறேன். ஒரு அணியாக இணைந்து விளையாடினால் வலிமையாக மாறுவோம் என்பதை இந்தப் போட்டியில் நாங்கள் காண்பித்தோம்என்றார்.

காயத்தால் வெளியேறிய பிறகு அவர் நம்பிக்கையற்று இருந்தாரா? என்று கேட்டதற்கு, ‘‘இல்லை. அவர் ஒரு சிறந்த வீரர். அவரது அணுகுமுறை நம்பமுடியாத வகையில் இருந்தது. அணிக்கு ஏராளமான வகையில் உதவி புரிந்தார். எங்களுக்கு உத்வேகப்படுத்தும் வார்த்தைகளைக் கூறினார். ஆகவே, இது சிறந்ததாக இருந்தது என்றார் சோரஸ்.

2ஆவது பாதி நேரம் மற்றும் கூடுதல் நேரத்தில் மானேஜர் (பயிற்சியாளர்) உடன் இருந்து கொண்டு துணை மானேஜர் போல் செயல்பட்டார் ரொனால்டோ. இதுகுறித்து சோரசிடம் கேட்டதற்கு ‘‘ஆம். ஒவ்வொரு அசைவுக்கும் ஏற்ற வகையில் ஒவ்வொரு வீரருக்கும் பயனுள்ள வகையில் வழிகாட்டினார். சாம்பியன் அணியில் நான் ஒரு நபராக இடம்பிடித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்  என்றார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்