நாட்டில் வன்முறை வேண்டாம்: கிரிக்கெட் நட்சத்திரங்கள் கோரிக்கை

240

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டு சில வாரங்கள் கடந்துள்ள நிலையில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களினால் மத வழிபாட்டுத்தளங்கள், வியாபார நிலையங்கள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட சொத்துக்கள் சூரையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன.

இந்த நிலையில், குறித்த அசம்பாவிதங்கள் தொடர்பில் இலங்கையின் முன்னாள், இன்னாள் விளையாட்டு வீரர்கள் தமது கவலையையும், ஆதங்கத்தையும் சமூகவலைத்தளங்கள் ஊடாக வெளியிட்டிருந்ததுடன், நாட்டின் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஒருமித்த குரலில் தெரிவித்திருந்தனர்.

>>இலங்கை வருகிறது பாகிஸ்தான் இளையோர் அணி

கடந்த கால சம்பவங்களை மறக்க வேண்டாம்

கடந்த காலங்களில் நாம் கற்றுக்கொண்ட பாடங்களை எதிர்கால சந்ததியினருக்கு விட்டு வைக்க வேண்டாம் என இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

எமக்கென்ற ஒரு நாடாக விளங்குவது இச்சிறிய நாடு மாத்திரமே. வன்முறைகளால் இந்த நாட்டில் பிரச்சினைகள் ஏற்பட்டால், இலங்கையர்களாகிய எமக்குத்தான் அது பலவீனத்தைக் கொடுக்கும்.

இந்த நாட்டில் பல ஆண்டுகளாக வன்முறைகளுக்கு முகங்கொடுத்து அதிலிருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொண்ட நாம், எமது எதிர்கால சந்ததியினருக்கு இந்த மோசமான அனுபவங்களை வழங்காதிருப்போம் என தெரிவித்துள்ளார்.

அரசியல் சூழ்ச்சிகளுக்கு சிக்க வேண்டாம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்கிக்கொள்ளாமல் நடந்து கொள்ள வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்த முனைகின்றவர்கள் இனவாதிகள் ஆவர். அவர்களின் நோக்கம் நாட்டின் எதிர்காலத்தை இல்லாது ஒழிப்பதாகும்.  

இலங்கையை அழிக்க வேண்டாம்

இது எமது நாடு. தயவுசெய்து எமது நாட்டை அழிக்க வேண்டாம். ஒவ்வொருவர் மீது வெறுப்புடன் நடந்து கொண்டால் நாடு என்ற ரீதியில் எப்போதும் அபிவிருத்தி அடைய முடியாமல் போய்விடும் என இலங்கை ஒருநாள் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து நன்கு சிந்தியுங்கள். எமது எதிர்காலமும் உங்களது கைகளில் தான் உள்ளது. அன்பை பரப்புங்கள், இனவெறிக்கு எதிராக எழுந்து நிற்போம் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றிணைவோம்

அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அடிபணியாமல் இலங்கையர்களாக ஓர் இனமாக செயற்படுவோம் என இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

கொஞ்சம் பொறுமையாக இருந்து ஆழமாக சிந்தியுங்கள். உங்கள் கண்களைத் திறவுங்கள். நாம் வன்முறைகளுக்கும் இனவாதத்துக்கும் வெறுப்பு மற்றும் காட்டு மிராண்டித் தன்மையை தோல்வியடையச் செய்யாவிட்டால் நாம் எமது நாட்டை இழந்துவிடுவோம். எனவே இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றிணைவோம். சமாதானமாகப் போவோம். மற்றவர்களைப் பாதுகாப்போம்.

>>அவிஷ்க குணவர்தனவின் இடத்தை நிரப்ப வரும் சமிந்த வாஸ்

வெட்கமில்லாத அரசியல்வாதிகளின் கீழ்த்தரமான நிகழ்ச்சி நிரல்களுக்கு அகப்பட வேண்டாம். நாம் பிரிவினையை அகற்றி ஓர் இனமாக எழுந்திருப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமாதானத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்

நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தி அனைத்து இன மக்களும் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த அனைவரும் முன்வர வேண்டும் என மோட்டார் கார் பந்தயத்தில் இலங்கையின் நாமத்தை சர்வதேசத்துக்கு எடுத்துச் சென்ற நட்சத்திர வீரரான டிலன்த மாலகமுவ தெரிவித்துள்ளார்.

நாங்கள் வேண்டி நிற்பது சமாதானம். எமது குழந்தைகளுக்கும், அவர்களது எதிர்காலத்துக்கும் சமாதானத்தைப் பெற்றுத்தாருங்கள். அதற்காக இந்த நேரத்தில் இனவாதத்தைத் தூண்ட வேண்டாம். எல்லோரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டிய காலம் இது. இதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும். உணர்வுகளுக்கு அடிபணியாமல் புத்திசாலித்தனத்துடன் நன்கு சிந்தித்து செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இன்னுமொரு கறுப்பு ஜுலை வேண்டாம்

இலங்கையில் இதற்கு முன் இடம்பெற்ற இனவாத முரண்பாடுகளினால் பல அப்பாவி உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. எனவே, 1983 இல் இடம்பெற்ற இனமுறுகலைப் போல இந்த நாட்டை மீண்டும் அதாளபாதாளத்துக்கு கொண்டு செல்ல வேண்டாம் என தயவாய் கேட்டுக் கொள்கிறேன் என இலங்கை அணியின் நட்சத்திர வீரரான அஞ்செலோ மெதிவ்ஸ் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அனைவரும் ஒன்றிணைவோம். எமது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்போம். எமது அழகான இந்த நாட்டை பாதுகாப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

பிரிவினைவாதம் வேண்டாம்

எமக்கிடையில் உள்ள பிரிவினையை இல்லாமல் செய்ய வேண்டும். அதேபோல ஒற்றுமையாக இருந்து ஒன்றாகப் பணியாற்ற வேண்டும். நாம் பிரிந்து செயற்பட்டால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது என இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரும், இலங்கை வளர்ந்துவரும் அணியின் பயிற்றுவிப்பாளருமான சமிந்த வாஸ் தெரிவித்துள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<