உலகக் கிண்ணத்திலிருந்து தவறவிடப்பட்ட முன்னணி பதினொருவர்

2482

கிரிக்கெட் வீரர்களின் மிகப் பெரிய கனவு தமது நாட்டின் தேசிய அணிக்காக விளையாடுவது மாத்திரமல்லாது உலகக் கிண்ணத்தை வென்று கொடுப்பதாகும். இதற்கிடையே, இம்மாதம் 30ஆம் திகதி முதல் ஜூலை 14ஆம் திகதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதில் நடப்புச் சம்பியன் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் கலந்துகொள்கின்றன. இவ்வனைத்து நாடுகளும் 15 பேர்கள் கொண்ட தமது அணியின் பெயர் பட்டியலை அறிவித்துள்ளன.

உலகக் கிண்ணத்திற்காக இலங்கை அணி இங்கிலாந்து பயணம்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இடங்களில்……………

இதில் இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் உள்ளிட்ட முன்னணி நாடுகளில் சிறப்பாக விளையாடி வந்த வீரர்கள் சிலர் தங்களது உலகக் கிண்ண அணியில் இடம்பெறவில்லை. இதற்காக ரசிகர்கள் பலரும் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

எதுஎவ்வாறாயினும், ஒவ்வொரு நாடுகளிலும் சிறப்பாக விளையாடுகின்ற முக்கிய சில வீரர்களுக்கு உலகக் கிண்ண அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில், குறித்த வீரர்களை தொகுத்து பதினொரு வீரர்கள் கொண்ட அணியொன்றை சர்வதேச கிரிக்கெட் பேரவை அண்மையில் வெளியிட்டிருந்தது. அந்த வீரர்களின் பட்டியலை இங்கு பார்ப்போம்.

இலங்கை

இலங்கை அணியைப் பொறுத்தமட்டில் ஒருநாள் போட்டிகளில் அந்த அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வந்தது. இதற்கு முக்கிய காரணமாக அணியின் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரு துறைகளையும் குறிப்பிடலாம்.  

எனினும், இலங்கை அணிக்காக அண்மைக்காலமாக தொடர்ந்து விளையாடி வந்த விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்ல, பந்துவீச்சுப் பாணியை சரிசெய்து கொண்டு மீண்டும் அணிக்குள் இடம்பெற்ற அகில தனன்ஜய, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான உபுல் தரங்க, தனுஷ் குணதிலக்க மற்றும் அனுபவமிக்க வீரரும் முன்னாள் ஒருநாள் அணித் தலைவரான தினேஷ் சந்திமால் ஆகியோருக்கு 15 பேர் கொண்ட இலங்கை குழாத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த வீரர்களில் அகில தனன்ஜயவைத் தவிர மற்ற எல்லா வீரர்களும் தமக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்பதை அவர்களது அண்மைக்கால பெறுபேறுகளில் இருந்து தெரிந்துகொள்ள முடியும்;.  அதிலும் குறிப்பாக, அனுபவமிக்க வீரரான தினேஷ்  சந்திமாலை அணியில் இருந்து நீக்கியது மிகப் பெரிய பேசும் பொருளாக மாறியது.  

எதுஎவ்வாறாயினும், உலகக் கிண்ணத்தில் விளையாடுவதற்கு தகுதிபெறாத .சி.சியினால் வெளியிடப்பட்ட பதினொருவர் பட்டியலில் இலங்கை அணியின் நிரோஷன் திக்வெல்ல, தினேஷ் சந்திமால் மற்றும் அகில தனன்ஜய ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதில் 2010ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி இலங்கை அணியின் நம்பிக்கைக்குரிய துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக திகழ்ந்த தினேஷ் சந்திமால், இதுவரை 146 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். எனினும், 2018ஆம் ஆண்டில் அவரது துடுப்பாட்ட சராசரி 42.57 ஆக காணப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், ஒருநாள் போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய நிரோஷன் திக்வெல்ல, கடந்த 12 மாதங்களில் 15 இன்னிங்ஸ்களில் விளையாடி 497 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

இதேவேளை, இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியில் நிச்சயம் இடம்பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுழல் பந்துவீச்சாளரான அகில தனன்ஜய, கடந்த வருடம் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 23.00 என்ற சராசரியுடன் 28 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

எனினும், முறையற்ற விதத்தில் பந்துவீசுவதாக குற்றச்சாட்டப்பட்டு போட்டித் தடைக்குள்ளாகிய அவர் தனது பந்துவீச்சுப் பாணியை சரிசெய்து கொண்டு இறுதியாக நடைபெற்ற தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடரில் மீண்டும் அணிக்குத் திரும்பினார். ஆனால், அவருக்கு எதிர்பார்த்தளவு பிரகாசிக்க முடியாமல் போனது. இதனால் உலகக் கிண்ண அணியில் இருந்து அவரை நீக்குவதற்கு தெரிவுக் குழு நடவடிக்கை எடுத்தது.  

இம்முறை உலகக் கிண்ணம் குறித்து குமார் சங்கக்கார

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ………………

இந்தியா

ஏழு மாதங்களுக்கு முன் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியுடனான ஒருநாள் தொடரின் போது இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி நாடு திரும்பிய நிலையில் அவருக்குப் பதிலாக அம்பத்தி ராயுடு அணியில் இடம்பெற்றார். அதாவது சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை அவர் பெற்றுக் கொண்டார். எனினும், தனது மீள்வருகையை சிறப்பாக முன்னெடுத்திருந்த ராயுடு, ஒரு சதம், நான்கு அரைச் சதங்களைப் பெற்றுக் கொண்டார்.

இந்திய அணிக்கு 4ஆவது இலக்கத்தில் சிறப்பாக தனது பங்களிப்பை தொடர்ந்து அளித்து வந்த அம்பத்தி ராயுடு உலகக் கிண்ண அணியில் இடம்பெறாதது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது.

எனவே, அம்பத்தி ராயுடுக்குப் பதிலாக அனுபவம் இல்லாத விஜய் சங்கர் துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு ஆகிய மூன்று கோணங்களின் அடிப்படையில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். எதுஎவ்வாறாயினும், இம்முறை உலகக் கிண்ணத்தில் இந்தியாவின் நான்காம் இலக்க வீரர் யார் என்பது கேள்விக்குரியாகவே உள்ளது.

அதைப்போல இளம் அதிரடி வீரர் ரிஷப் பாண்ட் அனுபவம் அடிப்படையில் தனது இடத்தை தினேஷ் கார்த்திக்கிடம் பறிகொடுத்தார். இம்முறை உலகக் கிண்ணத்தில் இடம்பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவர், இந்திய அணிக்காக வெறும் 5 ஒருநாள் போட்டிகளில் மாத்திரமே விளையாடியிருந்தார்.

இதன்படி, அம்பத்தி ராயுடு மற்றும் ரிஷப் பாண்ட் ஆகிய இருவரும் .சி.சியின் பதினொருவர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.  

அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலிய அணியில் சமீபத்திய போட்டிகளில் மிகவும் சிறப்பாக விளையாடிய பீட்டர் ஹேண்ட்ஸ்க்கோம் உலகக் கிண்ண அணியில் இடம்பெறவில்லை. இறுதியாக நடைபெற்ற 13 ஒருநாள் போட்டிகளில் 43.54 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் 479 ஓட்டங்களைக் குவித்த அவர், இந்திய அணிக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஒருநாள் தொடரில் சதம் மற்றும் 2 அரைச் சதங்கள் அடித்து அசத்தினார். இவரும் இம்முறை உலகக் கிண்ணத்தில் வாய்ப்பு கிடைக்காத .சி.சியின் பதினொருவர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

இங்கிலாந்து

இயன் மோர்கன் தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேற்கிந்திய தீவுகளைப் பிறப்பிடமாகக் கொண்ட சகலதுறை வீரரன ஜோப்ரா ஆர்ச்சர் இடம்பெறவில்லை.

உலகம் பூராகவும் இடம்பெறுகின்ற டி-20 லீக் போட்டிகளில் தனது அபார திறமையை வெளிப்படுத்தி வருகின்ற ஜோப்ரா ஆர்ச்சர், அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி, டி-20 போட்டி மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளார்.

இந்த நிலையில், அயர்லாந்து அணிக்கெதிராக கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒற்றை ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக ஒருநாள் வரத்தைப் பெற்றுக்கொண்ட ஆர்ச்சர், குறித்த போட்டியில் 8 ஓவர்கள் பந்துவீசி 40 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை வீழ்த்தியிருந்தார்.

எதுஎவ்வாறாயினும், பாகிஸ்தான் அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் சிறப்பாகச் செயற்பட்டால் மாத்திரமே உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து அணிக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்றுக் கொள்வார் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை, பயிற்சியாளர் மற்றும் இங்கிலாந்து அணித் தலைவர் ஆகியோர் முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே .சி.சியினால் அறிவிக்கப்பட்டுள்ள .சி.சியின் பதினொருவர் பட்டியலில் ஜோப்ரா ஆர்ச்சரும் இடம்பெற்றுள்ளார்.

உலகக் கிண்ண வரலாற்றை பேசும் ஹெட்ரிக்-விக்கெட்டுகள்!

சர்வதேச கிரிக்கெட்டில் நிகழ்த்தப்படும் ………..

பாகிஸ்தான்

பாகிஸ்தான் உலகக் கிண்ண குழாத்தில் வேகப் பந்துவீச்சாளர் மொஹமட் ஆமிர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக இடதுகை வேகப் பந்துவீச்சாளர் ஜுனைத் கான் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி சம்பியன் பட்டத்தை வெல்வதற்கு காரணமான முக்கிய வீரர்களில் ஆமிரும் ஒருவர். எனினும், அவருடைய அண்மைக்கால பெறுபேறுகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லாத காரணத்தால் உலகக் கிண்ண குழாத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

27 வயதான ஆமிர், இறுதியாக நடைபெற்ற 14 ஒருநாள் போட்டிளில் 9இல் எந்தவொரு விக்கெட்டையும் கைப்பற்றவில்லை. அதேபோல, உலகக் கிண்ணத்துக்காக நடத்தப்பட்ட உடல் தகுதி பரிசோதனையிலும் தோல்வியைத் தழுவியிருந்தார்.  

இதனிடையே, இங்கிலாந்து அணியுடனான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இடம்பெற்றுள்ள ஆமிருக்கு தனது திறமையை காண்பித்து உலகக் கிண்ண பாகிஸ்தான் அணியில் இடம்பெறுவதற்கான இறுதி வாய்ப்பு கிடைத்துள்ளது.  

அதுபோல அதிரடி ஆட்டக்காரர் ஆசிப் அலிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும், இங்கிலாந்து அணியுடனான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இவரும் இடம்பெற்றுள்ளதால் மீண்டும் திறமையினை வெளிப்படுத்தி இறுதி நேரத்தில் பாகிஸ்தான் குழாத்தில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்பைக் கொண்டிருக்கின்றார்.

எதிர்பார்க்காத முடிவுகளை காட்டக்கூடிய இலங்கை அணிக்கு ஒற்றுமை தேவை – சமிந்த வாஸ்

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர …………

அண்மைக்காலமாக விக்கெட் காப்பாளராக பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வந்த மொஹமட் ரிஸ்வானுக்கும் இம்முறை உலகக் கிண்ணத்தில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. 26 வயதான ரிஸ்வான் இதுவரை 32 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 700 இற்கும் அதிகமான ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

எனினும், சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு அண்மையில் நிறைவுக்கு வந்த அவுஸ்திரேலியா அணியுடனான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மீண்டும் களமிறங்கிய றிஸ்வான், 2 சதங்களை அடித்து அசத்தியிருந்தார்.

இதன்படி, குறித்த மூன்று வீரர்களும் .சி.சியின் பதினொருவர் பட்டியலில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகள்

மேற்கிந்திய தீவுகள் அணியைப் பொறுத்தமட்டில் சகலதுறை வீரர் கிரென் பொல்லார்ட்டுககு உலகக் கிண்ண அணியில் இடம் வழங்கப்படவில்லை. இறுதியாக 2016ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடிய அவர், தற்போது நடைபெற்று வருகின்ற .பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடி வருகின்றார்.

எனினும், அந்நாட்டு தேர்வாளர்கள் பொல்லார்ட்டை காட்டிலும் சிறப்பாக விளையாடுகின்ற அன்ட்ரூ ரஸல்லுக்கு அதிக முன்னுரிமை கொடுத்துள்ளனர்.

எனவே, .சி.சியினால் அறிவிக்கப்பட்ட உலகக் கிண்ண அணியில் தவறவிடப்பட்ட வீரர்கள் பட்டியலில் கிரென் பொல்லார்ட்டும் இடம்பெற்றுள்ளார்.

உலகக் கிண்ணத்திலிருந்து தவறவிடப்பட்ட பதினொருவர் அணி

நிரோஷன் திக்வெல்ல, தினேஷ் சந்திமால், அகில தனன்ஜய, அம்பத்தி ராயுடு, ரிஷப் பாண்ட், பீட்டர் ஹேண்ட்ஸ்க்கோம், ஜோப்ரா ஆர்ச்சர், மொஹமட் ஆமிர், ஆசிப் அலி, மொஹமட் ரிஸ்வான், கிரென் பொல்லார்ட்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<