டயலொக் ரக்பி லீகின் 9ஆம் வாரத்திற்கான போட்டியொன்றில் கண்டி விளையாட்டுக் கழகம் மற்றும் CR & FC கழக அணிகள் மோதிக் கொண்டன. CR&FC மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் கண்டி கழகம் 32 – 27 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

போட்டியின் ஆரம்பத்தில் இரண்டு அணிகளுமே பந்தை கையாளுதலில் தொடர் தவறுகளை விட்ட வண்ணம் விளையாட்டில் ஈடுபட்டன. எனினும் 5ஆவது நிமிடத்தில் போட்டியின் முதல் ட்ரையினை கண்டி அணியின் தனுஷ்க ரஞ்சன் வைத்தார். திலின விஜேசிங்க மற்றும் ரிச்சர்ட் தர்மபால ஊடாக பந்தினை பெற்றுக் கொண்ட ரஞ்சன், இலகுவாக ட்ரையை நிறைவு செய்தார். கடினமான கோணத்தில் கிடைத்த கொன்வர்சன் உதையை திலின விஜேசிங்க லாவகமாக உதைத்தார். (கண்டி அணி 07 – CR & FC அணி 00)

9ஆவது நிமிடத்தில் CR & FC அணியின் தடுப்பாட்ட வீரர்களின் கவனக்குறைவினை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட ஷெஹான் பதிரன, கண்டி அணிக்கு இரண்டாவது ட்ரையினை பெற்றுக் கொடுத்தார். இம்முறை திலின விஜேசிங்க உதையை தவறவிட்டார். (கண்டி அணி 12 – CR & FC அணி 00)

எதிரணியின் பாதியினுள் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கம்பத்தை நோக்கி உதைக்க CR & FC அணி முடிவெடுத்தது. தரிந்த ரத்வத்த வெற்றிகரமாக உதைக்க, CR & FC அணி தமது முதல் புள்ளிகளை பெற்றுக் கொண்டது. (கண்டி அணி 12 – CR & FC அணி 03)

புள்ளி வித்தியாசத்தை மேலும் குறைத்த CR & FC அணியின் ஸ்க்ரம் ஹாப் வீரர் கவிந்து டி கொஸ்டா, தனது அபாரமான ஓட்டத்தின் மூலம் தனியொருவராக எதிரணியின் தடுப்பை மீறி முன்னேறி ட்ரை வைத்தார். தரிந்த ரத்வத்த உதையை தவறவிட்டார். (கண்டி அணி 12 – CR & FC அணி 08)

எதிரணியின் ட்ரையிற்கு பதிலடி கொடுத்த கண்டி வீரர் தனுஷ்க ரஞ்சன் மற்றுமொரு ட்ரை வைத்து புள்ளி வித்தியாசத்தை அதிகரித்தார். இம்முறையும் கடினமான உதையை திலின விஜேசிங்க வெற்றிகரமாக உதைத்தார். (கண்டி அணி 19 – CR & FC அணி 08)

முதல் பாதியில் தமது முழு ஆதிக்கத்தையும் நிலைநாட்டிய கண்டி கழகம் 28ஆவது நிமிடத்தில் முன்கள வீரர் ஷெஹான் பதிரன ஊடாக ட்ரை வைத்தது. துரதிஷ்டவசமாக திலின விஜேசிங்கவின் கொன்வர்சன் உதை குறிதவறியது. (கண்டி அணி 24 – CR & FC அணி 08)

முதல் பாதியின் இறுதி நிமிடங்களில் CR & FC அணிக்கு சில வாய்ப்புகள் கிடைத்த போதிலும், அவ்வணியின் வீரர்களினால் அவை தவறவிடப்பட்டன.

முதல் பாதி : கண்டி அணி 24 – CR & FC அணி 08

இரண்டாம் பாதியில் புள்ளி வித்தியாசத்தை மேலும் அதிகரித்த கண்டி கழகம் தனுஷ்க ரஞ்சன் மூலமாக மற்றுமொரு ட்ரையினை பெற்றுக் கொண்டது. விவேகமான கைமாற்றல் மூலமாக திலின விஜேசிங்கவிடமிருந்து பந்தை பெற்றுக் கொண்ட ரஞ்சன், தனது மூன்றாவது ட்ரையினை வைத்து ஹெட்ரிக் சாதனை படைத்ததுடன், இப்பருவகாலத்தில் அதிக ட்ரை வைத்தவர்கள் பட்டியலில் தனது முதலாமிடத்தை உறுதிப்படுத்திக் கொண்டார். அர்ஷாட் ஜமால்டீன் உதையினை தவறவிட்டார். (கண்டி அணி 29 – CR & FC அணி 08)

தொடர்ந்தும் இரண்டு அணிகளினதும் வீரர்கள் பந்தை கையாளுதலில் பல தவறுகளை விட்டனர். எவ்வாறாயினும் 56ஆவது நிமிடத்தில் CR & FC அணியின் சுபுன் வர்ணகுலசூரிய கம்பங்களுக்கிடையில் ட்ரை வைத்து அணிக்கு நம்பிக்கையளித்தார். இலகுவான கொன்வர்சன் உதை கம்பங்களை ஊடறுத்துச் சென்றது. (கண்டி அணி 29 – CR & FC அணி 15)

எதிரணியின் ட்ரை கோட்டின் அருகில் அடுத்தடுத்து கிடைத்த ட்ரை வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திக்கொண்ட CR & FC கழகத்தின் முன்கள வீரர்கள், இஷான் நூர் மூலமாக ட்ரை வைத்து புள்ளி வித்தியாசத்தை குறைப்பதில் வெற்றி கண்டனர். கவிந்து டி கொஸ்டா வெற்றிகரமாக உதைத்தார். (கண்டி அணி 29 – CR & FC அணி 22)

இறுதி நிமிடங்களில் CR & FC அணி பலத்த அழுத்தத்தை வழங்கிய போதிலும், தமது அணியின் புள்ளிகளை அதிகரித்த திலின விஜேசிங்க ட்ரொப் கோல்’ மூலமாக 3 புள்ளிகளை பெற்றுக் கொடுத்தார். (கண்டி அணி 32 – CR & FC அணி 22)

ஓமல்க குணரத்னவின் அபாரமான ஓட்டம் மற்றும் பின்கள வீரர்களின் சிறப்பான பந்து கைமாற்றல்களின் பயனாக CR & FC கழகத்தின் ரெஹான் சில்வா ட்ரை வைத்த போதிலும், அத்துடன் போட்டி நிறைவுக்கு வந்ததால் கண்டி அணி வெற்றியை தக்கவைத்துக் கொண்டது. (கண்டி அணி 32 – CR & FC அணி 27)

முழு நேரம் : கண்டி அணி 32 – CR & FC அணி 27

ThePapare.com இன் ஆட்ட நாயகன் – தனுஷ்க ரஞ்சன் (கண்டி விளையாட்டுக் கழகம்)

புள்ளிகளைப் பெற்றோர்

கண்டி விளையாட்டுக் கழகம் – 32

ட்ரை – தனுஷ்க ரஞ்சன் 3, ஷெஹான் பதிரன 2
கொன்வர்சன் – திலின விஜேசிங்க 2
ட்ரொப் கோல் – திலின விஜேசிங்க 1

CR & FC அணி – 27

ட்ரை – கவிந்து டி கொஸ்டா 1, சுபுன் வர்ணகுலசூரிய 1, இஷான் நூர் 1, ரெஹான் சில்வா 1
கொன்வர்சன் – கவிந்து டி கொஸ்டா 2
பெனால்டி – தரிந்த ரத்வத்த 1