SAG செல்லும் மெய்வல்லுனர்களுக்கு விசேட உடற்தகுதி பரிசோதனை

73

நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள அனைத்து இலங்கை மெய்வல்லுனர்களுக்கும் விசேட உடற்தகுதி பரிசோதனையொன்றை நடத்துவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் தீர்மானித்துள்ளது. 

35 தங்கப் பதக்கங்களை குறிவைத்து நேபாளம் செல்லும் இலங்கை அணி

தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தினால் …….

அத்துடன், வீரர்களினது போட்டித் திறனை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் விசேட போட்டித் தொடரொன்றையும், அஞ்சலோட்ட அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கான சுவட்டை தீர்மானிப்பதற்கான போட்டியொன்றும் இதன்போது நடைபெறவுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 26ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இந்த விசேட பரிசோதனையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதில் இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவுக்கு தெரிவாகியுள்ள அனைத்து மெய்வல்லுனர்களும் கலந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

சர்வதேச விளையாட்டு விழாவொன்றை இலக்காகக் கொண்டு இலங்கை மெய்வல்லுனர்களுக்கு வழங்கப்படுகின்ற முதலாவது உடற்தகுதி பரிசோதனையாக இது வரலாற்றில் இடம்பெறவுள்ளது.

இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் அதிக பதக்கங்களை வெல்கின்ற போட்டி நிகழ்ச்சியாக கருதப்படுகின்ற மெய்வல்லுனரில் 34 வீரர்களும், 24 வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர்

அத்துடன் இதில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் முதல்தடவையாக தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும், கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தகுதிகாண் போட்டிகளில் தெரிவாகிய 66 வீரர்களில் 58 பேரை மாத்திரம் இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவுக்கு அழைத்துச் செல்ல இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த நிலையில், இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவுக்கு தெரிவாகியுள்ள அனைத்து மெய்வல்லுனர்களும் தற்போது கொழும்பு சுகததாச விளையாட்டரங்கு மற்றும் டொரின்டன் மைதானத்தில் தமது பயிற்சிகளை முன்னெடுத்து வருவதுடன், நெடுந்தூர ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றுகின்ற வீரர்கள் மாத்திரம் தியத்தலாவையில் தங்கியிருந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்

இதேநேரம், தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள இலங்கை மெய்வல்லுனர் குழாம் எதிர்வரும் 28ஆம் திகதி நேபாளம் நோக்கி பயணமாகவுள்ளது.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<