பொதுநலவாய பதக்கம் வென்றவர்களுக்கு 19 மில்லியன் பணப்பரிசு

182

அவுஸ்திரேலியாவில் கடந்த வாரம் நிறைவுக்கு வந்த 21ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கங்களை வென்று இலங்கைக்கு பெருமையைத் தேடிக் கொடுத்த வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு விளையாட்டுத்துறை அமைச்சின் டங்கன் வைட் கேட்போர் கூடத்தில் நேற்று(19) இடம்பெற்றது.

இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை அணி ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 31ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது. இந்த 6 பதக்கங்களையும் பளுதூக்கல் மற்றும் குத்துச்சண்டைப் போட்டிகளில் இலங்கை அணி வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை 6 பதக்கங்கள் வென்று சாதனை

பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் 68..

எனவே, தற்காலிக விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் தலைமையில் நேற்று இடம்பெற்ற, குறித்த வீரர்களை பாராட்டும் வைபவத்தில் கலந்துகொண்ட முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, இந்த வீரர்களுக்கு ஜனாதிபதியின் தலைமையில் விசேட கௌரவிப்பும், பணப்பரிசும் வழங்கப்படும் என தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் இம்முறை எமது வீரர்கள் அதிக பதக்கங்களை வென்றார்கள். இது எமக்கு கிடைத்த மிகப் பெரிய வரலாற்று வெற்றியாகும். இலங்கையன் என்ற ரீதியில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதிலும் பதக்கம் வென்றவர்கள் மற்றும் இம்முறை விளையாட்டு விழாவில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்திய அனைத்து வீரர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் விளையாட்டு சங்கங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

இதேநேரம், சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை பெற்றுக்கொள்கின்ற வீரர்களுக்கு விளையாட்டுத்துறை நிதியத்தினால் பணப்பரிசுகள் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், விளையாட்டு அமைச்சராக இருந்த தயாசிறி ஜயசேகரவின் திடீர் இராஜினாமாவினால் அந்த பணப்பரிசு வழங்கப்படமாட்டாது என சமூகவலைத்தளங்களில் வதந்திகள் பரவிவந்தன.

அதிலும், குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் அவரால் அறிவிக்கப்பட்டவாறு தங்கப் பதக்கத்துக்கு ரூ. 50 இலட்சமும், வெள்ளிப் பதக்கத்துக்கு ரூ. 40 இலட்சமும் வெண்கலப் பதக்கத்துக்கு ரூ. 30 இலட்சமும் பரிசாக வழங்கப்படும் என்றார். இதன்படி, 6 பதக்கங்களுடன் நாடு திரும்பியுள்ள இலங்கை வீரர்களுக்கு அமைச்சினால் மொத்தமாக ரூ. 190 இலட்சம் பணப்பரிசாக வழங்கவேண்டி இருந்தது.

ஆனால், பொதுநலவாய போட்டிகள் முடிவடைந்து ஒரு வாரம் ஆகியும் வீரர்களுக்கான பணப்பரிசு குறித்து எதுவித தகவலும் அமைச்சால் வெளியிடப்படவில்லை. இதுதொடர்பில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் கருத்து வெளியிடுகையில்,

பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு பணப்பரிசுகள் கிடைக்காது என பரவலாக செய்திகள் வெளியாகியிருந்தன. உண்மையில் இவ்வாறான விடயங்களை நம்ப வேண்டாம். பதக்கங்களை வென்றவர்களுக்கு இன்னும் 2 வாரங்களில் நிச்சயம் ஜனாதிபதியின் கைகளினால் பணப்பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டு அவர்களுக்கான கௌரவிப்பும் வழங்கப்படும் ன்றார்.

இறுதியாக, இனிவரும் காலங்களிலும் தன்னுடைய பங்களிப்பினை தொடர்ந்து விளையாட்டுத்துறை அமைச்சுக்கு வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக தெரிவித்த முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, தனது பிரியாவிடை உரையையும் இதன்போது நிகழ்த்தியிருந்தார். இதுவரை காலமும் தனக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்து, தவறுகள் இடம்பெற்றிருப்பின் மன்னிக்கும் படியும் கேட்டு அவர் விடைபெற்றுச் சென்றார்.  

இதேவேளை, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் முயற்சியனால்தான் இலங்கைக்கு இம்முறை பொதுநலவாய விளையாட்டில் அதிக பதக்கங்களை பெற்றுக்கொள்ள முடிந்தது. கடந்த 3 வருடங்களாக விளையாட்டுத்துறை அமைச்சராக செயற்பட்டு அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என இதனை சொல்லாம் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் தற்காலிக விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

பொதுநலவாய விளையாட்டில் இலங்கை அஞ்சலோட்ட அணி புதிய சாதனை

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று..

இந்நிலையில், நான் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்பதற்காக இங்கு வரவில்லை. இது எனக்கு வழங்கப்பட்ட தற்காலிக பதவியாகும். எனவே நாட்டுக்கு பெருமை சேர்த்த வீரர்களை கௌரவிக்கவே நாம் இங்கு ஒன்றுகூடியுள்ளோம்.

எனவே எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறான வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள இன, மத வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அதற்காக ஒவ்வொரு விளையாட்டு சங்கங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த நிகழ்வின் இறுதியில் பதக்கங்களை வென்று கொடுத்த 6 வீரர்களுக்கும் கிடைக்கவுள்ள பணப்பரிசுக்கான கடிதத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா மற்றும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட அதிகாரிகளினால் வீரர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<