இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி மீது நம்பிக்கை உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது கருத்து தெரிவித்த திலங்க சுமதிபால மேலும் கூறுகையில், ”ஆடவர் கிரிக்கெட் அணியைப் போன்றே, அகில இலங்கை மட்டத்தில் மகளிர் கிரிக்கெட்டினை அர்ப்பணிப்புடன் ஊக்குவிப்பதே இலங்கை கிரிக்கெட் சபையின் நோக்கமாகும்” என்று தெரிவித்தார்.

இலங்கை அணியின் தோல்வி, அடுத்த கட்டம் குறித்த மெதிவ்சின் கருத்து

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி பற்றி மேலும் பேசிய அவர், ”முன்னர் இருந்த அணியை விட இந்த அணி வலிமை மிக்கதாக உள்ளது. அந்தவகையில் இம்முறை போட்டிகளில் இலங்கை மகளிர் அணி வெற்றிகளைக் குவிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக” தெரிவித்தார்.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஹேமந்த தேவப்பிரிய ”கடந்த சில மாதங்களாக நடாத்தப்பட்ட கடின பயிற்சிகளின் மூலம் மகளிர் கிரிக்கெட் அணி தேவையான அளவுக்கு முன்னேற்றம் கண்டிருப்பதாக” தெரிவித்தார்.

நான் எதிர்பார்த்தது 10% முதல் 15% முன்னேற்றத்தை மட்டுமே, எனினும் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே முன்னேற்றம் கண்டுள்ளார்கள். நடைபெற்ற பயிற்சி போட்டிகளின் போது வெளிப்படுத்திய திறமைகளின் அடிப்படையில் இதை தெரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. அந்த வகையில் நிச்சயமாக இம்முறை மகளிர் உலக கிண்ணப் போட்டிகளில் சாதிக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன. அணியும் அதே நம்பிக்கையில் உள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற 5 நாட்களைக் கொண்ட பயிற்சி முகாமில் தேவையான உடற்பயிற்சிகள் வழங்கப்பட்டன. இங்கிலாந்து காலநிலைக்கு முகம் கொடுக்கக்கூடிய வலிமை அவர்களிடம் உள்ளது.

இது சம்பந்தமாக ThePapare.com இற்கு பிரத்தியேகமாக கருத்து தெரிவித்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீபாளி வீரக்கொடி கண்டியில் கொடுக்கப்பட்ட பயிற்சிகள் பயன்மிக்கதாக இருந்தது. அதிகாலையிலேயே அங்கு பயிற்சிகளை மேற்கொண்டோம். இங்கிலாந்து காலநிலைக்கு ஏற்றவாறாக இருந்ததனால் அந்த அனுபவம் இங்கிலாந்து மண்ணில் எமக்கு நிச்சயமாக உதவும். அத்துடன், இந்தப் போட்டிகள் அனைத்தும் லீக் போட்டிகளாக நடைபெறுவதால் எங்களுக்கு நல்ல சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி இன்றைய தினம் இங்கிலாந்து செல்லவுள்ள அதே நேரம் அங்கு புதிய சூழல் மற்றும் காலநிலைகளைப் பழகிக்கொள்ள 5 நாட்கள் கொண்ட பயிற்சி செயல் அமர்வில் பங்குபற்றவுள்ளது. அதன் பின்னர் இரண்டு பயிற்சிப் போட்டிகளிலும் பங்குபற்றவுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி ஜூன் 19ஆம் திகதியும், இந்திய மகளிர் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி ஜூன் 21ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.

ஜூன் மாதம் 24ஆம் திகதி இலங்கை அணி உலகக் கிண்ணத்துக்கான தமது முதலாவது போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது.