AFC கிண்ணத்திற்கு போட்டியிடும் கொழும்பு கால்பந்து கழகம்

312

ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் 2019ஆம் ஆண்டுக்கான AFC கிண்ணத்தின் முதலாவது தகுதிகாண் சுற்றுப் போட்டியில் கொழும்பு கால்பந்து கழகம் பூட்டான் நாட்டின் ட்ரான்ஸ்போட் யுனைடட் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இதன் முதல் கட்டப்போட்டி இம்மாதம் 20ஆம் திகதி கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் (ரேஸ்கோர்ஸ்) சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளதோடு, 2ஆவது கட்டப் போட்டி பெப்ரவரி 27ஆம் திகதி பூட்டானின், திம்பு தேசிய அரங்கில் நடைபெறும்.

DCL கிண்ண வாய்ப்பை அதிகரித்துக்கொண்ட புளூ ஸ்டார், டிபெண்டர்ஸ்

டயலொக் சம்பியன்ஸ் லீக் (DCL) தொடரின் 16 ஆவது வாரத்திற்கான …

கடந்த 2017இல் இலங்கையின் முக்கிய கால்பந்து தொடரான டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் சம்பியனானதன் மூலம் கொழும்பு கால்பந்து கழகம் 2019 AFC கிண்ணத்திற்கு முதலில் தகுதி பெற்றது. ஐரோப்பிய லீக் போட்டிகளை ஒத்த இந்தத் தொடரில் 26 கூட்டமைப்பு உறுப்பு நாடுகளின் 43 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 36 அணிகள் தலா 4 அணிகள் என ஒன்பது குழுக்களாக பிரிக்கப்பட்டு குழு நிலைப் போட்டிகள் நடைபெறுகின்றன.   

ட்ரான்ஸ்போர்ட் யுனைடட் அணி 2018ஆம் ஆண்டுக்கான பூட்டான் தேசிய லீக்கில் சம்பியன் அணியாகும். தொடரின் இந்த கட்டத்தில் பூட்டானில் இருந்து அணி ஒன்று பங்கேற்பது இது இரண்டாவது தடவையாகும். கொழும்பு கால்பந்து கழகமும் இந்தத் தொடரில் பங்கேற்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் அந்த அணி இந்தியாவின் மோகன் பகான் அணியிடம் தோல்வியை சந்தித்தது.  

2018ஆம் ஆண்டுக்கான டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடர் இன்னும் நடைபெற்று வரும் நிலையில் 2017 சம்பியனான கொழும்பு கால்பந்து கழகம் இலங்கையில் இருந்து இந்தத் தொடரில் பங்கேற்கின்றது. எனினும், ஏனைய பல நாடுகளும் தமது 2018 சம்பியன் அணியையே இத்தொடரில் பங்கேற்கச் செய்கின்றன.

இந்த தொடர் குறித்து ஊடகங்களை விளக்கும் ஊடக சந்திப்பொன்று நேற்று (11) இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போது, கொழும்பு கால்பந்து கழகத்தின் முகாமையாளர் சைப் யூசுப், இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா, இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஜஸ்வர் உமர் மற்றும் கொழும்பு கால்பந்து கழகத்தின் ஊடக அதிகாரி ஆபித் அக்ரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Photo Album :  Colombo FC v Transport United | AFC Cup 2019 – Press Conferences

இதன்போது உரையாற்றிய கொழும்பு கால்பந்து கழகத்தின் முகாமையாளர் சைப் யூசுப்,

ஆசியாவில் உள்ள எந்தவொரு அணிக்கும் AFC கிண்ணப் போட்டிகளில் விளையாடுவது ஒரு கனவாகவே இருக்கும். எனினும், அந்த வாய்ப்பை பெறுவதற்கு பல தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும்.  

தொடரில் பூட்டான் மற்றும் இந்திய அணிகளுடன் விளையாடும் வாய்ப்பை பெற்றமை குறித்து பெருமையடைகின்றோம். இந்தப் போட்டிகளுக்காக நாம் ஒப்பந்த அடிப்படையில் சில வீரர்களை பெற்று அணியை வலுப்படுத்தவுள்ளோம். எமது தலைமைப் பயிற்றுவிப்பாளராக ருவன் குமாரவும், உதவிப் பயிற்றுவிப்பாளராக மொஹமட் ரூமியும் செயற்படவுள்ளனர் என்றார்.   

இந்தப் போட்டியில் தமக்கு எதிராக ஆடும் பூட்டான் அணி குறித்து கருத்து தெரிவித்த சைப் யூசுப்,

ட்ரான்ஸ்போட் யுனைடட் அணி ஏற்கனவே இந்தியாவிலும் மேலும் சில இடங்களிலும் பயிற்சிப் போட்டிகளில் பங்கெடுத்து தம்மை தயார்படுத்தியுள்ளனர். எனவே, அந்த அணியை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாது என்றார்.

தகுதிகாண் சுற்றின் முதல் போட்டியில் கொழும்பு அணி ட்ரான்ஸ்போட் யுனைடட் அணியை வீழ்த்தி முன்னேற்றம் கண்டால் 2017/18 இந்தியன் சுப்பர் லீக் சம்பியனான சென்னையின் கால்பந்து கழகத்துடன் (இந்தியா) பிளே ஓப் போட்டியில் ஆடும்.  

தகுதிகாண் போட்டிகளில் கொழும்பு கால்பந்து கழகம் வெற்றி பெற்றால் அந்த அணி E குழுவில் மினர்வா பஞ்சாப் (இந்தியா), அபஹானி லிமிடட் டாக்கா (பங்களாதேஷ்) மற்றும் மனங் மர்ஷியாத்கி கழகம் (நேபாளம்) அணிகளுடன் இடம்பெறும்.

கிழக்கு மற்றும் தெற்கு வலயங்களின் குழு நிலை போட்டிகள் 2019 ஏப்ரல் 23 ஆம் திகதி தொடக்கம் நடைபெறும்.  

ஆசிய கிண்ண கால்பந்திலும் ரசிகர்களின் மனதை வென்ற நாடோடி அலிரேசா

கால்பந்து உலகில் பிரபல அணிகள் மற்றும் நட்சத்திர …….

நடைபெறவுள்ள போட்டிகளுக்கான ஆதரவை இலங்கையர்கள் அனைவரும் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்ட சைப் யூசுப்,

இது இலங்கையில் இடம்பெறுகின்ற தரம்மிக்க சர்வதேச போட்டியாகவே அமையவுள்ளது. அதேபோன்று, கொழும்பு கால்பந்து கழகம் இலங்கை நாட்டை பிரதிநிதித்துவம் செய்தே இந்த தொடரில் விளையாடுகின்றது. இது ஒரு இலங்கை அணியாகவே அமைகின்றது. எனவே, இந்தப் போட்டியைப் பார்க்க வந்து கொழும்பு அணிக்கு ஆதரவு வழங்குமாறு நான் இலங்கையில் உள்ள அனைத்து கழகங்களிடமும், கால்பந்து ரசிகர்களிடமும் வேண்டுகின்றேன் என்றார்.

கொழும்புடிரான்ஸ்போட் யுனைடட் எதிரான மோதல்

முதல் கட்டம் – 20 பெப்ரவரி 2019 – கொழும்பு, ரேஸ்கோர்ஸ் சர்வதேச அரங்கு – பி.ப. 3.30

2ஆவது கட்டம் – 27 பெப்ரவரி 2019 – திம்பு, சான்லிமிதங் அரங்கு – பி.ப. 5.30

சென்னையின் கால்பந்து கழகத்திற்கு எதிராக

முதல் கட்டம் – 06 மார்ச் 2019, கொழும்பில்

2ஆவது கட்டம் – 13 மார்ச் 2019 சென்னை, அரேனா அரங்கு  

குழுக்களுக்கான கட்டம் வரை போட்டி ஒன்றுக்காக கழகம் ஒன்றுக்கு AFC தலா 20,000 அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது. அபிவிருத்தி அடைந்து வரும் கழகம் ஒன்றுக்கு இது இலாபகரமான தொகையாகும். இலங்கையின் போட்டி பருவம் முடிவுறும் நிலையில் வீரர்கள் பல போட்டிகளிலும் ஆடி இருக்கும் சூழலில் கொழும்பு கால்பந்து கழகத்திற்கு பிளே ஓப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு சவாலாகவே உள்ளது.  

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<