மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் அணியில் மீண்டும் கிறிஸ் கெய்ல்

559
Chris Gayle

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் சுமார் 2 வருடங்களுக்குப் பிறகு அவ்வணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெய்ல் இடம்பிடித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ் கெய்ல், இறுதியாக 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் அவ்வணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருந்தார். 37 வயதான கிறிஸ் கெய்ல், இதுவரை 269 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9,221 ஓட்டங்களைக் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவ்வணியின் மற்றுமொரு நட்சத்திர வீரரான மார்லன் சாமுவேல்ஸும் சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம்பிடித்துள்ளார். அவர் இறுதியாக 2016இல் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

அடுத்த வாரம் பங்களாதேஷுடனான டெஸ்ட் தொடரில் மோதும் அவுஸ்திரேலியா

பங்களாதேஷிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட்…

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்ற மேற்கிந்திய தீவுகள் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதன் முதல் டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 209 ஓட்டங்களால் அவ்வணி படுதோல்வியைத் தழுவியது.

இந்நிலையில், இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. அதற்கு முன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13ஆம் திகதி அயர்லாந்து அணியுடன் ஒரேயொரு ஒருநாள் போட்டியிலும் அவ்வணி விளையாடவுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணியுடன் விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் அணி விபரம் நேற்று அறிவிக்கப்பட்டது.

சுமார் 2 வருடங்களாக ஒருநாள் அணியில் இடம்பெறாத கிறிஸ் கெய்லுக்கும், கடந்த வருடம் நடைபெற்ற பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் தொடரின் பிறகு அணியிலிருந்து நீக்கப்பட்ட மார்லன் சாமுவேல்ஸுக்கும் மீண்டும் ஒருநாள் அணியில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை அணியை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், உபாதையில் இருந்து குணமடைந்து தற்போது கரீபியன் பீரிமியர் லீக்கில் விளையாடிவரும் மேற்கிந்திய தீவுகள் அணியின் மற்றுமொரு நட்சத்திர வீரரான டரன் பிராவோ, 100 சதவீதம் உடற்தகுதி பெறாத காரணத்தால் ஒருநாள் அணியில் இணைக்கப்படவில்லை. அதேபோல, உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்ற சுனில் நரைனும் ஒருநாள் அணியில் இடம்பெறவில்லை. எனினும், வேகப்பந்து வீச்சாளரான ஜெரம் டெய்லருக்கு மீண்டும் ஒருநாள் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்துடனான ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அந்நாட்டு தெரிவுக் குழுத்தலைவர் கோர்ட்னி பிரவுண் கருத்து வெளியிடுகையில், ”கிறிஸ் கெய்லையும், மார்லன் சாமுவேல்ஸையும் மீண்டும் அணியில் இணைத்துக்கொள்ள முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது. இவர்களது அனுபவம் அணியில் துடுப்பாட்ட வரிசையை பலப்படுத்தும் அதேநேரம், இளம் வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பாகவும் அமையவுள்ளது” என்றார்.

எனினும், டெரன் பிராவோ மற்றும் சுனில் நரைன் ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்கு மறுப்பு தெரிவித்தனர். தாம் 100 சதவீதம் உடற்தகுதியை கொண்டிருக்காத காரணத்தால் இம்முறை தொடரில் தம்மால் விளையாட முடியாது என தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2016 T-20 உலகக் கிண்ணப் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணி சம்பியன் பட்டத்தை வென்ற பிறகு அவ்வணியின் சிரேஷ்ட வீரர்களான டெரன் சமி, டெரன் பிராவோ, கிறிஸ் கெய்ல், கிரென் பொல்லார்ட், மார்லன் சாமுவேல்ஸ் உள்ளிட்ட வீரர்கள் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் தலைவர் டேவ் கெமரூன் உள்ளிட்ட அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகத்தை படுமோசமாக விமர்சித்தனர்.  

இதில் குறிப்பாக அந்நாட்டு வீரர்களின் சம்பள நிலுவை தொடர்பிலும் இவர்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். இதனையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணியிலிருந்து அவர்களை அதிரடியாக நீக்குவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மோர்க்கல், அம்லா சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு பெறுகின்றார்களா?

மொயின் அலியின் சிறந்த சகலதுறை ஆட்டத்தின் மூலம் தென்னாபிரிக்காவுடனான…

இதனையடுத்து தமது நாட்டுக்காக விளையாட முடியாமல் அந்த வீரர்கள வெளிநாட்டு தொடர்களில் சிறப்பாக விளையாடி வந்தனர். எனினும், தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்ற அவ்வணியை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு கிறிஸ் கெய்ல், மார்லன் சாமுவேல்ஸ் உள்ளிட்ட வீரர்களை மீண்டும் தேசிய அணியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என மேற்கிந்திய தீவுகளின் தெரிவுக் குழுத் தலைவர் கோர்ட்னி பிரவுண் தெரிவித்தார்.

எனவே, 2019 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு நேரடியாக தகுதிபெற்றுக்கொள்ளும் நோக்கில் கிறிஸ் கெய்ல், மார்லன் சாமுவேல்ஸ் ஆகியோரை ஒருநாள் அணியில் இணைத்துக்கொள்ள அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் குழாம்

சுனில் அம்ப்ரிஸ், தேவேந்திர பிஷோ, மிகுயெல் கம்மின்ஸ், கிறிஸ் கெய்ல், ஜேசன் ஹோல்டர் (தலைவர்),  கைல் ஹோப்,  ஷாய் ஹோப், அல்சாரி ஜோசப், எவின் லெவிஸ்,  ஜேசன் மொஹமட், அஷ்லே நர்ஸ்,  ரோவ்மன் பவேல்,  மார்லன் சாமுவேல்ஸ், ஜெரம் டெய்லர், கெஸ்ரிக் வில்லியம்ஸ்