மேற்கிந்திய தீவுகளின் ஒரு நாள் அணிக்கு திரும்பியுள்ள கெயில், ஈவின் லூயிஸ்

369
Photo - Randy Brown/AFP

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை (CWI) சுற்றுலா இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள ஒரு நாள் தொடரில், முதல் இரண்டு போட்டிகளிலும் விளையாடவிருக்கும் 14 பேர் அடங்கிய மேற்கிந்திய தீவுகள் குழாமை இன்று (7) வெளியிட்டிருக்கின்றது.

வெளியிடப்பட்டுள்ள குழாமின் அடிப்படையில் அதிரடி துடுப்பாட்ட வீரர்களான கிறிஸ் கெயில் மற்றும் ஈவின் லூயிஸ் ஆகியோர் சிறிய இடைவெளி ஒன்றின் பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் மீண்டும் ஆடவுள்ளனர்.

இலங்கையுடன் மோதவுள்ள தென்னாபிரிக்க டெஸ்ட் குழாம் அறிவிப்பு

கிறிஸ் கெயில் 2018 ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக மேற்கிந்திய தீவுகளின் சொந்த மண்ணில் இடம்பெற்ற ஒரு நாள் தொடரில், மேற்கிந்திய தீவுகள் அணியினை ஒரு நாள் போட்டிகளில் கடைசியாக பிரதிநிதித்துவம் செய்திருந்ததார். இதனை அடுத்து அவர் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் (APL) தொடர், T10 லீக் தொடர் போன்றவற்றில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள் அணியிலிருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் பங்களாதேஷுடனான ஒரு நாள் தொடரில் விளையாடாத மற்றுமொரு வீரரான ஈவின் லூயிஸ் கடந்த ஆண்டு இந்தியாவுடனான தொடரின் போது சொந்த காரணங்களுக்காக மேற்கிந்திய தீவுகள் ஒரு நாள் அணியிலிருந்து விலகியிருந்தார். எனினும், ஈவின் லூயிஸ் T20 போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ஆடிவருவது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் ஒரு புறமிருக்க மேற்கிந்திய தீவுகள் அணி, அறிமுக இடதுகை துடுப்பாட்ட வீரர் நிகோலஸ் பூராணிற்கும் இங்கிலாந்து அணியுடனான ஒரு நாள் போட்டிகளில் வாய்ப்பு தந்திருக்கின்றது. மேற்கிந்திய தீவுகள் அணிக்காக இதுவரையில் 8 T20 போட்டிகளில் ஆடியிருக்கும் பூராண், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அணிக்கு எதிரான T20 போட்டி ஒன்றில் வெறும் 25 பந்துகளுக்கு 53 ஓட்டங்கள் குவித்து அனைவரதும் பாராட்டுக்களைப் பெற்றிருந்தார்.

அதேநேரம் அறிவிக்கப்பட்டிருக்கும் மேற்கிந்திய தீவுகளின் ஒரு நாள் குழாமில் மேலும் சில மாற்றங்களும் இடம்பெற்றிருக்கின்றன. அதன்படி அணித்தலைவரான ஜேசன் ஹோல்டர் மேற்கிந்திய தீவுகள் தரப்பினை வழிநடாத்தும் பொறுப்பினை மீண்டும் எடுத்திருக்கின்றார். இங்கிலாந்து அணிக்கு எதிராக, மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடரை கைப்பற்ற பல விதத்திலும் பங்களிப்புச் செய்த ஜேசன் ஹோல்டர் கடந்த பங்களாதேஷ் அணியுடனான ஒரு நாள் போட்டிகளின் போது தோற்பட்டை உபாதை காரணமாக பங்குபற்றியிருக்கவில்லை. இதேநேரம், உள்ளூர் போட்டிகளில் திறமை காண்பித்து வந்த சுழல் பந்துவீச்சாளர் ஆஷ்லி நேர்ஸ் மேற்கிந்திய தீவுகள் ஒரு நாள் அணியில் மீண்டும் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் அணியுடனான ஒரு நாள் தொடரில் விளையாடியிருந்த துடுப்பாட்ட வீரர்களான மார்லன் சாமுவேல்ஸ், சந்தர்போல் ஹேம்ராஜ், கெய்ரன் பவல் மற்றும் சுனில் அம்ப்ரிஸ் சகலதுறை வீரர்களான ரொஸ்டன் சேஸ், கார்லோஸ் ப்ராத்வைட் ஆகியோருக்கு இங்கிலாந்து அணியுடனான ஒரு நாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆடும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களில் மார்லன் சாமுவேல்ஸ் முழங்கால் உபாதை ஒன்றினை எதிர் கொண்டிருப்பதாலேயே அவருக்கு இங்கிலாந்து அணியுடனான ஒரு நாள் போட்டிகளில் ஆடும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. இதேவேளை, வேகப்பந்து வீச்சாளரான ஷன்னோன் கேப்ரியல் இங்கிலாந்து அணியுடன் பின்னர் இடம்பெறவுள்ள ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடர், பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி பார்படோஸ் (கென்சிங்டன் ஓவல்) நகரில் இடம்பெறும் ஒரு நாள் போட்டியுடன் ஆரம்பமாகின்றது.

மேற்கிந்திய தீவுகள் ஒரு நாள் குழாம் – ஜேசன் ஹோல்டர் (அணித்தலைவர்), பேபியன் அல்லன், தேவேந்திர பிஷூ, டர்ரன் பிராவோ, கிறிஸ் கெயில், சிம்ரோன் ஹெட்மேயர், ஷாய் ஹோப், ஈவின் லூயிஸ், ஆஷ்லி நேர்ஸ், கீமோ போல், நிகோலஸ் பூராண், ரொவ்மன் பவல், கேமர் ரோச், ஒசானே தோமஸ்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க