பெரேராவின் அதிரடியால் இறுதிப் பந்தில் ராங்பூர் அணிக்கு த்ரில் வெற்றி!

1123
AFP PHOTO

பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) தொடரின் சிட்டகொங் விக்கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில், திசர பெரேராவின் அதிரடி ஆட்டத்தால் இறுதிப் பந்தில் ராங்பூர் ரைடர்ஸ் அணி 3 விக்கெட்டுக்களால் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.

பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரின் 28ஆவது போட்டியான சிட்டகொங் விக்கிங்ஸ் மற்றும் ராங்பூர் ரைடர்ஸ் அணிகளுக்கெதிரான ஆட்டம் சிட்டகொங்கில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.  

இலகு வெற்றியுடன் ஆஷஸ் தொடரை ஆரம்பித்த அவுஸ்திரேலியா

தற்பொழுது நடைபெற்று வரும் 2017/2018 ஆண்டு..

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிட்டகொங் அணி 7 விக்கட்டுகளை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணி சார்பில் ஸ்டேன் வேன் சில் 4 பௌண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 40 பந்துகளுக்கு முகங்கொடுத்து 68 ஓட்டங்களையும், சௌம்ய சர்கர் 2 பெளண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 30 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை வீரர்களான லசித் மாலிங்க மற்றும் திஸர பெரேரா ஆகியோர் ராங்பூர் அணி சார்பாக தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இந்நிலையில் 177 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி ராங்பூர் அணி துடுப்பெடுத்தாடியது. அதிரடியாக ஆடிய கிறிஸ் கெய்ல் 33 ஓட்டங்களையும், அணியின் தலைவர் மஷ்ரபி முர்தசா 17 பந்துகளில் 42 ஓட்டங்களையும் விளாசி அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தனர்.

எனினும் பின்னர் சிறப்பாக பந்து வீசிய சிட்டகொங் அணி, ராங்பூர் அணியின் பின்வரிசை வீரர்களின் விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அந்த அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். இதன்படி போட்டியின் இறுதியில் 6 பந்துகளுக்கு 14 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. எனினும் முதல் பந்தில் இரண்டு ஓட்டங்களையும், இரண்டாவது பந்தில் ஆறு ஓட்டத்தையும் விளாசிய பெரேரா, பெறவேண்டிய ஓட்ட எண்ணிக்கையை 6ஆக குறைத்தார். பின்னர் அடுத்த இரண்டு பந்துகளுக்கும் விக்கெட்டுகள் சரிக்கப்பட, 5ஆவது பந்துக்கு திசர பெரேரா 2 ஓட்டங்களை எடுத்தார்.  

போட்டியின் முக்கியமான இறுதி பந்தில் 4 ஓட்டங்களை பெறவேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும் குறித்த பந்தை வீசிய சிட்டகொங் அணியின் டஸ்கின் அஹமட் வைட் பந்தாக வீச, ஒரு பந்துக்கு 3 ஓட்டங்கள் பெறவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. மிக பரபரப்பான இறுதிப் பந்தில் அதிரடியாக ஆறு ஓட்டத்தினை பெற்றுக்கொடுத்து, திசர பெரேரா அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

இலங்கை வீரர்களினால் தொடரும் சில்லெட் சிக்ஸர்ஸ் அணியின் வெற்றியோட்டம்

உபுல் தரங்க மற்றும் தனுஷ்க குணத்திலக்க ஆகியோரின்…

திசர பெரேரா ஆட்டமிழக்காமல் 14 பந்துகளில் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 28 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்த வெற்றியின் பின்னர், இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் 8 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட ராங்பூர் ரைடர்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 4ஆவது இடத்துக்கு முன்னேறியது.

இந்நிலையில் டாக்கா டைனமைட்ஸ் அணிக்கெதிரான கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற போட்டியிலும் திஸர பெரேரா மற்றம் லசித் மாலிங்கவின் அபார பந்துவீச்சில் ராங்பூர் அணி மற்றுமொரு வெற்றியைப் பதிவுசெய்தமை நினைவுகூறத்தக்கது.

குறித்த போட்டியில் 143 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு களமிறங்கிய டாக்கா அணிக்கு இறுதியில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 139 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

இதில் போட்டியின் 17 ஓவரில் தமது வெற்றியிலக்கை நெருங்கிய டாக்கா அணியினர், இறுதி 2 ஓவர்களில் 13 ஓட்டங்களைப் பெறவேண்டியிருந்தது. எனினும், 19 ஓவரை வீசிய இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க, ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றி 3 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்தார்.

இப்போட்டியிலும் சகலதுறையில் பிரகாசித்த திஸர பெரேரா, 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.