வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத் தொடரிலிருந்து அசலங்க, வன்டர்சேய் வெளியேற்றம்

279

இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் தலைவரான சரித் அசலங்க தற்போது நடைபெற்று வரும் கிரிக்கெட் வீரர்களுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து உபாதை காரணமாக வெளியேறியிருக்கின்றார்.

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத் தொடரின் இன்றைய போட்டி ஒன்றில் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியும், ஓமான் அணியும் மோதியிருந்தன.

குறித்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை வளர்ந்து வரும் அணிக்காக நான்காம் இலக்கத்தில் துடுப்பாடக் களமிறங்கிய சரித் அசலங்க 10 ஓட்டங்களை குவித்திருந்த போது, தனது முழங்கால் ஒன்றில் உபாதைக்கு ஆளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் அசலங்க உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டதுடன் வைத்தியசாலைக்கும் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

>>வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத்தை வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை

வைத்திய பரிசோதனை முடிவுகளில் சரித் அசலங்க வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் மேலும் விளையாடுவது அவரை இன்னும் உபாதைக்குள்ளாக்கும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனால், இலங்கை வளர்ந்து வரும் அணித்தலைவரான சரித் அசலங்கவுக்கு வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் முழுமையாக விளையாட முடியாமல் போயிருக்கின்றது.

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் சரித் அசலங்க இல்லாத இலங்கைத் தரப்பு சகலதுறை துடுப்பாட்ட வீரரான சம்மு அஷான் மூலம் வழிநடாத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் ஓமான் அணியுடனான அதே போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் மற்றுமொரு வீரரான ஜெப்ரி வன்டெர்சேயிற்கும் வலது தோற்பட்டையில் உபாதை ஏற்பட்டிருந்தது. இதனால்,  வன்டர்செயும் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடும் வாய்ப்பினை முழுமையாக இழந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சரித் அசலங்க மற்றும் ஜெப்ரி வன்டர்சேய் ஆகிய வீரர்களுக்கு பதிலாக இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியில் ஷெஹான் ஜயசூரிய மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் இணைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய வீரர்கள் இருவரை இழந்த போதிலும் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத் தொடரை ஓமான் அணியுடனான போட்டியில் கிடைத்த வெற்றியோடு ஆரம்பித்திருக்கும் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி தமது அடுத்த போட்டியில் ஆப்கானிஸ்தான் வளர்ந்து வரும் அணியினை சனிக்கிழமை (8) எதிர்கொள்கின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<