சந்திக்க ஹதுருசிங்க பங்களாதேஷை விட்டு இலங்கை அணிக்கு வருவாரா?

376
Chandika Hathurusinghe

பங்களாதேஷ் தலைமைப் பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க தனது ராஜினாமா கடிதத்தை பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு (BCB) கையளித்துள்ளார். அவரது ஒப்பந்தக் காலம் 2019ஆம் ஆண்டு வரை நீடிக்கும் நிலையிலேயே இந்த ராஜினாமா அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த ஜுன் மாதம் கிராஹம் போர்ட் ராஜினாமா செய்தது தொடக்கம் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி காலியாக உள்ள நிலையில், ஹதுருசிங்க 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் மூன்று வருட காலத்திற்கு இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கவிருப்பதாக நம்பகமான வட்டாரங்கள் மூலம் ThePapare.com  க்கு தெரியவருகிறது.

இலங்கை அணியின் முன்னாள் தலைவருக்கு புதிய பொறுப்பு

இலங்கை அணியின் முன்னாள் தலைவரான அஞ்செலோ…

இலங்கை அணியின் நிழல் பயிற்சியாளராக செயற்பட்ட ஹதுருசிங்கவை 2010ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் சபை அப்பதவியில் இருந்து நீக்கியதை அடுத்து அவர் அவுஸ்திரேலியாவை நோக்கி பயணித்தார்.

தான் ஆடிய காலத்தில் ஒரு நிலையான ஆரம்பத் துப்பாட்ட வீரராக செயற்பட்ட ஹதுருசிங்க இலங்கைக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். 10, 861 முதல்தர ஓட்டங்கள் மற்றும் 425 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் ஹதுருசிங்க அதிக அனுபவம் கொண்ட முதல்தர கிரிக்கெட் வீரராக இருந்தார்.

கிரஹம் போர்டின் விலகலுக்கு பின், களத்தடுப்பு பயிற்சியாளர் நிக் போதாஸை இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் சபை நியமித்தது. அவர் இலங்கை அணியின் ஜிம்பாப்வே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் தொடர்களில் பயிற்சியாளராக செயற்பட்டுள்ளார்.

இந்நிலையில், மாதத்திற்கு 30,000 டொலர்கள் (4.6 மில்லியன் ரூபாய்) சம்பளத்திற்கு  ஹதுருசிங்க இணங்கியதாக ThePapare.com  க்கு மேலும் தெரியவருகிறது.   

இலங்கை கிரிக்கெட் சபை தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லி டி சில்வா கடந்த வாரம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியதாவது,

நாம் ஒருசில பயிற்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். நிக் போதாஸ் உட்பட 3-4 பேர் அடங்குகின்றனர். இந்த ஆண்டு இறுதியில் நாம் இந்த நியமனத்தை உறுதி செய்வோம். அடுத்த ஆண்டு ஜனவரியில் நிரந்த தலைமை பயிற்சியாளர் ஒருவர் இருப்பார் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.  

ஹதுருசிங்கவின் பயிற்சியின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் பங்களாதேஷ் பெரும் முன்னேற்றம் கண்டது. 2015 உலகக் கிண்ணப் போட்டியின் காலிறுதிக்கு முன்னேறிய பங்களாதேஷ் 2017 சம்பியன்ஸ் கிண்ணத்தின் அரையிறுதி வரை முன்னேற்றம் கண்டது. அதேபோன்று உள்நாட்டில் நடந்த இரு தரப்பு தொடர்களில் பங்களாதேஷ் அணி பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளையும் வீழ்த்தியது.

டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்த பங்களாதேஷ் சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராகவும் வெளிநாட்டில் இலங்கைக்கு எதிராகவும் இந்த ஆண்டில் முதல் வெற்றியை பெற்றது.   

இலங்கை கிரிக்கெட் சபை கடந்த வாரம் மூன்று ஆண்டு காலத்திற்கு துடுப்பாட்ட பயிற்சியாளராக திலான் சமரவீரவின் சேவையை பெற்றது. எதிர்வரும் இந்திய சுற்றுப் பயணம் முதல் அவரது ஒப்பந்தம் ஆரம்பமாகிறது. ஹதுருசிங்கவின் பரிந்துரையின் கீழ் சமரவீர 2016 ஆம் ஆண்டு பங்களாதேஷின் துடுப்பாட்ட ஆலோசகராக பணியாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.  

புதிய மாற்றங்களை மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரு T20 போட்டி என்பவற்றில் ஆடுவதற்கு அடுத்த ஆண்டு பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.