ஹத்துருசிங்க இலங்கை அணிக்கல்ல, 2019 வரை பங்களாதேஷ் அணிக்கு

451
Chandika Hathurasinghe

இலங்கை அணியின் முன்னாள் வீரரும், பங்களாதேஷ் அணியின் பிரதான பயிற்சிவிப்பாளராக தற்போது கடமையாற்றி வருகின்றவருமான சந்திக ஹத்துருசிங்க, எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள் வரை பங்களாதேஷ் அணியின் பிரதான பயிற்றுனராக கடமையாற்றவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.  

இம்மாத இறுதியில் அவுஸ்திரேலிய அணி, பங்களாதேஷில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்நிலையில் குறித்த தொடரில் பங்கேற்கவுள்ள 20 இளம் வீரர்களைக் கொண்ட பங்களாதேஷ் அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் தற்போது டாக்காவில் நடைபெற்றுவருகின்றது.

இதில், நேற்றுமுன்தினம் நடைபெற்ற பயிற்சிகளின் பின்னர் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக பதவியேற்பது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சந்திக ஹத்துருசிங்க கருத்து வெளியிடுகையில்,

”எதிர்வரும் 2019 உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக, நாம் தற்போதிலிருந்தே ஆயத்தமாகி வருகின்றோம்.  அதற்காக 20 புதுமுக வீரர்களை அணியில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம். உள்ளூரில் இவ்வீரர்களுக்கு போதியளவு வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தால் தேசிய அணியில் உள்ள வீரர்களுடன் இணைத்து மிகச் சிறந்த பயிற்சிகளையும் வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்” என்றார்.  

இதன்படி எதிர்வரும் 2 வருடங்களுக்கு, இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக இணைந்துகொள்ள மாட்டேன் என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் வாய்ப்பை தட்டிப் பறித்த இலங்கை

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ”அயராத முயற்சி மற்றும் வீரர்களின் அர்ப்பணிப்பினால் தற்போது எமது அணி சிறந்த நிலையில் உள்ளது. உலகின் பிரபல அணிகளுக்கு எதிராக நாங்கள் வெற்றிகளைப் பெற்றோம். அதிலும் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நாம் முன்னேற்றம் கண்டுள்ளோம். எமது அடுத்த இலக்கு அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரை வெல்வதாகும்.

அதன்பிறகு தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தில் எமது அணியை சிறப்பாக விளையாடுவதற்கும் நாம் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். எனவே, அணியில் உள்ள சிரேஷ்ட மற்றும் இளம் வீரர்களுடன் தொடர்ந்து கடமையாற்றுவதால் அணியை மேலும் வெற்றியின் பாதையில் கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. உலக கிரிக்கெட்டில் தற்போது பயிற்றுவிப்பாளர் பதவிக்கு அதிக கேள்வி நிலவி வருகின்றது. ஆனாலும் பங்களாதேஷ் அணியுடனான எனது சேவை 2019ஆம் ஆண்டு வரை தொடரும்” எனவும் குறிப்பிட்டார்.

கடந்த மாதம் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் முதல் சுற்றுடன் இலங்கை அணி வெளியேறியமை, களத்தடுப்பு தொடர்பிலான விமர்சனங்கள், மாலிங்கவிளையாட்டுத்துறை அமைச்சர் இடையிலான மோதல் என்பவற்றுக்கு இடையில், ஜிம்பாப்வே அணியுடனான தொடர் ஆரம்பமாவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன் இலங்கை அணியின் பிரதான பயிற்றுவிப்பாளரான கிரஹம் போர்ட் இலங்கையை விட்டு திடீரென வெளியேறியமை போன்ற அம்சங்கள் இலங்கை கிரிக்கெட்டில் ஒரு பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான 43 வயதுடைய கிரஹம் போர்ட், கடந்த வருடம் இரண்டாவது முறையாகவும் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார். எதிர்வரும் 2019ஆம் அண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள் முடிவுறும் வரை அவர் பயிற்றுவிப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக இராஜினாமாச் செய்வதாக கடந்த மாதம் போர்ட் அறிவித்தார்.

ஹேரத்தை பின்தள்ளிய அஷ்வின் இரண்டாமிடத்திற்கு முன்னேற்றம்

எனினும், இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் அணியின் முகாமையாளர் அசங்க குறுசிங்க ஆகியோருடன் இடம்பெற்ற மோதல் நிலையே, போர்ட் பொறுப்பில் இருந்து விலகுவதற்கான கடிதத்தையும் ஒப்படைக்காமல் இவ்வாறு சென்றமைக்கான காரணம் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான ஒரு நிலையில், ஜிம்பாப்வே மற்றும் இந்திய அணிகளுடனான தொடருக்கு இலங்கை அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக, முன்னர் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றிய நிக் போதாஸை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நியமித்திருந்தது.

எனினும், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தான் அணியுடனான தொடருக்கு முன் இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர் ஒருவரை நியமிக்கும் முயற்சியில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது நடைபெற்று வருகின்ற இந்திய தொடரின் பிறகு புதிய பயிற்சியாளர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், அவ்வெற்றிடத்துக்கு இதுவரை 3 உள்ளுர் பயிற்சியாளர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால கூறியிருந்தார்.

இவ்வாறான ஒரு நிலையில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கவனம் பங்களாதேஷ் அணியின் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றுகின்ற சந்திக ஹத்துருசிங்கவின் பக்கம் திரும்பியுள்ளதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.

இலங்கையின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரும், ஆரம்ப பந்து வீச்சாளருமான 48 வயதான சந்திக்க ஹத்துருசிங்கவின் பயிற்றுவிப்பில் உலக கிரிக்கெட் அரங்கில் பங்களாதேஷ் அணி கடந்த 2 வருடங்களில் பல படிகள் முன்னேறியது. குறிப்பாக, இங்கிலாந்து, இலங்கை அணிகளை அண்மையில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகொண்டதுடன், அண்மையில் நிறைவடைந்த சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் அரை இறுதிவரை பங்களாதேஷ் முன்னேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுனர் பதவியை எதிர்வரும் 2019ஆம் ஆண்டு வரை சந்திக ஹத்துருசிங்க ஏற்றுக்கொள்ள மாட்டார் என தாம் நம்புவதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஜ்முல் ஹுசைன் அண்மையில் தெரிவித்திருந்தார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், எந்தவொரு அணிக்கும் அவரைப் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்ய முடியும். ஆனால் நாம் அவரை 2019ஆம் ஆண்டு இடம்பெறும் உலகக் கிண்ணப் போட்டிகள் வரை ஒப்பந்தம் செய்துள்ளோம். எனவே, அவர் எமது அணியுடன் தொடர்ந்து இருப்பார் என நாம் நம்புகிறோம்” என்றார்.

எனவே, ஹத்துருசிங்கவினால் நேற்றுமுன்தினம் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்ட இக்கருத்தானது நிச்சயம் பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கும், அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் புத்துணர்ச்சியையும், மட்டில்லாத மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

  மேலும் பல செய்திகளைப் படிக்