பார்சிலோனாவுக்கு அதிர்ச்சியளித்த லிவர்பூல் இறுதிப் போட்டியில்

143

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் வரலாற்றில் மிகப்பெரிய மீட்சியை பதிவு செய்த லிவர்பூல் கால்பந்து கழக அணி பலம் கொண்ட பார்சிலோனா அணிக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்து இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் கண்டது.

அரையிறுதியின் முதல் கட்டப் போட்டியில் 3-0 என தோல்வியை சந்தித்த லிவர்பூல் இரண்டாவது கட்ட ஆட்டத்தில் 4-0 என எதிர்பாராத வெற்றியை பெற்று 4-3 என்ற மொத்த கோல் வித்தியாசத்தில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

லிவர்பூலின் சம்பியன்ஸ் லீக் கனவுக்கு சவால் விட்ட மெஸ்ஸி

லியோனல் மெஸ்ஸி இரண்டாவது பாதியில் …………

தனது சொந்த மைதானமான அன்பீல்டில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற இரண்டாம் கட்ட அரையிறுதியில் பெரும் பின்னடைவுடன், தனது முன்னணி வீரர்களான மொஹமட் சலாஹ் மற்றும் ரொபர்டோ பெர்மினோ ஆகியோர் காயம் காரணமாக விளையாடாத நிலையிலேயே களமிறங்கியது.

எனினும் பதில் முன்கள வீரராக வந்த டிவொக் ஒரிகி மற்றும் பாதி நேரத்தில் மாற்று வீரராக வந்த ஜோர்ஜினோ விஜ்னால்டும் இருவரும் இரட்டைக் கோல்கள் பெற்று அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தனர்.  

ஐரோப்பிய கிண்ணம் அல்லது சம்பியன்ஸ் லீக் வரலாற்றில் முதல் கட்ட அரையிறுதியில் மூன்று கோல் வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்த நிலையில் அதனை விஞ்சி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் கண்ட மூன்றாவது அணியாக லிவர்பூல் பதிவானது. இதற்கு முன்னர் 1970-71 இல் பனதினைகோஸ் மற்றும் 1985-86 இல் பார்சிலோன அணிகள் இவ்வாறு அதிர்ச்சி கொடுத்துள்ளன.

இதன்படி லிவர்பூல் அணி இன்று (08) நடைபெறும் அஜெக்ஸ் அம்ஸ்டர்டாம் மற்றும் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் அணிகளுக்கு இடையிலான மற்றைய இரண்டாம் கட்ட அரையிறுதியின் நிறைவில் வெற்றி பெறும் அணியுடன் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. லண்டனில் நடந்த இதன் முதல் கட்ட அரையிறுதியில் அஸஜக்ஸ் அம்ஸ்டர்டாம் அணி 1-0 என வெற்றி பெற்றது.

லியோனல் மெஸ்ஸி, முன்னாள் லிவர்பூல் வீரர்களான லுவிஸ் சுவாரஸ் மற்றும் பிலிப்போ கொடின்ஹோவின் நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே லிவர்பூல் தனது சொந்த ரசிகர்கள் முன் போட்டியை ஆரம்பித்தது.  

போட்டியை தன்வசமாக்குவதற்கு ஆரம்பத்திலேயே போராடிய லிவர்பூல் வீரர்களுக்கு ஏழாவது நிமிடத்தில் பலன் கிடைத்தது. ஜோர்டி அல்பா தலையால் முட்டி பந்தை தடுக்க முயன்றபோது அது நேராக ஜோர்டன் ஹென்டர்சனின் கால்களுக்கு சென்றது லிவர்பூல் அணிக்கு சாதகமானது. முன்னேறிச் சென்ற லிவர்பூல் வீரர்கள் டிவொக் ஒரிகி மூலம் கோல் புகுத்தினர்.    

முதல் பாதியில் பதில் கோல் திருப்பும் பார்சிலோனாவின் முயற்சிகள் வெற்றி அளிக்கவில்லை. இரு முறை மெஸ்ஸி கோலை நோக்கி செலுத்திய பந்து அகலப் பறந்தன.   

முதல் பாதி: லிவர்பூல் 1 – 0 பார்சிலோனா

தொடர்ந்து ஆரம்பமான இரண்டாவது பாதி ஆட்டத்தின் ஆரம்ப நிமிடங்களே பார்சிலோன அணிக்கு பெரும் திருப்பமாக மாறியது. 54ஆவது நிமிடத்தில் டிரென்ட் அலெக்சான்டர்ஆர்னோல்ட் தாழ்வாக பரிமாற்றிய பந்தை பெற்ற விஜ்னால்டும் பெனால்டி பெட்டியின் நடுவில் இருந்து வேகமாக உதைத்து கோலாக மாற்றினார்.

இலங்கை கால்பந்து அணியின் உதவி பயிற்சியாளராக ஜானக்க சில்வா

இலங்கை தேசிய கால்பந்து அணியின்…….

அடுத்த இரண்டு நிமிடங்கள் மாத்திரமே கடந்த நிலையில் மீண்டும் செயற்பட்ட விஜ்னால்டும், செர்டன் ஷாகிரி வழங்கிய பந்தை தலையால் முட்டி கோலாக மாற்றினார். இதன்மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான மொத்த கோல் வித்தியாசம் 3-3 என சமநிலை பெற்றதோடு அடுத்த கோலை பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னெறும் வாய்ப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் 79 ஆவது நிமிடத்தில் ஆர்லோட் உதைத்த கோனர் கிக்கை வேகமாகப் பெற்ற ஒரிகி அதனை அபாரமாக கோலாக மாற்றி அரங்கில் கூடியிருந்த தமது ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தார்.

லிவர்பூல் அணி ஐரோப்பிய கிண்ணம் அல்லது சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இது ஒன்பதாவது தடவையாகும். இந்நிலையில் வரும் ஜூன் முதலாம் திகதி நடைபெறவுள்ள சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ஆறாவது முறையாக கிண்ணத்தை வெல்லும் எதிர்பார்ப்புடனேயே லிவர்பூல் களமிறங்கவுள்ளது.

மறுபுறம் பார்சிலோனா கடைசியாக ஆடிய நான்கு சம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் மூன்றில் இறுதிப் போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறியுள்ளது.   

முழு நேரம்: லிவர்பூல் 4 – 0 பார்சிலோனா

கோல் பெற்றவர்கள்

லிவர்பூல் டிவொக் ஒரிகி 7′, 79, ஜோர்ஜினோ விஜ்னால்டும் 54′, 56′