லிவர்பூலுடனான இறுதிப் போட்டிக்கு டொட்டன்ஹாம் தகுதி

159

லுகாஸ் மௌரோ 96 ஆவது நிமிடத்தில் பெற்ற அதிரடி கோல் மூலம் அஜெக்ஸ் அணிக்கு எதிராக 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர் அணி ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல் முறை முன்னேற்றம் கண்டது.

பார்சிலோனாவுக்கு அதிர்ச்சியளித்த லிவர்பூல் இறுதிப் போட்டியில்

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் வரலாற்றில் ………..

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கின் இரண்டாம் கட்ட அரையிறுதிப் போட்டியாக புதன்கிழமை (08) நடைபெற்ற இந்த ஆட்டத்தில் எஜெக்ஸ் அணி முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற்று உறுதியான நிலையில் இருந்தபோதும், இரண்டாவது பாதி ஆட்டத்தில் லுகாஸ் மௌரோ ஹெட்ரிக் கோல் பெற்று டொட்டன்ஹாம் அணிக்கு மீட்சி கொடுத்தார்.

முதல் கட்ட அரையிறுதியில் நெதர்லாந்தின் எஜெக்ஸ் அணி 1-0 என வெற்றி பெற்று இருந்த நிலையில் தனது சொந்த மைதானமான அம்ஸ்டர்டாம் அரங்கில் இரண்டாம் சுற்று அரையிறுதியில் களமிறங்கியது. இரண்டு கட்ட அரையிறுதிகள் முடிவின்போது 3-3 என்ற மொத்த கோல் வித்தியாசத்தில் சமநிலை பெற்றபோதும் டொட்டன்ஹாம் அணி எதிரணி மைதானத்தில் அதிக கோல்கள் பெற்றதால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பெற்றுக்கொண்டது.  

இதன்மூலம் 1996 ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறை சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை அஜெக்ஸ் தவறவிட்டது. மறுபுறம் 2008 ஆம் ஆண்டுக்குப் பின் சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு முதல் முறை இரு இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.

பலம்கொண்ட பார்சிலோனா அணிக்கு எதிராக கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மற்றைய இரண்டாம் கட்ட அரையிறுதியில் லிவர்பூல் 4-0 என்ற கோல் வித்தியாசத்தில் அதிர்ச்சி வெற்றி ஒன்றை பெற்று மொத்த கோல் அடிப்படையில் 4-3 என்ற முன்னிலையுடன் இறுதிப் போட்டிக்கு முன்னெற்றம் கண்டமை குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிக்காக இலங்கை அணி ஒருமாத திட்டம்

மகாவு அணிக்கு எதிரான பிஃபா உலகக் ……..

எனினும், புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் 35 நிமிடங்களுக்குள்ளேயே எஜெக்ஸ் அணியால் முன்னிலை பெற முடிந்தது.

போட்டி ஆரம்பித்து 5ஆவது நிமிடத்தில் லசே ஷோன் உதைத்த கோனர் கிக்கை மதிஸ் டி லைட் தலையால் முட்டி கோலாக மாற்றினார்.

தொடர்ந்து 35ஆவது நிமிடத்தில் துசான் டெடிக் பரிமாற்றிய பந்தை பெனால்டி பெட்டியின் இடது பக்கமிருந்து ஹகிம் சியச் வலைக்குள் செலுத்தினார். இந்த இரண்டு கோல்கள் மூலம் எஜெக்ஸ் அணி 2-0 என முன்னிலை பெற்றதோடு 3-0 என மொத்த கோல் வித்தியாசத்திலும் உறுதியான நிலையில் இருந்தது.

முதல் பாதி ஆட்டம் முடிவில் டொட்டன்ஹாம் ஒரு கோலையும் பெறாத நிலையில் அந்த அணி இறுதி போட்டிக்கு முன்னேற மிகக் குறுகிய வாய்ப்பே இருந்தது.

முதல் பாதி: எஜெக்ஸ் 2 – 0 டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர்

இரண்டாம் பாதி ஆட்டம் ஆரம்பிக்கும்போது அரங்கில் கூடியிருந்த எஜெக்ஸ் ரசிகர்கள் பாட்டுப்பாடி உற்சாகமாக இருந்தனர். மறுபுறம் டொட்டன்ஹாம் மைதானத்தில் அதிக பதற்றத்தை வெளிப்படுத்தியதை காண முடிந்தது.

முதல் முறையாக சம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் டொட்டன்ஹெம்

சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட தொடரின் ……..

இந்நிலையில் பிரேசிலின் லுகாஸ் மௌரோ ஆட்டத்தை முழுமையாக திசை திருப்பினார். 55ஆவது நிமிடத்தில் டெலே அலியின் உதவியோடு கோல் புகுத்திய அவர் மூன்று நிமிடங்கள் கழித்து மற்றொரு அபார கோலை போட்டார்.

கடைசி நேரத்தில் போட்டியின் பரபரப்பு அதிகரிக்க ஆட்டம் முடியும் தறுவாயில் மௌரோ தனது ஹெட்ரிக் கோலை பொற்றார். 16 யார்ட் தூரத்தில் இருந்து அவர் அந்த கோலை புகுத்தி மைதானத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

இதன்படி, வரும் ஜூன் முதலாம் திகதி மெட்ரிட்டில் நடைபெறவிருக்கும் சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் லிவர்பூல் மற்றும் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

முழு நேரம்: எஜெக்ஸ் 2 – 3 டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர்

கோல் பெற்றவர்கள்

எஜெக்ஸ் – மதிஸ் டி லைட் 5′, ஹகிம் சியச் 35′

டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் – லுகாஸ் மௌரோ 55′, 59, 90+6

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<