வலன்சியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த அடலான்டா: டொட்டன்ஹாமுக்கு நெருக்கடி

82

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் 16 அணிகள் சுற்றின் இரண்டு போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (20) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு,

டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர் எதிர் RB லீப்சிக்

டிமோ வோர்னரின் பெனால்டி கோல் மூலம் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர் அணிக்கு எதிரான 16 அணிகள் சுற்றின் முதல் கட்டப் போட்டியில் ஜெர்மனி கழகமான லீப்சிக் 1-0 என வெற்றியீட்டியது. 

லிவர்பூல், PSG அணிகளுக்கு எதிர்பாராத தோல்வி

டொட்டன்ஹம் கழகத்தின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய லீப்சிக் கழகம் வெளி மைதானத்தில் தீர்க்கமான கோல் ஒன்றை பெற்றதன் மூலம் இங்கிலாந்து கழகத்திற்கு காலிறுதிக்கு முன்னேறுவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

டொட்டன்ஹம் கழகம் காயத்தால் அவதிப்படும் தனது முக்கிய வீரர்களான ஹர்ரி கேன் மற்றும் சொன் ஹியுங் மின் இன்றி முன்களத்தில் டெலி அலி மற்றும் லூகாஸ் மௌரோவுடனேயே இந்தப் போட்டியில் களமிறங்கியது.    

எனினும் போட்டியை வேகமாக ஆரம்பித்த லீப்சிக் கழகம் இரண்டாவது நிமிடத்திலேயே வோர்கர் மூலம் கோல் புகுத்தியபோதும் அது ஓப் சைடாக இருந்தது. 

பதிலடி கொடுத்த டொட்டன்ஹாம் கழக வீரர் ஸ்டீவ் பெர்க்விஜ் உதைத்த பந்தை லீப்சிக் கோல்காப்பாளர் பீட்டர் குலாசி தடுத்தார். போட்டியின் 36 ஆவது நிமிடத்தில் ஜெர்மனி கழகம் கோல் பெறுவதை நெருங்கியது. டிமோ வோர்னருக்கு எதரணி கோல் கம்பத்திற்கு நெருக்கமாக பந்து கிடைத்த நிலையில் அவரது உதையை ஹீகோ லொரிஸ் தடுத்தார்.  

போட்டி ஒரு மணி நேரத்தை எட்டும்போது பெனால்டி பெட்டிக்குள் கோனார்ட் லெய்மர் மீது பென் டேவிஸ் இழைத்த தவறினால் லீப்சிக் அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. 

அந்த ஸ்பொட் கிக்கை டிமோ வோர்னர் கோலாக மாற்றினார். டிமோ வோர்னர் இந்தப் பருவத்தில் சம்பியன்ஸ் லீக் தொடரில் பெறும் ஏழாவது கோல் இதுவாகும். 

ஒரு சில விநாடிகளிலேயே லீப்சிக் கழகம் மற்றொரு கோலை பெற நெருங்கியபோது பட்ரிக் சிக் உதையை லொர்ரிஸ் தடுத்தார். 

கியோவானி லோ கெல்சோவின் ப்ரீ கிக் உதையின்போது டொட்டன்ஹாம் அணிக்கு பதில் கோல் திருப்ப சிறந்த வாய்ப்பு ஒன்று கிடைத்தபோதும் எதிரணி கோல்காப்பாளர் அதனை சிறப்பாக தடுத்தார். அதேபோன்று கடைசி நேரத்தில் மௌரோ தலையால் முட்டிய கோல் முயற்சியும் தவறிப்போனது.   

இந்த இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது கட்டப் போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஜெர்மனி கழகத்தின் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி இங்கிலாந்து கழகமான டொட்டன்ஹாமுக்கு வாழ்வா சாவா என்ற ஆட்டமாக அமையும். 

அடலான்டா எதிர் வலன்சியா

முதல் முறை ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடும் அடலான்டா அணி தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வலன்சியாவுக்கு எதிரான 16 அணிகள் சுற்றின் முதல் கட்டப் போட்டியில் 4-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது. 

தனது சொந்த நாட்டில் நடைபெற்ற போட்டியில் இத்தாலி கழகமான அடலான்டா போட்டி முழுவதும் தனது முன்னிலையை தக்கவைத்துக்கொள்ள முடிந்தது. அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் அந்த அணி காலிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

கடந்த பருவ சீரி A தொடரில் எவரும் எதிர்பார்க்காத வகையில் மூன்றாவது இடத்தை பிடித்தே அடலான்டா இம்முறை சம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெற்றது. 

எனினும் தனது சொந்த மைதானமான அட்லெடி அசூரி ஐரோப்பிய போட்டிகளை நடத்தும் தரத்திற்கு இல்லாததால் மிலானின் சான் சீரோவிலேயே அந்த அணியால் சொந்த ஆட்டத்தை விளையாட முடிந்தது.  எனினும் சம்பியன்ஸ் லீக் ஆரம்ப போட்டிகள் மூன்றில் தோற்று பின்னடைவை சந்தித்த நிலையிலேயே மன்செஸ்டர் சிட்டியுடனான போட்டியை சமன் செய்து அடுத்து இரண்டு போட்டிகளிலும் வெற்றி ஈட்டி நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.    

இந்நிலையில் 40,000 இற்கும் அதிகமான அடலான்டா ரசிகர்கள் 51 கிலோமீற்றர்கள் பயணித்தே தனது அணி விளையாடுவதை காண வந்தார்கள்.  

ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் ஸ்பெயின் கழகமான வலன்சியாவுக்கு எதிராக முதல் பாதியில் அடலான்டா 2-0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்றது. ஹான்ஸ் ஹெட்போர் (Hans Hateboer) மற்றும் ஜோசிப் லிசிக் (Josip Iličić) அந்த கோல்களை பெற்றனர்.   

தொடர்ந்து 57 ஆவது நிமிடத்தில் ரெமோ பிரியுலர் (Remo Freuler) பெற்ற கோல் மூலம் அடலான்டா 3-0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்றது. மீண்டும் செயற்பட்ட ஹான்ஸ் ஹெட்போர் அடலான்டாவுக்காக 4 ஆவது கோலை புகுத்தினார். 

Thepapare கால்பந்து சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஸாஹிரா தகுதி

சம்பியன்ஸ் லீக்கில் இரு முறை இறுதிப் போட்டிவரை முன்னேறி இருக்கும் வலன்சியா செய்வதறியாத நிலையில் 66 ஆவது நிமிடத்தில் டானிஸ் கிறிசோ (Denis Cheryshev) மூலம் கோல் ஒன்றை பெற்றது.

வலன்சியாவின் சொந்த மைதானமான மெஸ்டெல்லா அரங்கில் இரண்டாம் கட்டப் போட்டியில் வரும் மார்ச் 10 ஆம் திகதி அட்லான்டா ஆடவுள்ளது. 

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<