இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவியாக மீண்டும் சமரி அட்டபத்து

247
Getty Images

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியுடன் அடுத்த வாரம் காலியில் ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான 15 பேர் அடங்கிய இலங்கை மகளிர் குழாம் இன்று (6) இலங்கை கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிராக வெளியிடப்பட்டுள்ள இந்த இலங்கை குழாமின் தலைவியாக சிரேஷ்ட துடுப்பாட்ட வீராங்கனையான சமரி அட்டபத்து பெயரிடப்பட்டுள்ளார்.

இதன் மூலம் மலேசியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் பங்குபற்றாது போயிருந்த சமரி அட்டபத்து மீண்டும் இலங்கை அணியில் இணைகின்றார்.

இதேநேரம் ஆசியக் கிண்ணத்தில் பங்குபற்றாது போயிருந்த சகலதுறை வீராங்கனையான அமா காஞ்சனாவும் இலங்கை மகளிர் அணிக்கு மீண்டும் திரும்புகின்றார்.

ஆசிய கிண்ணமும் லசித் மாலிங்கவின் அசத்தல் பந்து வீச்சும்

அத்தோடு இந்த ஆண்டு பாகிஸ்தான் மகளிர் அணியுடன் நடைபெற்ற ஒரு நாள் தொடரில் விளையாடாது போயிருந்த உதேஷிகா பிரபோஷானிக்கும் இந்திய அணியுடனான ஒரு நாள் தொடரில் இலங்கையை மீண்டும் ஒரு நாள் போட்டிகளில் பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

இவர்கள் தவிர 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரிலேயே கடைசியாக விளையாடிய விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீராங்கனை அனுஷ்கா சன்ஜீவனி மற்றும் வேகப்பந்து வீராங்கனை நிலக்ஷி டி சில்வா ஆகியோரும் மீண்டும் இலங்கையின் ஒரு நாள் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவ்விரண்டு வீராங்கனைகளும் T20 போட்டிகளாக நடைபெற்ற மகளிருக்கான அண்மைய ஆசியக் கிண்ணத்தில் நல்ல பெறுபேற்றை காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்னும், பாகிஸ்தான் மகளிர் அணியுடனான T20 தொடரில் இந்த ஆண்டு விளையாடிய மத்திய வரிசை துடுப்பாட்ட வீராங்கனை இமால்கா மென்டிஸூம் 2016 ஆம் ஆண்டிற்கு பின்னர் ஒரு நாள் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை மகளிர் அணியின் வழமையான விக்கெட்காப்பு வீராங்கனையான ரெபெக்கா வன்டோர்ட் அண்மைய போட்டிகளில் பிரகாசிக்காத காரணத்தால் அவருக்கு இந்திய ஒரு நாள் அணியுடனான தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்திய மகளிர் அணியுடனான குழாம் – சமரி அட்டபத்து (அணித்தலைவி), பிரசாதினி வீரக்கொடி, அனுஷ்கா சனஜீவனி, நிப்புனி ஹன்சிக்கா, ஹாசினி பெரேரா, திலானி மனோதரா, சஷிகலா சிறிவர்தன, நிலக்ஷி டி சில்வா, இமால்கா மெண்டிஸ், சிரிபாலி வீரக்கொடி, சுஹந்திகா குமாரி, இனோக்கா ரணவீர, உதேஷிகா பிரபோதினி, அமா காஞ்சனா, கவீஷா டில்ஹாரி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க