சில பல தடைகள் இருந்தாலும், டயலொக் ரக்பி லீக் போட்டிகளில் தமது இறுதிப் போட்டியில் CH & FC அணியை 59-03 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்று, தொடர்ந்து 3ஆவது முறையாகவும் லீக் கிண்ணத்தை மலையகத்தின் அசைக்க முடியாத அணியான கண்டி விளையாட்டுக் கழகம் வென்றது.

இவ்வருடம் தமது முதல் போட்டியில் CH & FC அணியை வென்று லீக்கினை ஆரம்பித்த கண்டி கழகமானது, மீண்டும் அவ்வணியை இறுதிப் போட்டியில் வென்று மகுடத்தை சூடியுள்ளது.

இப்போட்டியில் வெற்றி பெற்றாலும், மிக மோசமான விளையாட்டை கண்டி அணி வெளிப்படுத்தியது எனலாம். எனினும் துர்திஷ்டவசமாக CH & FC  அணியால் அந்த தவறுகளை பயன்படுத்தி முன்னேற முடியவில்லை.

கண்டி அணி 14ஆவது நிமிடத்தில் முதல் ட்ரையை ஷெகான் பதிரன மூலமாக பெற்றுக்கொண்டது. ஹேஷான் சில்வா CH & FC அணியின் வீரர்களை தாண்டி சென்று பத்திரனவிற்கு பந்தை வழங்க பத்திரன ட்ரை வைத்தார். அர்ஷாத் ஜமால்தீன் உதையை வெற்றிகரமாக உதைத்தார். (CH & FC 00 – கண்டி 07)

மீண்டும் ஒரு முறை கண்டி அணி ட்ரை வைத்தது. இம்முறை அர்ஷாத் ஜமால்தீன் வீரர்களை கடந்து சென்று லவங்க பெரேராவிற்கு ஓப் லார்ட் மூலம் பந்தை வழங்க, லவங்க பெரேரா ட்ரை வைத்தார். (CH & FC சி 00 – கண்டி 12)

அதன் பிறகு கண்டி அணியின் தனுஷ் தயான் சிறப்பான ட்ரை ஒன்றை வைத்தார். கண்டி அணியின் 10 மீட்டர் எல்லையினுள் பந்து காணப்பட்ட பொழுதும், பந்தை பெற்றுக்கொண்ட தயான், தனது வேகத்தை பயன்படுத்தி சிறப்பாக ஓடி சென்று கம்பத்தின் அடியில் ட்ரை வைத்தார். அர்ஷாத் இலகுவான உதையை தவறவிடவில்லை. (CH & FC 00 – கண்டி 19)

26ஆவது நிமிடத்தில் பெனால்டியின் மூலமாக CH & FC அணி போட்டியின் தமது ஒரே புள்ளியை பெற்றுக்கொண்டது. ஷம்ரி புராஹ் சிறப்பாக உதைத்து 3 புள்ளிகளை CH & FC அணிக்கு பெற்றுக்கொடுத்தார். (CH & FC 03 – கண்டி 19)

புராஹ், முதல் பாதியில் CH & FC அணி சார்பாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பொழுதும், இரண்டாவது பாதியில் ஏற்பட்ட உபாதையின் காரணமாக மைதானத்திலிருந்து வெளியேறினார்.

முதல் பாதி நிறைவடைவதற்கு முன்னர் கண்டி அணி ஸ்ரீநாத் சூரிய பண்டார மூலமாக மற்றுமொரு ட்ரையைப் பெற்றுக்கொண்டது. அர்ஷாத் உதையை தவறவிடவில்லை.

முதல் பாதி : CH & FC 03 – 26 கண்டி விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதியில் முழுக்க முழுக்க கண்டி அணியே ஆதிக்கம் செலுத்தியது. 2ஆம் பாதி ஆரம்பிக்கும் உதையை ரோகித ராஜபக்ஷ 10 மீட்டர் தாண்டி உதையாததால், கண்டி அணிக்கு ஸ்க்ரம் வழங்கப்பட்டது.  ஸ்க்ரம் மூலம் பந்தை பெற்றுக்கொண்ட ஷெகான் பத்திரன ட்ரை கோடு வரைக்கும் ஓடிச் சென்ற பொழுதும் CH & FC வீரர்களால் கோட்டிற்கு சற்று முன்னர் தடுக்கப்பட்டார். எனினும் பின்னாலே ஓடிச் சென்ற அர்ஷாத் ஜமால்தீன் பந்தை அவரிடம் இருந்து பெற்றுக்கொண்டு ட்ரை வைத்ததோடு, அவரே கொன்வெர்சனையும் சிறப்பாக உதைத்தார். (CH & FC 03 – கண்டி 33)

10 நிமிடங்களின் பின்னர் இரண்டு கொன்வேர்ட்டட் ட்ரை மூலம் கண்டி அணி CH & FC அணியை மேலும் பின் தள்ளியது. தமது முன் வரிசை வீரர்களை பயன்படுத்தி CH & FC அணிக்கு அழுத்தம் கொடுத்த கண்டி அணி, முதல் ட்ரையை அனுருத்த வெளிவார மூலமாக வைத்தது. இரண்டாவது ட்ரையை அர்ஷாத் ஜமால்தீன் வைத்த பொழுதும், இம்முறையும் வெளிவார அவருக்கு உதவி செய்தார். (CH & FC 03 – கண்டி 47)

கண்டி அணி, இறுதி விசிலிற்கு முன்னராக மேலும் இரண்டு ட்ரை வைத்து அசத்தியது. ஸ்ரீநாத் சூரியபண்டார தனது தனித் திறமையை வெளிக்காட்டி ட்ரை வைத்தார். நடு கோட்டிலிருந்து பந்தை பெற்றுக்கொண்ட ஸ்ரீநாத் ஓடி சென்று, CH & FC யின் இறுதி வீரருக்கு மேலாக பந்தை உதைத்து, மீண்டும் ஓடி சென்று பந்தை பெற்றுக்கொண்டு ட்ரை வைத்து அசத்தினார்.

அவரை தொடர்ந்து 76ஆவது நிமிடத்தில் லவங்க பெரேரா போட்டியில் தனது இரண்டாவது ட்ரையை வைத்து, கண்டி அணிக்கு சிறப்பான வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

முழு நேரம் : CH & FC 03 – 59 கண்டி விளையாட்டுக் கழகம்

ThePapare.com இன் போட்டியின் சிறந்த வீரர் – அர்ஷாத் ஜமால்தீன் (கண்டி விளையாட்டுக் கழகம்)

புள்ளிகளை பெற்றுக்கொண்டோர்

கண்டி விளையாட்டுக் கழகம்

லவங்க பெரேரா 2T, அர்ஷாத் ஜமால்தீன் 2T & 6C, தனுஷ் தயான் 1T, ஸ்ரீநாத் சூரியபண்டார 2T, அனுருத்த வெளிவார 1T, ஷெகான் பத்திரன 1T  

CH & FC

ஷம்ரி புராஹ் 1P