இம்முறை இடம்பெறவுள்ள FA கிண்ண கால்பந்து தொடர் குறித்து விளக்கமளிக்கும் முகமாக நேற்று செய்தியாளர் மாநாடொன்று நடைபெற்றது. இதன்போது 2016/2017 ஆம் பருவகால கார்கில்ஸ் புட் சிட்டி FA கிண்ண தொடர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்தொடரிற்கு கார்கில்ஸ் புட் சிட்டி தொடர்ச்சியாக நான்காவது வருடமாக கார்கில்ஸ் (சிலோன்) PLC மற்றும் இலங்கை கால்பந்து சம்மேளனத்துடன் இணைந்து அனுசரணை வழங்கவுள்ளது.

நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் அறிவிக்கப்பட்டதன்படி இந்த பருவகாலப் போட்டிகளில் 65 கால்பந்து லீக்களிலிருந்து 672 அணிகள் போட்டியிடவுள்ளன. இதில் மொத்தமாக இடம்பெறவுள்ள 671 போட்டிகளும் நொக்அவுட் முறையில் இடம்பெறும்.

தொடரின் இறுதிப் போட்டி அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், சம்பியனாகும் அணிக்கு 7 லட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்படும்.

லீக் மட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்படும் 60 சம்பியன் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். குறித்த 60 அணிகளுடன் 6 சேவை அணிகள் மற்றும் ஏற்கனவே 2015ஆம் பருவகால FA கிண்ணத்தில் இறுதி 32 அணிகளாக தெரிவாகிய அணிகளில் 31 அணிகள் இணையும்.  

தெரிவுசெய்யப்பட்ட 60 அணிகளில் 6 அணிகள் குழுக்கள் முறையில் நேரடியாக 31 அணிகளுடன் இணையும். மிகுதி 54 அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் வெற்றி பெறும் 37 அணிகள் அடுத்த சுற்றுக்கு தெரிவு செய்யப்படும். இவ்வணிகள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட 37 அணிகளுடன் இணைந்து 3ஆம் நிலை சுற்றுத்தொடரில் விளையாடும்.

போட்டித்தொடர் ஆரம்பிக்கப்பட முன்பு சென்ற வருட திறமை வெளிப்பாட்டின் அடிப்படையில் 91 அணிகளிலிருந்து 29 அணிகள் தெரிவு செய்யப்படும். 3ஆம் நிலை சுற்றுத் தொடர்களுக்கான போட்டிகள் குழுக்கள் முறையில் தெரிவு செய்யப்படும்.

சென்ற வருடம் நடந்த FA கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் ரினௌன் விளையாட்டுக் கழகத்தை இராணுவப்படை அணி 3-1 என வீழ்த்தி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

கார்கில்ஸ் புட் சிட்டி நிறுவனம், FA கிண்ணத்தின் பிரதான அனுசரணையாளர்களாக இருப்பதுடன், உலகப்புகழ் பெற்ற FA கிண்ண போட்டி முறையை உள்நாட்டில் அறிமுகத்திற்கு கொண்டுவர உதவிய பெருமையும் அவர்களையே சாரும். பல சிறிய அணிகளுக்கு புகழ் பெறக்கூடிய வாய்ப்பு இதன் மூலமே கிடைக்கப்பெறுகிறது.

கார்கில்ஸ் நிறுவனம், இளைஞர் முன்னேற்ற நடவடிக்கைகளுக்காக பல உதவிகள் மற்றும் செயற்திட்டங்களை செய்து வருவதுடன் பல மில்லியன் மக்களிடையே இவ்விளையாட்டை கொண்டு செல்லவும் வழி வகுக்கின்றது.

நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் கார்கில்ஸ் புட்ஸ் நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி தம்மிக்க குருகே கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையில் கால்பந்து விளையாட்டினை வளர்க்க நாம் எம்மால் முடிந்த முழு உதவியையும் வழங்குகின்றோம். வீரர்கள், ஆண்கள், பெண்கள் என அனைவரையும் இவ்விளையாட்டில் ஈடுபட ஊக்குவிப்பு வழங்குகிறோம். சிறு மட்டத்திலிருந்தே அவர்களுக்கு சிறந்த வாய்ப்புகளள் மற்றும் அவர்களது ஆர்வத்திற்கான சன்மானங்களை வழங்கி வருகிறோம். மேலும் வழங்குவோம் எனத் தெரிவித்தார்.

ஆரம்பிக்கப்படவுள்ள இத்தொடரின் மூலம் இலங்கை கால்பந்து ரசிகர்களுக்கு மிகவும் சுவாரஷ்யமான மற்றும் விறுவிறுப்பான போட்டிகளை எதிர்பார்க்கலாம். இலங்கை கால்பந்து ஜாம்பவான்களுடன் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கும் அறிமுகக் கழகங்கள் தமது வாய்ப்பை பயன்படுத்தி வெற்றிக் கிண்ணத்திற்காக எவ்வாறு போராடுவார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.