உலகக் கிண்ணத்தில் தோல்வியின் பயத்தோடு இருக்க போவதில்லை – டு ப்ளெசிஸ்

179

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கும், உலகக் கிண்ணத்திற்கும் பொதுவாக ஒத்துவருவதில்லை. தாம் விளையாடிய அனைத்து உலகக் கிண்ணத் தொடர்களிலும் தென்னாபிரிக்க அணி அழுத்தங்களையே அதிகம் சந்தித்திருந்தது.

இலங்கையின் உலகக் கிண்ண சீருடையை மக்களுக்கு கொண்டு செல்லும் ஒடெல்

இலங்கையின் முன்னணி ஆடை, அணிகலன்…

இவ்வாறானதொரு நிலையில், 2019ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகவுள்ளது. இத் தொடரில் பங்கேற்கும் தென்னாபிரிக்க வீரர்கள் சிறப்பான விடயங்கள் எதனையும் செய்வதற்கு கவனம் செலுத்தாமல், கிரிக்கெட் போட்டிகளை இரசித்து விளையாட வேண்டும் என தென்னாபிரிக்க அணித்தலைவர் டு ப்ளெசிஸ் குறிப்பிட்டுள்ளார்.

“உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டுமெனில், நீங்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என நம்பியிருந்தோம். (கடந்த காலங்களில் உலகக் கிண்ணம் ஒன்றை வெல்ல) நாம் வழமையாக செய்வதை விட, அதிகம் செய்ய வேண்டியது எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், அதில் உண்மை எதுவும் இல்லை.”

“நாங்கள் தொடர்ந்து எதை செய்து வந்தோமோ, அதுவே எமக்கு உதவியாக இருக்கப்போகின்றது. இதற்கு (உதாரணமாக) நாம் எதிரணிகளை வெல்லும் போது விளையாடிய விதத்தினை குறிப்பிட முடியும். எங்களுக்கு அடிப்படையில் எவற்றை செய்ய வேண்டுமோ அவற்றை முடியுமான அளவுக்கு செய்ய வேண்டியிருக்கின்றது. உலகக் கிண்ணத்தை 50 பந்துகளுக்கு சதம் அடிக்கும் துடுப்பாட்ட வீரரை கொண்டிருக்கும் அணியோ அல்லது 20 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை கைப்பற்றும் பந்துவீச்சாளரை கொண்டிருக்கும் அணியோ வெல்வதில்லை.” என பாப் டு ப்ளெசிஸ் பேசினார்.

“நான் அங்கே (உலகக் கிண்ணப் போட்டிகளில்) இருந்திருக்கின்றேன். அதனால் எனக்கு அழுத்தங்கள் பற்றி தெரியும், நான் அவற்றை எப்படி முகம் கொடுப்பது என்பது தொடர்பில் விளங்கியிருக்கின்றேன். எமது வீரர்களை சுதந்திரமாக விளையாட விடுவதன் நோக்கம் அவர்களுக்கு தோல்வி தொடர்பான பயத்தை இல்லாமல் செய்வதாகும். உலகக் கிண்ணப் போட்டிகளும் அப்படியே அமைய வேண்டும். அடுத்த இரண்டு மாதங்களிலும் (உலகக் கிண்ணத் தொடர் நடைபெறும்) இங்கிலாந்தில் எமது வெற்றியினை தீர்மானிக்கப்போவது, நாம் விளையாட்டினை வெளிப்படுத்தும் விதமே. எமது அணி சிறப்பாக செயற்பட இதுவே தேவையாக உள்ளது. ஒவ்வொரு வீரரும் தமது பலம் என்ன என்பதை இனங்காண வேண்டும்.” என்றார்.

அதேநேரம், மேலும் பேசிய டு ப்ளெசிஸ், மனரீதியான (Mental) விடயங்களில் தாழ்ந்துவிடாமல் இருக்க, தமது அணி வீரர்கள் எப்போதும் சக வீரருடன் சார்ந்து இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

தென்னாபிரிக்க அணியினை பொறுத்தவரையில் உலகக் கிண்ணத்தின் போது அவர்களுக்கு பாரிய சவால் ஒன்று காணப்படுகின்றது. அவர்கள் தமது முதல் மூன்று போட்டிகளுக்குள்ளும் உலகக் கிண்ணத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகின்ற இங்கிலாந்து, இந்தியா ஆகிய இரண்டு அணிகளுடனும் மோதவிருக்கின்றனர்.

இப்போட்டிகளில் சிரேஷ்ட வீரர்கள் தென்னாபிரிக்க முதல் பதினொருவர் அணிக் குழாத்திற்குள் வர வேண்டும் எனில், அவர்கள் பயிற்சிப் போட்டிகளில் திறமையினை நிரூபிக்க வேண்டும் என டு ப்ளெசிஸ் கூறியிருந்தார்.

இதேநேரம், தென்னாபிரிக்க அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ஹஷிம் அம்லா, 2018ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் ஒருநாள் போட்டிகளில் ஒரு சதத்தினை மாத்திரம் பெற்றிருக்கின்றார். ஹஷிம் அம்லா குறித்தும் பாப் டு ப்ளெசிஸ் கருத்து தெரிவித்தார்.

“அனுபவம் கொண்ட வீரர்களில் ஒருவராக, அவர் (ஹஷிம் அம்லா) எமக்கு மிக முக்கியமானவராக இருக்கின்றார். அனுபவத்தை கருத்திற் கொண்டே நாம் அவரை தெரிவு செய்திருக்கின்றோம். உங்களால் அனுபவத்தினை புறக்கணிக்க முடியாது. இங்கே, நான் முன்னர் இடம்பெற்ற உலகக் கிண்ணம் போன்ற (பெரிய தொடர்களில் விளையாடிய அனுபவம் பற்றி பேசுகின்றேன். பெரிய தொடர் ஒன்றில் விளையாடுவதன் அர்த்தத்தினை  அவர் புரிந்து வைத்திருக்கின்றார்.”

ஐசிசியின் குற்றச்சாட்டுகளை மறுக்கும் அவிஷ்க குணவர்தன

“அது ஓட்டங்களாக இருப்பதனையோ அல்லது இல்லாததனையோ, எம் எவராலும் உறுதி செய்ய முடியாது. ஆனால், அது ஹஷிம் (அம்லா) கொண்டிருக்கும் ஏனைய விடயம் ஒன்றை பற்றியது. அவர் விளையாடாது போனாலும் அவரது அறிவும், அனுபவமும் எய்டன் மார்க்கம் போன்ற (இளம்) வீரர் ஒருவருக்கு பகிரப்படும். அது நீங்கள் ஹஷிம் (அம்லா) போன்ற ஒருவரிடம் இருந்தே பெற முடியும்.  தான் செய்ய வேண்டியதை முதல் 10 ஓவர்களுக்குள் அவர் (ஹஷிம் அம்லா) அவருடன் (மார்க்கமுடன்) பேசுவதன் மூலம் செய்வார். மேலும் அவர் (அம்லா) அதிக கெளன்டி போட்டிகளிலும் ஆடியிருக்கின்றார். எனவே, அவரது அனுபவம் எமது குழுவிற்கு அத்தியவசியமான விடயம்.”

உலகக் கிண்ணத்தொடருக்கு முன்னர் தென்னாபிரிக்க அணி விளையாடவுள்ள பயிற்சிப் போட்டிகள் பற்றியும் பேசிய டு ப்ளெசிஸ், குறித்த பயிற்சிப் போட்டிகளில் ஹஷிம் அம்லா போன்ற அனுபவம் கொண்ட வீரர் சிறப்பாக செயற்படுவார் எனில் அது தென்னாபிரிக்க அணியின் வீரர்களுக்கு புன்னகையை வரவைக்கும் விடயமாக அமையும் எனக் கூறியிருந்தார்.

மே மாதம் 30ஆம் திகதி இங்கிலாந்து அணியுடன் நடைபெறும் போட்டியோடு உலகக் கிண்ணத் தொடரினை ஆரம்பிக்கும் தென்னாபிரிக்க அணி, குறித்த போட்டிக்கு முன்னர் மே 24ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் முறையே இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளுடன் பயிற்சிப் போட்டிகளில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<