எதிர்வரும் காலங்களில் லஹிறு குமார பந்து வீச்சில் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தை எட்டுவார் என்றும் இதனால், இலங்கை அணி வீரர்களுக்கு ஆச்சரியமான பலாபலன்கள் காத்திருக்கின்றன எனவும் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் சம்பக ராமநாயக்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தனது பந்து வீச்சின் வேகத்தை மேலும் அதிகரிக்கலாம் : லஹிரு குமார

தென்னாபிரிக்க அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பந்து வீசிய 19 வயதுடைய இளம் வீரர் லஹிறு குமார, முதலாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்களை கைப்பற்றி இலங்கைக்காக குறைந்த வயதில் ஒரு இன்னிங்சுக்காக 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய இரண்டாவது இளம் வீரராக வரலாற்றில் இடம் பிடித்தார்.

இந்நிலையில் லஹிறு குமார குறித்து பயிற்சியாளர் சம்பக ராமநாயக்க கருத்து தெரிவிக்கும்பொழுது, லஹிறு குமார வேகப்பந்து வீச்சாளராக அவருடைய 15 வயதில் அடையாளம் காணப்பட்டார். பின்னர், 19 வயதுக்குட்பட்ட போட்டிகளில் சிறப்பான முறையில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார். அவருடைய பந்து வீச்சு, வேகத்தை கொண்டிருந்த போதிலும் அதிகளவில் ஷோர்ட் பிட்ச் பந்துகளை வீசுவதிலும், அதேநேரம் பந்தினை கட்டுப்படுத்துவதிலும் அவரிடம் சில குறைகள் காணப்பட்டன. இளம் வயதில் பந்து வீச்சாளர்கள் அவ்வாறுதான் இருப்பார்கள்.

ஆனால், அதன் பின்னர் சரியான இடத்தில் பந்து வீசுவதற்கும் பந்தை கட்டுப்படுத்துவதற்கும் பயிற்சிகளை அளித்ததன் பின்னர், தற்போது அவர் சரியான லைன் லென்த்தில் பந்து வீசுகிறார். இயற்கையாகவே நல்ல இன்சுவிங் பந்து  வீசக்கூடிய திறமைகளையும் அவர் கொண்டிதிருப்பது விசேஷமாகும்.

தென்னாபிரிக்காவில் வரலாற்றை மாற்றும் விதத்தில் இலங்கை அணி விளையாடுமா?

சராசரியாக மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசிக்கொண்டிருக்கும் அவர் விரைவில் 150 கிலோ மீட்டர் வேகத்தை எட்டுவார் என எதிர்பார்க்கிறோம். தற்போது அவருக்கு 19 வயது மட்டுமே ஆகிறது. பந்து வீசும் நுணுக்கங்களை கற்றுக்கொண்டிருக்கின்றார். மேலும், வலிமைமிக்க அணியின் உலக தரம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர்களை வீழ்த்தி, 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியது பெருமையான விடயமாகும்.

குறிப்பாக, தென்னாபிரிக்க அணியுடனான போட்டியில் நுணுக்கமான முறையில் சில பந்துகளை அவர் வீசினார். மேலும் பந்தை கட்டுப்படுத்தி குறித்த லென்த்தினுள் வீசும் பட்சத்தில் அவரால் உலகில் சிறந்த பந்து வீச்சாளராக உருவெடுக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.        

இலங்கை வீரர் ஒருவர் எதிர்காலத்தில் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீசும் சாத்தியம் காணப்படுமாயின், அது இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.

அவ்வாறு இவர் முன்னேறும் பட்சத்தில், வேகப்பந்து வீச்சை உகந்ததாக அமைத்துக்கொள்ளும் தென்னாபிரிக்கா போன்ற அணிகள் கூட, இலங்கை அணி அங்கு சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும்பொழுது மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்.

மேலும் கருத்து தெரிவித்த சம்பக ராமநாயக்க, லஹிறு குமார மேலும் பயிற்சிகளை மேற்கொண்டு தன்னை மேலும் பலப்படுத்திக்கொள்ள வேண்டும். குறித்த லென்த்தில் நேர்த்தியாக பந்து வீசுவது முக்கியமானதாகும். வேகம் என்பது அவருக்குள் இயக்கையாகவே அமைந்திருக்கிறது. எனினும், பயிற்சிகளின் மூலம் தன்னை பலப்படுத்திக் கொள்வதன் மூலம் லஹிறு குமாரவுக்கு உலகின் சிறந்த பந்து வீச்சாளராக உருவாகலாம் என்று குறிப்பிட்டார்.

அதேசமயம் தனது வேகத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்த துஷ்மந்த சமீர, காயம் காரணமாக 2014ஆம் ஆண்டில் அணியிலிருந்து நீண்ட காலத்திற்கு வெளியேற்றப்பட்டிருந்தார். ஆனால் தென்னாபிரிக்க அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அவர் நேர்த்தியான லைன் மற்றும் லென்த்தில் பந்து வீச அவதிப்பட்டார்.      

இது குறித்து குறிப்பிட்ட சம்பக, எலும்பு முறிவு காரணமாக அணியில் இருந்து வெளியேறியிருந்து, மீண்டும் இணைந்து அணிக்காக பந்து வீசினாலும் உடனடியாக அவரிடம் இருந்து 100 சதவீதம் எதிர்பார்ப்பது கடினம். காயம் ஏற்படுவதற்கு முன்னதாக டுஷ்மந்தவும் எங்களுடைய பந்து வீசாளர்கள் மத்தியில் ஒரு சிறந்த பந்து வீச்சாளர். நிச்சியமாக அவர் மீண்டெழுவார் என நம்புகிறோம். மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீசும் இரண்டு பந்து வீச்சாளர்களை கொண்டிருக்கும் எவ்வணியும் மகிழ்ச்சியாகவே இருக்கும். என்றார்.

இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டுள்ளனர். சுரங்க லக்மால் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் 12 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.  

இது தொடர்பில் பேசிய சம்பக ராமநாயக்க,எமது பந்து வீச்சாளர்கள் ஒவ்வொரு இன்னிங்சிலும் நேர்த்தியாக பந்து வீச வேண்டும். சில நேரங்களில் 100 சதவீதம் நேர்த்தியை காண முடிவதில்லை. முன்வரிசையின் 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய பின்னர் எதிரணியினர் இறுதி விக்கெட்டுக்களில் ஓட்டங்களை குவிக்கின்றனர். குறித்த ஆடுகளங்களில் நேர்த்தியாக பந்து வீசவில்லை. எனினும், வெளிப்படுத்திய திறமைகளின் அடிப்படையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் .

தென்னாபிரிக்காவுடனான போட்டியில் சுரங்க லக்மால் சிறப்பாக பந்து வீசிய போதிலும் நுவான் பிரதீப்பால் விக்கெட்டுக்களை கைப்பற்ற முடியவில்லை. எனினும் லஹிறு குமாரவின் பந்து வீச்சு திறமை ஆச்சரியப்படும் வகையில் அமைந்திருந்தது.

இது போன்ற தென்னாபிரிக்க ஆடுகளங்களில் இதற்கு முன்னதாக பந்து வீசுவது கடினமாக இருந்திருந்தாலும், அது எமது பந்து வீச்சாளர்களுக்கு சிறந்த அனுபவமாகவும் இருக்கும். அதேநேரம் இது எதிர்காலத்தில் சிறந்த பலன்களை பெற்றுக்கொடுக்கும்என்று சம்பக ராமநாயக்க தனது எதிர்பார்ப்பைத் தெரிவித்தார்.

ஆடுகளத்தில் நிறைய புற்கள் இருக்கும் போது எதற்கும் கவலைபடத் தேவையில்லை. தொடர்ந்து சரியான லென்த்தில் பந்து வீச வேண்டும். அதைதான் நாம் சொல்கிறோம். சரியான லென்த்தில் தொடர்ந்து பந்து வீசும்போது எஞ்சிய வேலையை பந்து செய்கிறது. சில வேளைகளில் நாம் தொடர்ந்து சரியான லென்த்தில் பந்து வீசுவதில்லை. ஆடுகளம் நிறைய புற்களுடன் கிடக்கும்பொழுது எந்த லென்த்தில் பந்து வீசுவது என்ற குழப்பம் ஏற்படுகிறது. இடது கை துடுப்பாட்ட வீரர்களுக்கு எப்படி பந்து வீசுவது குறித்து திட்டமிட்டிருந்தோம். எனினும், புற்களுடனான ஆடுகளத்தில் அடிப்படையான பந்து வீச்சினை பின்பற்றினாலே போதுமானது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.  

எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி ஜோஹன்னஸ்பெர்க்கில் நடைபெறவுள்ள மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி இதுவரை பெற்றுக்கொண்டுள்ள அனுபவங்கள் மூலமாக சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தலாம் என்றும் சம்பக மேலும் தெரிவித்தார்.