தெற்காசிய உடற்கட்டழகனான மகுடம் சூடிய புசல்லாவை வீரர் ராஜகுமாரன்

398

நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெற்ற தெற்காசிய உடற்கட்டழகர் போட்டியில் மத்திய மாகாணத்தின் ராஜகுமாரன் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.

முதற்தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட அங்குரார்ப்பண தெற்காசிய உடற்கட்டழகர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் கடந்த 23ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை கத்மண்டுவில் நடைபெற்றது. இந்தப் போட்டித் தொடரில் இலங்கையைப் பிரதிதிநித்துவப்படுத்தி மூன்று வீரர்கள் பங்கேற்றிருந்தனர.

>>றக்பியை கைவிட்டு கிக் பொக்சிங்கில் உலக சம்பியனாகிய அர்ஷான்

இதில் 60 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட எம். ராஜகுமாரன், தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இலங்கை இராணுவத்துக்காக விளையாடி வருகின்ற அவர், அண்மையில் பொலன்னறுவையில் நிறைவுக்கு வந்த தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 60 கிலோ கிராம் எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புசல்லாவையைச் சேர்ந்த இவர், கடந்த சில வருடங்களாக அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் உடற்கட்டழகன் போட்டிகளில் பங்குபற்றி தங்கப் பதக்கங்களை சுவீகரித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேநேரம், ராஜகுமாரனுடன் அதே எடைப் பிரிவில் போட்டியிட்ட மற்றுமொரு இலங்கை வீரரான கொலின் உதயகுமார வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

அத்துடன், 65 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த நிஷதாந்த விக்ரமசிங்க, வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

அண்மைக்காலமாக தேசிய உடற்கட்டழகர் சம்மேளனத்தில் நிலவி வந்த நிர்வாக சிக்கல்கள் மற்றும் முரண்பாடுகள் காரணமாக இலங்கைக்கு சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பு கிடைக்காமல் போனது.

>>உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத்தில் இலங்கை ஏ குழுவில்

எனினும், விளையாட்டுத்துறை அமைச்சரின் தலையீட்டுடன் உடற்கட்டழகர் சம்மேளனத்தின் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், தேசிய உடற்கட்டழகர் சம்மேளன யாப்புக்கு முரணாக அதன் தலைவர் கித்சிறி பெர்னாண்டோ நடந்து கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இந்தப் பிண்ணயில் தான் எந்தவொரு முன் அறிவிப்பும், வீரர்கள் தெரிவும் இடம்பெறாமல் தெற்காசிய உடற்கட்டழகர் போட்டித் தொடரில் 3 வீரர்கள் இலங்கை சார்பாக போட்டியிருந்தனர்.

இதேவேளை, குறித்த போட்டித் தொடருடன் தெற்காசிய உடற்கட்டகழகர் கூட்டு சம்மேளனத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் கத்மண்டுவில் இடம்பெற்றது. இதன்போது 2019ஆம் ஆண்டு பாகிஸ்தானிலும், 2020ஆம் ஆண்டு இலங்கையிலும் தெற்காசிய உடற்கட்டழகர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க