வாய்ப்புகளைத் தவறவிட்ட பாடும்மீன்; காலிறுதியில் புளூ ஸ்ரார்

1395
Blue Star SC vs Singing Fish SC

இவ்வருட FA கிண்ண போட்டியில் அபாரங்காட்டிய யாழ்ப்பாணம் பாடும்மீன் விளையாட்டுக் கழகத்தின் எதிர்பார்ப்புக்களை உடைத்து களுத்துறை புளூ ஸ்ரார் விளையாட்டுக் கழகம், இறுதி நேரத்தில் பாடும்மீன் கொடுத்த அழுத்தத்தினை சமாளித்து 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று FA கிண்ண சுற்றுப்போட்டியின் காலிறுதிக்கு தகுதிபெற்றது. அடுத்த சுற்றுத்தொடரில் பலமாகக் களமிறங்கி வெற்றியை தமதாக்கும் நோக்குடன் இப்பருவகால FA கிண்ண தொடரிலிருந்து வெளியேறுகின்றனர் பாடும்மீன் விளையாட்டுக் கழகம்.

பொலிஸ் அணிக்கு அதிர்ச்சி கொடுத்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள பாடும் மீன்

யாழ்ப்பாணம் துரையாப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற இப்போட்டியில் கடந்த சுற்றில் பொலிஸ் அணியை அவர்களின் சொந்த மைதானத்தில் பெனால்டி உதை மூலம் 4:1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியிருந்த பாடும்மீன் விளையாட்டுக் கழகமும், கடந்த போட்டியில் லியோ அணியை 3:0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய பலம் வாய்ந்த சம்பியன்ஸ் லீக் அணியான புளு ஸ்ரார் அணியும் களங்கண்டிருந்தன.

போட்டி ஆரம்பமாகி சில நிமிடங்களில் புளூ ஸ்ரார் அணியின் நட்சத்திர வீரர் சன்ன உதைந்த பந்து கோல் கம்பத்தின் மூலையில்பட்டு வெளியே தெறித்தது.

மீண்டும் சில நிமிடங்களின் பின்னர் சன்ன உட்செலுத்திய பந்தை திலான் ஜெயந்த சீமோன் தலையால் முட்டி கோல் கம்பத்தினுள் செலுத்த அதனை இலகுவாக தடுத்தார் ராஜ்குமார்.

பந்தினை புளூ ஸ்ரார் அணி தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தனர். எனினும், பந்தை மத்திய களத்தினுள்ளேயே நகர்த்திக் கொண்டிருந்தார்கள். முன் களத்தில் சன்ன மட்டுமிருந்தார், அவரை நோக்கியும் ஓரிரு பந்துகளே நகர்த்தப்பட்டன.

அணித் தலைவர் உட்செலுத்திய பந்தை புளூ ஸ்ராரின் சிவங்க வெளியே அனுப்பினார். கீதன் அடுத்தடுத்து இரண்டு பந்துகளை உள்ளனுப்ப அவற்றை லாவகமாகத் தடுத்த சிவங்க, பஹிரை மத்திய களத்திற்குக் கடத்தினர்.

தெடர்ந்தும் முயற்சித்த பாடும்மீனிற்கு தினேஷ்குமார் தனியொருவராக எடுத்து வந்த பந்தை சேயன் கோலாக மாற்றத் தவறினார்.

பந்தை தமது கட்டுப்பாட்டுள் கொண்டுவந்த புளூ ஸ்ராரிற்கு சில்வா கோலை நோக்கி செலுத்திய பந்தை ராஜ்குமார் நேர்த்தியாகத் தடுத்தார்.

கீதன் மற்றும் தினேஷ்குமாரின் அடுத்தடுத்த முயற்சிகளைத் தடுத்து பந்தை திசைமாற்றினார் சிவங்க.

37ஆவது நிமிடத்தில் சன்ன உட்செலுத்திய பந்தை கோலாக்கினார் மஸீர். அதேவேகத்தில் மஸீர் மேற்கொண்ட அடுத்த முயற்சியின் போது முன்னேறிச்சென்ற கோல்காப்பாளர் ராஜ்குமார் கீழே விழுந்த போதும், மஸீர் எடுத்துச்சென்ற பந்தை சாந்தன் தடுத்தார்.

கீதன் மற்றும் விசோத் மேற்கொண்ட முயற்சிகளை சிவங்க மற்றும் பஹிர் ஜோடி முறியடித்தது.

முறையற்ற விதத்தில் ஜோன் குயின்டனை வீழ்த்திய மொஹமட் நஜீமிற்கு காட்டப்பட்ட மஞ்சள் அட்டையுடன் முதல் பாதி நிறைவிற்கு வந்தது.

முதல் பாதி : புளு ஸ்ரார் விளையாட்டுக் கழகம் 1-0 யாழ்ப்பாணம் பாடும்மீன் விளையாட்டுக் கழகம்

வரலாற்று சாதனைகளை கடந்து வந்துள்ள பாடும் மீனின் இலட்சியம் என்ன?

இரண்டாம் பாதி ஆரம்பமாகி சில நிமிடங்களில் மத்திய கோட்டிற்கு அண்மையில் புளூ ஸ்ராரிற்குக் கிடைத்த ப்ரீ கிக்கின் (Free Kick) மூலம் சில்வா கோலை நோக்கி அனுப்பிய பந்து மயிரிழையில் வெளியே சென்றது. அடுத்த முயற்சியாக பின்கள வீரரான பஹீர் பெனால்ட்டி எல்லைக்கு அருகிலிருந்து உதைந்த பந்தும் கோலிற்கு சற்று உயர்வாக வெளியேறியது.

புளூ ஸ்ராரின் கோல்காப்பாளர் குமார பெர்னான்டோ எதிர்பார்த்திருக்காத தருணத்தில் ஞானபிரதாப் உள்ளனுப்பிய பந்து, அவரின் கைகளில்பட்டு வெளியேற, பாடும்மீனிற்கு கோணர் வாய்ப்புக் கிடைத்தது. அம்முயற்சியும் பாடும்மீனிற்கு சாதகமாக அமையவில்லை.

58ஆவது நிமிடத்தில் சில்வா உள்ளனுப்பிய பந்தினை ஹெடர் மூலம் உள்ளனுப்ப முயற்சித்த திலான் ஜயந்த சிமோன் அதனை தவறவிட்ட போதும், சுதாகரித்துக்கொண்டு காலால் பந்தினை உள்ளனுப்பியதன் மூலம் புளு ஸ்ராரின் முன்னிலையை இரட்டிப்பாக்கினார்.

தமது முதல் கோலைப் பெற தொடர்ந்தும் வேகம் காட்டிய பாடும்மீனின் முன்கள வீரர்களை புளூ ஸ்ராரின் பின்கள வீரர்கள் இலகுவாகக் கட்டுப்படுத்தினர்.

கீதன் வலது புறமிருந்து அணித் தலைவருக்கு வழங்கிய பந்தினை அவர் தவறவிட, விவேகமாக செயற்பட்ட ஜோன் குயின்டன் கோலாக்கி, அமைதியாக இருந்த பாடும்மீனின் அரங்கு நிறைந்த யாழ் ரசிகர்களிடத்தே ஆரவாரத்தை உருவாக்கினார்.

அது வரை அமைதியாய் இருந்த அரங்கில் ஆரவாரம் அதிகரிக்க, ஆட்டமும் சூடுபிடித்தது. அதேவேகத்தில் கீதன் உள்ளனுப்பிய பந்து புளூ ஸ்ராரின் பின்கள வீரர் கைகளில்பட்டு வெளியேற பாடும்மீனிற்கு மற்றுமொரு கோணர் வாய்ப்புக் கிடைத்தது.

கோணர் உதையிலிருந்து கிடைத்த பந்தினை கீதனிடமிருந்து பெற்று ஞானபிரதாப் உள்ளனுப்ப சிறு இடைவெளியில் கோலிற்கு வெளியே சென்றது.

கோல் பெற்றதன் பின்னர் பாடும்மீன் அணியினர் புளு ஸ்ராரின் கோல் பரப்பில் பந்தினை தமது கட்டுப்பாட்டில் வைத்து, அடுத்தடுத்து முயற்சிகளை மேற்கொண்டனர். இவர்களது இறுதிநேர முயற்சிகள் அனைத்துக்கும் தடையாகவிருந்தது புளு ஸ்ரார் அணியின் பஹிர் மட்டுமே.

இறுதி 15 நிமிட ஆட்டத்தினை முழுமையாகக் கட்டுப்படுத்தியது பாடும்மீன் விளையாட்டுக் கழகம்.

மயூரன் உதைந்த பந்து குமார பெர்னான்டோவின் கைகளில் சரணடைய போட்டி நிறைவிற்கு வந்தது.

முழு நேரம்: புளு ஸ்ரார் விளையாட்டுக் கழகம் 2-1 யாழ்ப்பாணம் பாடும்மீன் விளையாட்டுக் கழகம்

போட்டியில் 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்ற புளு ஸ்ரார் அணி காலிறுதியாட்டத்தில் சௌன்டர்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

Thepapare.com இன் ஆட்டநாயகன் – M.N ஃபஹிர் (களுத்துறை புளு ஸ்ரார் விளையாட்டுக் கழகம்)

போட்டியின் பின்னர் Thepapare.com இற்கு கருத்து தெரிவித்த புளு ஸ்ரார் அணியின் பயிற்றுவிப்பாளர் G.P.C கருணாரத்ன “இன்றைய போட்டியை நாங்கள் மிகவும் இலகுவானதாகக் கணித்திருந்தோம். அதுவே போட்டியின் போது எமக்கு ஏற்பட்ட அழுத்தத்திற்குக் காரணமாக அமைந்திருந்தது.” தொடர்ந்தும் அவர் “போட்டியின் போது நடுவர்கள் போட்டி நேரத்தினை விட ஒரு நிமிடத்திற்குக் கூடுதலான நேரத்தினை வழங்கியிருந்தனர்” என நடுவர்களது தவறினை சுட்டிக்காட்டினார்.

பாடும்மீன் அணியின் பயிற்றுவிப்பாளர் உதயனன் கருத்து தெரிவிக்கையில் “புளு ஸ்ராருடன் நாங்கள் முதற் தடவை விளையாடுவதால் முதற்பாதியில் நாங்கள் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தி எமது அணியின் நிலையைக் கணித்தோம். அதனை உள்ளெடுத்துக்கொண்டு இரண்டாவது பாதியில் வாய்ப்புக்களை உருவாக்கினோம். குறிப்பாக இறுதி 15 நிமிடங்களில் அதிக வாய்ப்புக்கள் கிடைத்திருந்தது. எனினும் கோல் பெறமுடியவில்லை. இதற்கு பிரதான காரணம் எமது முன்களம் 18,19 வயதுடைய அனுபவம் குறைந்த வீரர்களால் கட்டமைக்கப்பட்டிருப்பதாகும்” என்றார்.

அவர் எதிர்கால போட்டிகள் குறித்து கருத்து தெரிவிக்கையில் “இத்தொடரில் காட்டிய திறமையை விட மிகச்சிறப்பாக இனிவரும் தொடர்களில் செயற்படுவோம்” என உறுதியாகத் தெரிவித்தார்.

கோல் பெற்றவர்கள்

களுத்துறை புளு ஸ்ரார் விளையாட்டுக் கழகம் – M.M.M மஸீர் 37′, திலான் ஜயந்த சிமோன் 58’

யாழ்ப்பாணம் பாடும்மீன் விளையாட்டுக் கழகம் – ஜோன் குயின்டன் 77′

மஞ்சள் அட்டை

களுத்துறை புளு ஸ்ரார் விளையாட்டுக் கழகம் – மொகமட் நஜீம் 45+3′

யாழ்ப்பாணம் பாடும்மீன் விளையாட்டுக் கழகம் – சாந்தன் 26′, ஞானபிரதாப் 71′