கட்புலனற்றோர் முத்தரப்பு டி-20 தொடரில் இங்கிலாந்தை மீண்டும் வீழ்த்திய இலங்கை

147

இலங்கை, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் கட்புலனற்றோர் கிரிக்கெட் அணிகள் பங்குபற்றலுடன் இடம்பெற்று வருகின்ற முத்தரப்பு டி-20 தொடரின் ஆறாவதும், இறுதியுமான போட்டியில், இலங்கை கட்புலனற்றோர் கிரிக்கெட் அணி இங்கிலாந்து கட்புலனற்றோர் கிரிக்கெட் அணியினை 24 ஓட்டங்களால் வீழ்த்தி தொடரில் 2ஆவது வெற்றியைப் பதிவுசெய்தது.

எனினும், இதுவரை நடைபெற்ற 6 லீக் போட்டிகளின் முடிவில் இந்திய அணி தோல்வியுறாத அணியாக இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்ததுடன், இலங்கை அணி இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற 2 போட்டிகளிலும் வெற்றியைத் தனதாக்கிக் கொண்டது.

கட்புலனற்றோருக்கான டி-20 போட்டியில் இந்தியாவிடம் போராடித் தோற்ற இலங்கை

இதன்படி, நாளை (12) நடைபெறவுள்ள பிளே – ஓப் (Play off) சுற்றுப் போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மீண்டும் பலப்பரீட்சை நடத்தவுள்ளதுடன், இதில் வெற்றி பெறும் அணி எதிர்வரும் சனிக்கிழமை (13) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்திய அணியை சந்திக்கவுள்ளது.

கோவாவின், GCA  மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை கட்புலனற்றோர் கிரிக்கெட் அணித் தலைவர் பிரியந்த குமார முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

இலங்கை கட்புலனற்றோர் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய டி சந்தருவன் மற்றும் பெதும் சமன் குமார ஆகியோர் இணைந்து அதிரடியான ஆட்டம் மூலம் முதல் விக்கெட்டுக்காக 112 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றுக் கொண்டனர்.

இதில் சந்தருவன் 50 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகள் அடங்கலாக 60 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, பெதும் சமன் குமார வெறும் 26 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்களைப் பெற்று வலுச்சேர்த்தார்.

இதேநேரம், மத்திய வரிசையில் களமிறங்கிய கே. சில்வாவின் அரைச் சதத்தின் உதவியுடன் இலங்கை கட்புலனற்றோர் அணி 20 ஓவர்கள் நிறைவில், 7 விக்கெட்டுக்களை இழந்து 205 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இங்கிலாந்து கட்புலனற்றோர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பாக, எம். டீன் 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து கட்புலனற்றோர் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய எம். டீன் மற்றும் ஜே. ஹொல்லிங்வேர்த் ஜோடி அரைச்சத இணைப்பாட்டமொன்றைப் பெற்று நம்பிக்கை கொடுத்திருந்தனர்.

எனினும், மத்திய வரிசையில் களமிறங்கிய வீரர்களுக்கு இலங்கை பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுக்க, இங்கிலாந்து கட்புலனற்றோர் கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியைத் தழுவியது.

இங்கிலாந்து கட்புலனற்றோர் அணியின் துடுப்பாட்டத்தில், எம். டீன் 52 ஓட்டங்களையும், ஜே. ஹொல்லிங்ஸ்வேர்த் 48 ஓட்டங்களையும் பெற்றிருந்ததோடு இலங்கை கட்புலனற்றோர் கிரிக்கெட் அணிக்காக டி சந்தருவன், பெதும் சமன் குமார ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

“நேற்றைய போட்டியை திட்டமிட்டப்படி நகர்த்தியிருந்தோம்” – குசல் பெரேரா

போட்டியின் ஆட்டநாயகன் விருதை இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் எம். டீன் பெற்றுக்கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை கட்புலனற்றோர் அணி – 205/7 (20) – டி. சந்தருவன் 60, பெதும் சமன் குமார 50, கே. சில்வா 50, எம். டீன் 3/29

இங்கிலாந்து கட்புலனற்றோர் அணி – 181/5 (20) – எம். டீன் 52, ஜே. ஹொல்லிங்ஸ்வேர்த் 48, டி சந்தருவன் 1/25, பெதும் சமன் குமார 1/37

முடிவு – இலங்கை கட்புலனற்றோர் கிரிக்கெட் அணி 24 ஓட்டங்களால் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க