T20 தொடரின் முதல் போட்டியில் இந்திய கட்புலனற்றோர் அணி வெற்றி

117

சுற்றுலா இலங்கை கட்புலனற்றோர் கிரிக்கெட் அணி மற்றும் இந்திய கட்புலனற்றோர் கிரிக்கெட் அணி ஆகியவற்றுக்கு இடையில் நடைபெறும் T20 தொடரின் முதல் போட்டியில் 39 ஓட்டங்களால் இந்திய கட்புலனற்றோர் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றுள்ளது

முத்தரப்பு T20 தொடரின் சம்பியனாக இந்திய கட்புலனற்றோர் கிரிக்கெட் அணி

இலங்கை, இந்தியா, இங்கிலாந்து ஆகியவற்றின் கட்புலனற்றோர் கிரிக்கெட்…

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கட்புலனற்றோர் அணி, இந்திய கட்புலனற்றோர் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட T20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் என்பவற்றில் மோதுகின்றது.

இலங்கை கட்புலனற்றோர் அணியின் இந்த சுற்றுப் பயணத்தின் முதற்கட்டமாக நடைபெறும் T20 தொடரின் முதல் போட்டி, புனே நேரு மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.

முன்னதாக, போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை கட்புலனற்றோர் அணியின் தலைவர் K. குமார முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இந்திய கட்புலனற்றோர் அணியின் வீரர்களுக்கு வழங்கினார்.

முதலில் துடுப்பாடிய இந்திய கட்புலனற்றோர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 190 ஓட்டங்களை குவித்தது. இந்திய தரப்பின் துடுப்பாட்டத்தில் R. வெங்கடேஸ்வரா இறுதி வரை ஆட்டமிழக்காது நின்று 35 பந்துகளில் 50 ஓட்டங்களை விளாசியிருந்ததோடு, D. ராவோ உம் 27 ஓட்டங்களுடன் தனது தரப்பிற்கு பலம் சேர்த்திருந்தார்.

இதேநேரம், இலங்கை கட்புலனற்றோர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பாக S. சம்பத் 25 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களையும், D. ரவிந்திர ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர், போட்டியின் வெற்றி இலக்கான 191 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கையின் கட்புலனற்றோர் கிரிக்கெட் அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாற்றம் காட்டியது.

எனினும், மத்திய வரிசையில் ஆடிய K. சில்வா அரைச்சதம் ஒன்றுடன் அணியை பின்னர் கட்டியெழுப்பினார். ஆனால், அவரின் விக்கெட்டும் வீழ்த்தப்பட முடிவில் 20 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களை மாத்திரம் பெற்று இலங்கை கட்புலனற்றோர் கிரிக்கெட் அணி போட்டியில் தோல்வியடைந்தது.

இலங்கை கட்புலனற்றோர் அணிக்காக அரைச்சதம் ஒன்றுடன் போராடிய K. சில்வா 50 பந்துகளில் 57 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில், ஏனையோர் துடுப்பாட்டத்தில் மோசமாக செயற்பட்டிருந்தனர்.

இந்திய கட்புலனற்றோர் அணியின் பந்துவீச்சில் D. ராவோ 2 விக்கெட்டுக்களை சாய்த்து தனது தரப்பின் வெற்றியினை உறுதி செய்ததோடு, போட்டியின் ஆட்டநாயகன் விருதினையும் வென்றார்.

இந்திய கட்புலனற்றோர் அணி, இவ்வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் 1-0 என முன்னிலை பெறுகின்றது.

போட்டிச் சுருக்கம்

இந்திய கட்புலனற்றோர் அணி – 190/6 (20) R. வெங்கடேஸ்வரா 50*, D. ராவோ 2, S. சம்பத் 25/2

இலங்கை கட்புலனற்றோர் அணி – 151/9 (20) K. சில்வா 57, D. ராவோ 24/2

முடிவு – இந்திய கட்புலனற்றோர் அணி 39 ஓட்டங்களால் வெற்றி