சாதனை வெற்றியுடன் கங்காருவை வீழ்த்திய கிவி

127
Image Courtesy - AAP

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான ப்லடிஸ்லோ கிண்ண (Bledisloe cup) ரக்பி தொடரின் முதலாவது போட்டி சிட்னி நகரில் நடைபெற்றது. போட்டியின் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய நியுசிலாந்து 54-34 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி அவ்வணிக்கு எதிரான தனது முன்னைய சாதனையான 52-20 என்ற புள்ளிகள் பதிவை தகர்த்து புதிய சாதனையை படைத்தது.

நியுசிலாந்து அணி போட்டியின் முதல் பாதியிலேயே 40 புள்ளிகளைப் பெற்றமை சிறப்பம்சமாகும். எனினும், குறித்த பாதியில் அவுஸ்திரேலிய அணியினால் 6 புள்ளிகளை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது. முதல் பாதியில் நியுசிலாந்து அணியின் வேகத்தினால் நிலைகுலைந்த அவுஸ்திரேலிய அணி இரண்டாம் பாதியில் சற்று சுதாகரித்து போட்டியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.  

இரண்டாம் பாதியில் நியுசிலாந்து அணி மேலும் 24 புள்ளிகளைப் பெற்ற போதும் அவுஸ்திரேலிய அணி 28 புள்ளிகளைப் பெற்று, தமது அதிரடி ஆட்டத்தைக் காண்பித்தது. எனினும், அவர்கள் 20 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினர்.

நியுசிலாந்து அணி சார்பாக 8 ட்ரைகளும் அவுஸ்திரேலிய அணி சார்பாக 4 ட்ரைகளும் பெறப்பட்டன. மொத்தமாக நியுசிலாந்து அணி பெற்ற 54 புள்ளிகளும் லியம் ஸ்குயர், ரெய்க்கோ லோன், ரியன் க்ரொட்டி, சொனி பில் வில்லியம்ஸ் மற்றும் பென் ஸ்மித் ஆகியோரால் பெறப்பட்டன. அவுஸ்திரேலியா சார்பாக பெறப்பட்ட 34 புள்ளிகளும் கர்டிஸ் ரொனா, டெவிடா குரிடானி, கர்ட்லி பீலே, இஸ்ரேல் போலாவு மற்றும் பெர்னாட் போலே ஆகியோரால் பெறப்பட்டன.

உலகக் கிண்ண நடப்புச் சம்பியனாக களம் இறங்கிய நியுசிலாந்து அணியினை அவுஸ்திரேலிய அணி பலமாக எதிர்கொள்ளும் என எதிர்பார்த்தாலும் முதல் பாதியில் நியுசிலாந்து அணியின் வேகத்தில் சுருண்டமை அவ்வணிக்கு பெரும் ஏமாற்றமாகவே இருந்தது. எனினும் இறுதிப் பாதியில் அவுஸ்திரேலிய அணியின் உறுதியான மீள்வருகை எஞ்சிய போட்டிகளுக்கான உத்வேகத்தை அவ்வணிக்கு வழங்கியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 26ஆம் திகதி அவுஸ்திரேலிய நேரப்படி மாலை 5.35 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இப்போட்டித் தொடரில் அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, ஆஜன்டினா மற்றும் தென் ஆபிரிக்க அணிகள் பங்கு கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.