டெஸ்ட் தரவரிசையில் அதிரடி மாற்றங்கள் : சந்திமால் மேலும் முன்னேற்றம்

1146

தென்னாபிரிக்கா மற்றும் இந்தியா அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் மற்றும் அவுஸ்திரேலியாஇங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரின் 5ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டிகளை அடுத்து சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) அணிகள் மற்றும் வீரர்களுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.  

டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் அதிரடி மாற்றங்கள்

இந்திய – இலங்கை அணிகளுக்கு இடையிலான…

இதன்படி, கடந்த வருடம் நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுடனான டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக விளையாடியிருந்த இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் ஒரு இடம் முன்னேறி துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 8ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.  

அண்மையில் நிறைவுக்கு வந்த இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் இலங்கை சார்பாக 366 ஓட்டங்களைக் குவித்து 743 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட அவர், டெஸ்ட் தரவரிசையில் முதற்தடவையாக முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்தார்.

அத்துடன், கடந்த வருடத்தில் இலங்கை அணி சார்பாக ஆயிரம் டெஸ்ட் ஓட்டங்களைக் கடந்த இரண்டாவது வீரராகவும் இடம்பிடித்த சந்திமால், தனது பத்தாவது டெஸ்ட் சதத்தைப் பெற்றுக்கொண்டார். இதன்படி, இலங்கை அணிக்காக குறைந்த (80) இன்னிங்சுகளில் 10 டெஸ்ட் சதங்களைக் கடந்த வீரர் என்ற சாதனையினையும் அவர் நிலைநாட்டியிருந்தார்.  

தற்போதைய டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் 947 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.  

அதேவேளை, இரண்டாம் இடத்திலிருந்த இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி, 880 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 5 ஓட்டங்களையும், 2ஆவது இன்னிங்சில் 28 ஓட்டங்களையும் மாத்திரம் பெற்றமையினாலேயே கோஹ்லி இவ்வாறு ஒரு இடம் பின்நோக்கிச் சென்றுள்ளார்.

சந்திமாலின் திறமையை நாம் இன்னும் பார்க்கவில்லை

கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நடந்த..

முன்னதாக இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் அபாரமாக விளையாடி இரட்டைச் சதம் குவித்த அவர், 893 புள்ளிகளைப் பெற்று 5ஆவது இடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி இரண்டாம் இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆஷஸ் தொடரின் இறுதி டெஸ்ட் போட்டியில் 2 அரைச் சதங்களைக் குவித்த இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் 4ஆவது இடத்தில் இருந்து 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதன் காரணமாக, 3ஆவது இடத்தில் இருந்த செடெஸ்வர் புஜாரா 5ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட, நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய போதும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 640 புள்ளிகளுடன் 24ஆவது இடத்தையும், திமுத் கருணாரத்ன 25ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அதேநேரம், இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றிய தென்னாபிரிக்க வீரர் ககிசோ ரபாடா பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து வீரரான ஜேம்ஸ் அன்டர்சனை பின்தள்ளி முதற்தடவையாக முதலாமிடத்தைக் கைப்பற்றியுள்ளார். இதன்படி, டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட 7ஆவது தென்னாபிரிக்க வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக்கொண்டடுள்ளார்.

நடப்புச் சம்பியன் இந்தியாவுடனான போட்டியில் இலங்கைக்கு தோல்வி

டுபாய் மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்ற..

இதனால் தற்போது முதலாமிடத்தில் தென்னாபிரிக்கா வீரரான ரபாடாவும்(888 புள்ளிகள்), 2ஆம் இடத்தில் இங்கிலாந்து வீரரான அன்டர்சனும்(887 புள்ளிகள்) 3ஆம் மற்றும் 4ஆம் இடங்களில் இந்தியா வீரர்களான ஜடேஜா மற்றும் அஷ்வின் ஆகியோரும் முறையே உள்ளனர்.

இந்திய வீரர்களை தடுமாறச் செய்து 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி தென்னாபிரிக்க அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த வெர்னன் பிலாண்டர் 12ஆம் இடத்திலிருந்து அதிரடியாக 6ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இதேநேரம் 799 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் இருந்த இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத், ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 7ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

அத்துடன், டெஸ்ட் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் முதல் மூன்று இடங்களில் சகிப் அல் ஹசன், ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் நீடிக்கின்றனர். அத்துடன், ரங்கன ஹேரத் மற்றும் தில்ருவன் பெரேரா ஆகியோர் முறையே 8ஆவது மற்றும் 10ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை, டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா 124 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென்னாபிரிக்கா (111 புள்ளிகள்) மற்றும் அவுஸ்திரேலியா (104 புள்ளிகள்) அணிகள் முறையே 2ஆம், 3ஆம் இடங்களில் உள்ளன. இதில் 94 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட இலங்கை அணி, 6ஆவது இடத்தில் உள்ளது.