இலங்கை அணியில் இணைவாரா பானுக்க ராஜபக்ஷ?

1816
Bhanuka Rajapaksha

கொழும்பு ரோயல் கல்லூரியின் முன்னாள் வீரரான பானுக்க ராஜபக்ஷ, இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் இணைவதற்காக இங்கிலாந்தின் பென்றித் கிரிக்கெட் கழகத்திலிருந்து வெளியேறியுள்ளார் என இங்கிலாந்து ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தற்பொழுது 25 வயதான சகலதுறை ஆட்டக்காரர் பானுக்க ராஜபக்ஷ, இரண்டாவது பருவகால போட்டித் தொடரினை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ள பென்றித் கிரிக்கெட் கழகத்துடன் இணைந்திருந்தார்.

இந்நிலையில், குறித்த ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தற்போது நடைபெற்று வரும் ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டித் தொடர்களுக்கான இலங்கைக் குழாமிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையிலேயே பானுக்க ராஜபக்ஷ இலங்கை கிரிக்கெட் சபையினால் திருப்பி அழைக்கப்படுகின்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லக்ஷன் சந்தகனின் மாய சுழலின் பின்னணியில் இருப்பது என்ன?

போட்டியின் மத்திய ஓவர்களில் விக்கெட்டுக்களை சாய்ப்பதில் தடுமாற்றத்தினை..

மேலும், இலங்கை கிரிக்கெட் குழாமிற்கு அழைக்கப்பட்டுள்ளார் என்ற புரிந்துணர்வு அடிப்படையிலேயே பென்றித் அணியிலிருந்து பானுக்க வெளியேறியுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.  

எனினும், எப்போது இது குறித்து அறிவிக்கப்பட்டது என்று எந்த தகவல்களும் குறிப்பிடப்படவில்லை. அது போன்ற, இந்த விடயம் குறித்து இலங்கை கிரிக்கெட் தரப்பில் இருந்து இதுவரையில் எந்தவிதமான தகவல்களும் வெளியிடப்படவில்லை.

இலங்கை A அணியில் இடம்பிடித்திருந்த பானுக்க ராஜபக்ஷ கடந்த பருவகால போட்டிகளின் போது இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

இடது கை துடுப்பாட்ட வீரரான பானுக்க ராஜபக்ஷ மித வேகப்பந்து வீச்சாளருமாவார். கடந்த வார இறுதியில் பென்றித் கழக அணிக்காக விளையாடியிருந்த பானுக்க ராஜபக்ஷ ஆட்டமிழக்காமல் முறையே 73 மற்றும் 74 ஓட்டங்களை பதிவு செய்திருந்ததோடு, நான்கு விக்கெட்டுகளையும்  கைப்பற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இதுவரை 51 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 77 இன்னிங்ஸ்களில் துடுப்பாடி 2000க்கும் அதிகமான ஓட்டங்களையும் 30 விக்கெட்டுகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.