வில்லியம்சனிடம் மன்னிப்பு கோரிய பென் ஸ்டோக்ஸ்

8152
Ben Stokes
© AFP

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று (14) லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சுப்பர் ஓவரின் மூலமாக வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதல் தடவையாக உலகக் கிண்ணத்தை வென்றிருந்தது.

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஒருநாள் போட்டி என வர்ணிக்கும் அளவிற்கு மிக விறுவிறுப்பாக அமைந்திருந்த இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த ஒரு வீரர் பென் ஸ்டோக்ஸ் என்பதை மறுக்க முடியாது. 

வெற்றி தீர்மானிக்கப்பட்ட விதம் ஏமாற்றமளிக்கிறது: வில்லியம்சன்

உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில்……

இந்த இறுதிப் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடிய விதமானது முற்றுமுழுதாக வெற்றிக்கு காரணம் அவர்தான் என்ற அடிப்படையில் இருந்தது. இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், ஜொஸ் பட்லருடன் இணைந்து சிறந்த இணைப்பாட்டத்தை இவர் பகிர்ந்தார்.

ஜொஸ் பட்லர் ஆட்டமிழந்த பின்னரும் தனியாளாக களத்தில் நின்று ஓட்டங்களை குவித்தார். இறுதிவரை களத்தில் இருந்து இங்கிலாந்து அணி போட்டியை சமப்படுத்துவதற்கு காரணமாக இருந்த இவர் 84 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றதுடன், சுப்பர் ஓவரிலும் தனது துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்தினார். 

இப்படி திறமையான ஆட்டத்தினை பென் ஸ்டோக்ஸ் வெளிப்படுத்தியிருந்த போதிலும், போட்டியின் திறுப்புமுனையாக அமைந்த விடயம் இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடிய இறுதி ஓவரில் பெறப்பட்ட 6 ஓட்டங்கள். இறுதி ஓவரில் முதல் இரண்டு பந்துகளிலும் ஓட்டங்களை பெறத் தவறிய ஸ்டோக்ஸ் மூன்றாவது பந்தில் ஒரு சிக்ஸரை விளாசினார். இதன் மூலம் மூன்று பந்துகளுக்கு 9 ஓட்டங்கள் தேவைப்பட்டன.

இதற்கு அடுத்த பந்துதான் போட்டியின் திறுப்புமுனை. ட்ரென்ட் போல்ட் வீசிய பந்தினை பென் ஸ்டோக்ஸ் டீப் மிட்விக்கெட் பகுதிக்கு செலுத்தி இரண்டு ஓட்டங்களை பெற முற்பட்டார்.  இதில் இரண்டாவது ஓட்டத்தை ஸ்டோக்ஸ் நிறைவுசெய்யவுள்ள நிலையில், களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த மார்ட்டின் கப்டில் பந்தினை விக்கெட் காப்பு எல்லை பக்கம் வீசினார். துரதிஷ்டவசமாக குறித்த பந்து ஸ்டோக்ஸின் துடுப்பாட்ட மட்டையில் பட்டு, பௌண்டரி எல்லைக்கு சென்றது. 

இதனால், குறித்த பந்துக்கு 6 ஓட்டங்கள் பெறப்பட்டதுடன், இங்கிலாந்து அணிக்கு 2 பந்துகளில் 3 ஓட்டங்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டு, அந்த அணி போட்டியையும் சமப்படுத்திக்கொண்டது. கிரிக்கெட்டின் மகத்துவத்தை மதிக்கும் வகையில் களத்தடுப்பாளர்கள் வீசும் பந்து, துடுப்பாட்ட வீரரின் மீது பட்டால் அதன் பின்னர் துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை ஓடி பெறமாட்டார்கள். இதுவே கிரிக்கெட்டில் வழமையாக இடம்பெற்று வருகின்றது. 

ஆனால், துரதிஷ்டவசமாக பந்து பௌண்டரி எல்லையை அடைய விதிமுறைப்படி இங்கிலாந்து அணிக்கு ஓடிப்பெறப்பட்ட 2 ஓட்டங்களுடன் மேலதிகமாக 4 ஓட்டங்கள் வழங்கப்பட்டன. இந்த ஓட்டங்களானது நியூசிலாந்து அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது.

போராட்டத்தின் மத்தியில் உலகக் கிண்ணம் இங்கிலாந்து வசம்

கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தின் …….

இந்தநிலையில் கப்டில் வீசிய பந்து பென் ஸ்டோக்ஸின் துடுப்பாட்ட மட்டையை தாக்கிய போதும், ஸ்டொக்ஸ் அதனை அறிந்திருக்கவில்லை. எனினும், தனது துடுப்பாட்ட மட்டையில் பந்து பட்டு சென்றதற்கு அவர் மைதானத்தில் மன்னிப்பு கோருவதை போன்று செயற்பட்டிருந்தார். போட்டியின் பின்னர் அவர் ஆட்டநாயகன் விருதை பெற்றபோது, கேன் வில்லியம்சனிடம், மன்னிப்பு கோருவதாக பென் ஸ்டோக்ஸ் போட்டியின் பின்னர் பகிரங்கமாக அறிவித்தார். 

“போட்டியில் நாம் (ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர்) ஓட்ட எண்ணிக்கையின் நகர்வை அவதானத்தில் கொண்டு ஓட்டங்களை பெற்றோம். போட்டி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது என்பதை அறிந்த நாம் நியூசிலாந்து அணிக்கு அழுத்தத்தை கொடுக்கும் வகையில் செயற்பட்டோம்.

இதில், முக்கியமாக எனது துடுப்பாட்ட மட்டையில் பட்டு பந்து பௌண்டரிக்கு சென்றது துரதிஷ்டவசமானது. நான் அதனை வேண்டுமென்று செய்யவில்லை. அப்படி சிந்திக்கவும் இல்லை. அதற்காக நான் கேன் வில்லியம்சனிடம் மன்னிப்பு கோரினேன். அதுமாத்திரமின்றி எனது வாழ்நாள் முழுவதும் உங்களிடம் (கேன் வில்லியம்சனிடம்) மன்னிப்பு கோருவேன் எனவும் அவரிடம் தெரிவித்தேன்”  என பென் ஸ்டோக்ஸ் குறிப்பிட்டார். 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<