2019 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் ஒலிபரப்பு உரிமையை பெற்ற பிபிசி

384

இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள 50 ஓவர்கள் கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட உலகக் கிண்ணப் போட்டித் தொடரை ஒலிபரப்பும் உரிமையை பிபிசி (BBC) வானொலி பெற்றுக் கொண்டது.

பிபிசி நிறுவனம் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டிகளை வானொலியில் நேரடியாக ஒலிபரப்பு செய்து வருகிறது. இதற்கு இங்கிலாந்தில் பெரும் வரவேற்பு உள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக பிபிசி நிறுவனம் இந்த பணியை செய்து வருகிறது.

டெஸ்ட் தரவரிசையில் முன்னேறும் இலக்கோடு மேற்கிந்திய தீவுகள் குழாம் அறிவிப்பு

இந்நிலையில், அடுத்த வருடம் மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ள 50 ஓவர்கள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை நேரடி ஒலிபரப்பு செய்ய விரும்பியது.

எனவே, இதற்கான ஒலிபரப்பு உரிமையை சர்வதேச கிரிக்கெட் பேரவை நேற்று (24) உத்தியோகபூர்வமாக வழங்கியது. இதன்படி, பிபிசி ரேடியோ 5 லைவ் ஸ்போர்ட்ஸ் எக்ஸ்ட்ரா, ரேடியோ 4 லோங் வேப், பிபிசி ஸ்போர்ட் இணையத்தளம் ஆகியவற்றின் ஊடாக உலகக் கிண்ணப் போட்டிகளை ஒலிபரப்பு செய்ய உள்ளது.

இந்த தொடரோடு 2020 இல் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஆடவர் மற்றும் மகளிருக்கான டி20 உலகக் கிண்ணம், 2021 இல் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள ஐசிசியின் மகளிருக்கான 50 ஓவர்கள் உலகக் கிண்ணம் மற்றும் 2023 இல் இந்தியாவில் நடைபெறவுள்ள 50 ஓவர்கள் உலகக் கிண்ணம் வரை நடைபெறும் ஐசிசி இன் அனைத்து முக்கியமான தொடர்களையும் பிபிசி நேரடி ஒலிபரப்பு செய்ய இருக்கிறது.

இந்நிலையில். அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளை ஒலிபரப்பு செய்யும் வாய்ப்பு கிடைத்தமை தொடர்பில் பிபிசி வானொலியின் தலைவர் பென் கொலொப் கருத்து வெளியிடுகையில்,

”டெஸ்ட் போட்டியின் ஒலிபரப்பின் தயாகமாகவும், சின்னமாகவும் விளங்குகின்ற பிபிசி வானொலி நேயர்களுக்கு அடுத்த வருட கோடைக் காலம் மிகப் பெரிய விருந்தாக அமையவுள்ளது. நாங்கள் 2019 உலகக் கிண்ணப் போட்டிகளை ஒலிபரப்பு செய்யவுள்ளோம் என்பதை எமது நேயர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். எனவே ஒவ்வொரு பந்துக்கு பந்து நேர்முக வர்ணனையை பிபிசி ரேடியோ 5 லைவ் ஸ்போர்ட்ஸ் எக்ஸ்ட்ரா, ரேடியோ 4 லோங் வேப், பிபிசி ஸ்போர்ட் இணையத்தளம் ஆகியவற்றினூடாக நேயர்கள் கேட்கலாம்” என்றார்.

தனஞ்சயவுக்கு மாற்று வீரர் இன்றி மேற்கிந்திய தீவுகள் செல்லும் இலங்கை அணி

இதேநேரம், ஐ.சி.சி இன் தலைமை நிர்வாகி டேவிட் ரிச்சர்ட்சன் கருத்து வெளியிடுகையில், ”ஐசிசி கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை பிபிசி வானொலியின் வாயிலாக ஒலிபரப்புச் செய்யவுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம். இது ஐக்கிய இராச்சியம் முழுவதும் வாழ்கின்ற ரசிகர்களுக்கு மிகப் பெரிய செய்தியாக அமையவுள்ளது” எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டு வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ள அனைத்து சர்வதேசப் போட்டிகளையும் ஒலிபரப்பு செய்வதற்கான உரிமைய ஏற்கனவே பெற்றுக்கொண்டுள்ள பிபிசி வானொலி, அடுத்த 3 பருவகாலத்துக்கான ஆஷஸ் போட்டித் தொடர்களையும் ஒலிபரப்பு செய்யவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அதுமாத்திரமின்றி, இங்கிலாந்தின் கவுன்டி போட்டிகள் மற்றும் பெண்களுக்கான உள்ளுர் போட்டிகளை ஒலிபரப்பு செய்து வருகின்ற பிபிசி வானொலி, சுமார் 21 வருடங்களுக்குப் பிறகு முதல் தடவையாக பிபிசி தொலைக்காட்சி வாயிலாக கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க