விபுலானந்தன் நினைவுக் கிண்ணம் கொக்குவில் இந்து, யாழ். மத்தி வசம்

327
BB Vipulananthan Memorial Basketball tournament

நேற்று நிறைவடைந்த பாடசாலை அணிகளுக்கிடையிலான விபுலானந்தன் ஞாபகார்த்த கூடைப்பந்தாட்ட சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி பெண்கள் பிரிவிலும், யாழ். மத்திய கல்லூரி ஆண்கள் பிரிவிலும் சம்பியன் பட்டங்களை வென்றுள்ளன.

“சிவன் ஃபவுன்டேசன்” அனுசரணையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவத் தலைவர்கள் மன்றம் மற்றும் சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழகம் ஆகியன இணைந்து நடாத்திய மத்திய கல்லூரியின் மறைந்த மாணவத் தலைவனும் கூடைப்பந்தாட்ட வீரருமாகிய விபுலானந்தன் ஞாபகார்த்த கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிகள் நேற்றைய தினம் (30) மழையின் மத்தியிலும் யாழ் மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்டத் திடலில் நிறைவிற்கு வந்தது.

இம்முறை வெபர் கிண்ண சம்பியனாக மகுடம் சூடிய மட்டக்களப்பு அணி

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி …

பெண்கள் பிரிவு

இத்தொடரின் பெண்கள் பிரிவின் இறுதிப் போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி மற்றும் திருக்குடும்பக் கன்னியர்மடம் ஆகிய அணிகள் மோதியிருந்தன.

வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணியினை அரையிறுதியில் வெற்றிபெற்று திருக்குடும்பக் கன்னியர்மடம் அணியும், இராமநாதன் மகளிர் கல்லூரியை 38:19 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொக்குவில் இந்துக் கல்லூரி அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தன.

போட்டியின் ஆரம்பத்தில் அபாரமாக ஆடிய திருக்குடும்ப கன்னியர்மடம் அணியினர் முதற் காற்பகுதியில் 11:08 என்ற புள்ளிகளடிப்படையில் முன்னிலை பெற்றனர். எனினும், அடுத்த காற்பகுதியில் தர்சிகா மற்றும் தமிழரசி இணை 18 புள்ளிகளைச் சேகரிக்க கொக்குவில் இந்துக் கல்லூரி 27:11 புள்ளிகளடிப்படையில் முதல் அரைப்பகுதியில் முன்னிலை பெற்றது.

அடுத்த காற்பகுதியிலும் தர்சிகா, தமிழரசி ஆகியோர் தமது சிறப்பாட்டத்தினை தொடர 44:17 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தமது முன்னிலையை வலுப்படுத்தியது கொக்குவில் இந்து வீராங்கனைகள். இறுதியில் 54:32 என்ற புள்ளிகள் கணக்கில் போட்டி நிறைவிற்கு வர, இலகு வெற்றியுடன் கிண்ணத்தைத் தமதாக்கியது கொக்குவில் இந்துக் கல்லூரி அணி.

தொடரில் மூன்றாவது இடத்தினை வேம்படி மகளிர் கல்லூரி பெற்றுக்கொண்டது. இச்சுற்றுத் தொடரில் வடமராட்சியின் ஒரேயொரு அணியாக பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை பங்கெடுத்திருந்தமை வரவேற்பிற்குரியது.

விருதுகள்

இறுதிப் போட்டியின் நாயகி – தமிழரசி (கொக்குவில் இந்துக் கல்லூரி)

தொடர் நாயகி – ஸபானா (திருக்குடும்ப கன்னியர்மடம்)

சிறந்த ஷூட்டர் (Shooter) – தர்சிகா (கொக்குவில் இந்துக் கல்லூரி)

ஆண்கள் பிரிவு

வவுனியா, முல்லைத்தீவு என வெளி மாவட்ட அணிகளினது பங்குபற்றலுடன் இடம்பெற்றிருந்த தொடரின் ஆண்கள் பிரிவு போட்டிகளில் இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

அரையிறுதியில் புனித பத்திரிசியார் கல்லூரியை வெற்றிகொண்டு மத்திய கல்லூரியும், ஏஞ்சல் சர்வதேச பாடசாலையினை Walk over மூலம் வெற்றிகொண்டு கொக்குவில் இந்துக் கல்லூரியும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருந்தன.

போட்டியினை இரு அணிகளும் சிறப்பான முறையில் ஆரம்பித்திருந்தன. முதற் காற்பகுதியினை 10:06 என நிறைவு செய்து முன்னிலை பெற்றது மத்திய கல்லூரி. விறுவிறுப்பாக இடம்பெற்ற அடுத்த காற்பகுதியில் கொக்குவில் இந்து 12 புள்ளிகளினைச் சேகரித்த போதும் அவர்களை  விட இரண்டு புள்ளிகள் அதிகமாக சேகரித்த மத்திய கல்லூரி முதலாவது அரைப்பகுதியில் 24:18 என முன்னிலை பெற்றது.

அடுத்த காற்பகுதியிலும் சுஜீவனின் 06 புள்ளிகளிளின் உதவியுடன் 14 புள்ளிகளைச் சேகரித்து தமது முன்னிலையை மத்திய கல்லூரி வலுப்படுத்திய அதேவேளை, கொக்குவில் இந்துவால் 06 புள்ளிகளை மட்டுமே சேகரிக்க முடிந்தது.

இறுதிக் காற்பகுதியின் போது மழை அதிகரித்திருந்த போதும், மத்தியின் துசாந்தன், தார்மீசன் ஆகியோரின் வேகமான ஆட்டத்தின் உதவியுடன் அவ்வணி 20 புள்ளிகளை சேகரித்தது.

இறுதியில் 58:32 என்ற புள்ளிகளடிப்படையில் முழுநேர ஆதிக்கஞ் செலுத்திய மத்திய கல்லூரி இலகு வெற்றியுடன் விபுலானந்தன் ஞாபகார்த்தக் கிண்ணத்தினை தம்வசப்படுத்தியது. தொடரில் மூன்றாவது இடத்தினை தமதாக்கியது புனித பத்திரிசியார் கல்லூரி அணி.

விருதுகள்

இறுதிப் போட்டியின் நாயகன் – துவாரகன் (யாழ். மத்திய கல்லூரி)

தொடர் நாயகன் – புருசோத்மன் (கொக்குவில் இந்துக் கல்லூரி)

சிறந்த ஷூட்டர்(Shooter) – சுஜீவன் (யாழ். மத்திய கல்லூரி)