இந்து மைந்தர்களின் சமரில் கொழும்பு இந்துக் கல்லூரி வெற்றி

710

இந்து மைந்தர்களின் சமர் என அழைக்கப்படும், கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி 10ஆவது தடவையாக இன்று (9) நடைபெற்று முடிந்துள்ளது. இப்போட்டியில் கொழும்பு இந்துக் கல்லூரி அணி,  71 ஓட்டங்களால் யாழ்ப்பாண இந்துக் கல்லூரி அணியினை தோற்கடித்துள்ளது.

இரண்டு நாட்கள் கொண்ட இந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி, நேற்று (8) கொழும்பு P. சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு இந்துக் கல்லூரி அணியினர், முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமக்காக தேர்வு செய்து கொண்டனர்.

Photos: Hindu College, Colombo vs Hindu College, Jaffna – 10th Battle of the Hinduites | Day 2

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய கொழும்பு இந்துக் கல்லூரி அணியினர் தமது முதல் இன்னிங்ஸில் 102 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தனர்.

கொழும்பு இந்துக் கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பாக கெனிஷன் 31 ஓட்டங்களுடன் அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பெற, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியின் பந்துவீச்சில் கோவிரன் 23 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும், கஜநாத் 3 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர்.

இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியினர் வெறும் 90 ஓட்டங்களுடன் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தனர்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்ச ஓட்டங்களை சந்தோஷ் (20) பதிவு செய்ய, கொழும்பு இந்துக் கல்லூரி அணி பந்துவீச்சில் ஆகாஷ் 5 விக்கெட்டுக்களையும், K. தவலக்ஷன் 3 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் சிறிய முன்னிலை ஒன்றுடன் (12) தமது இரண்டாவது இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த கொழும்பு இந்துக் கல்லூரி அணி தமது இரண்டாவது இன்னிங்ஸில் 143 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

Photos: Hindu College Colombo vs Hindu College Jaffna | 10th Battle of the Hinduites | Day 1

கொழும்பு இந்துக் கல்லூரி அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்டிருந்த கெனிஷன் 44 ஓட்டங்களை குவித்திருந்தார். இதேநேரம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் கோபிராம் 58 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை சாய்த்து சிறப்பாக செயற்பட, சந்தோஷ் 4 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.

கொழும்பு இந்துக் கல்லூரி அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை அடுத்து யாழ் இந்துக் கல்லூரி அணிக்கு போட்டியின் வெற்றி இலக்காக 156 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி, மோசமான ஆட்டம் காரணமாக 84 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து போட்டியில் தோல்வியைத் தழுவியது.

யாழ்ப்பாண இந்துக் கல்லூரி அணியின் துடுப்பாட்டத்தில் ஐங்கரன் மட்டுமே இருபது (22) ஓட்டங்களை கடக்க ஏனைய அனைவரும் ஏமாற்றம் தந்திருந்தனர்.

மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் தேவப்பத்திராஜா, புனித ஜோன்ஸ் கல்லூரிகள் வெற்றி

அதேநேரம் கொழும்பு இந்துக் கல்லூரி அணியின் பந்துவீச்சில் K. தனலக்ஷன் மற்றும் B. ஆகாஷ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி தமது தரப்பின் வெற்றியை உறுதி செய்திருந்தனர்.

இப்போட்டியின் மூலம் இந்து மைந்தர்கள் சமரில் 2015ஆம் ஆண்டிற்கு பின்னர், கொழும்பு இந்துக் கல்லூரி அணியானது முதல் தடவையாக வெற்றி ஒன்றை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு இந்துக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 102 (47) – கெனிஷன் 31, கோவிரன் 5/23, கஜநாத் 3/08

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 90 (44.1) – சந்தோஷ் 20, B. ஆகாஷ் 5/18, K. தனலக்ஷன் 3/14

கொழும்பு இந்துக் கல்லூரி  (இரண்டாம் இன்னிங்ஸ்) – 143 (60) – கெனிஷன் 44, ஹரேந்திர பிரசாத் 21*, B. ஆகாஷ் 21, கோபிராம் 6/58, சந்தோஷ் 4/36

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 84 (31.5) – ஐங்கரன் 22, K. தனலக்ஷன் 3/06, B. ஆகாஷ் 3/19

முடிவு – கொழும்பு இந்துக் கல்லூரி அணி 71 ஓட்டங்களால் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க