சமநிலையில் முடிவுற்ற 68ஆவது தங்கச்சமர்

96

தங்கச் சமர் என வர்ணிக்கப்படும் மொரட்டுவை புனித செபஸ்தியன் கல்லூரி மற்றும் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரிகளுக்கு இடையிலான 68ஆவது வருடாந்த மாபெரும் கிரிக்கெட் சமர் இன்று (10) வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.

இவ்வருடத்திற்கான போட்டிகள் மொரட்டுவை டி சொய்சா மைதானத்தில் நேற்று  ஆரம்பமானது. இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தினை புனித செபஸ்தியன் கல்லூரிக்கு வழங்கியது. இதன்படி முதலில் துடுபெடுத்தாடிய செபஸ்தியன் கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக ஜனிஷ பெரேரா அதிகபட்சமாக 32 ஓட்டங்களைப் பெற்றார்.

68ஆவது தங்கச்சமரின் முதல் நாளில் ஆதிக்கம் செலுத்தும் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி

தங்கச் சமர் என வர்ணிக்கப்படும் மொறட்டுவை புனித செபஸ்தியன் கல்லூரி மற்றும் பிரின்ஸ் ஒப் வேல்ஸ்…

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி சார்பாக பந்து வீச்சில் கௌமல் நாணயக்கார 6 விக்கெட்டுக்களையும் சவிந்து பீரிஸ் 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

பின்னர் தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 227 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. துடுப்பாட்டத்தில் சனோஜ் தர்ஷிக ஆட்டமிழக்காது 59 ஓட்டங்களையும் தேவக பீரிஸ் ஆட்டமிழக்காது 40 ஓட்டங்களையும் பெற்றதுடன் அவிந்து பெர்னாண்டோ 56 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

செபஸ்தியன் கல்லூரி சார்பாக பந்து வீச்சில் தாஷிக் பெரேரா மற்றும் பிரவீன் ஜயவிக்ரம ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய புனித செபஸ்தியன் கல்லூரி அணி இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை போட்டி சமநிலையில் முடித்துக்கொள்ளப்பட்டது.

இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி பயணிக்கும் யாழ் மத்திய கல்லூரி

நடைபெற்று வரும் 112ஆவது வடக்கின் பெரும் சமரின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்றைய தினம் (09…

செபஸ்தியன் கல்லூரி சார்பாக துடுப்பாட்டத்தில் நுவனிது பெர்னாண்டோ 82 ஓட்டங்களைப் பெற்றார்.

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி சார்பாக பந்து வீச்சில் கௌமல் நாணயக்கார 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

புனித செபஸ்தியன் கல்லூரி, மொரட்டுவை (முதலாவது இன்னிங்ஸ்) – 159 (50.1) -ஜனிஷ்க பெரேரா 32, நிஷித அபிலாஷ் 28, கௌமல் நாணயக்கார 6/45, சவிந்து பீரிஸ் 4/49

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவை (முதலாவது இன்னிங்ஸ்) – 227/7d (79) – சனோஜ் தர்ஷிக 59*, அவிந்து பெர்னாண்டோ 56, தேவக பீரிஸ் 40*, சந்துன் பெர்னாண்டோ 30, சுவத் மென்டிஸ் 21, தாசிக் பெரேரா 2/33, பிரவீன் ஜயவிக்கிரம 2/61

புனித செபஸ்தியன் கல்லூரி, மொரட்டுவை (இரண்டாவது இன்னிங்ஸ்) – 152/6d (68.5) – நுவனிது பெர்னாண்டோ 82, கௌமல் நாணயக்கார 2/49

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.