பலம் மிக்க ப்ரில்லியன்டை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது சனிமவுண்ட்

350

மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கம் நடாத்திய ”பறக்கத் டெக்ஸ் மின்னொளி உதைபந்தாட்ட சமர்-2017” சுற்றுப் போட்டியின் சம்பியன் கிண்ணத்தை கல்முனை சனிமவுண்ட் விளையாட்டுக் கழக அணி வென்றது.

கடந்த 10ஆம் திகதி மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட இச்சுற்றுப் போட்டியில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த பலம் மிக்க 8 அணிகள் கலந்துகொண்டன.

இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடாத்தவுள்ள ப்ரில்லியன்ட் மற்றும் சனி மவுன்ட்

மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் அம்பாரை….

தொடரின் இறுதிப் போட்டி நேற்றிரவு (13) மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இந்த மோதலில் கல்முனை ப்ரில்லியன்ட் விளையாட்டுக் கழக அணியும், கல்முனை சனிமவுண்ட் விளையாட்டுக் கழக அணியும் மோதின.   

அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி .எம்.றக்கீப் தலைமையில் இடம்பெற்ற இறுதிப் போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக பறக்கத் டெக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எம்...பரீட் கலந்துகொண்டார்.

போட்டி ஆரம்பமாகி 5வது நிமிடத்தில் ப்ரில்லியன்ட் அணிக்குக் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை அவ்வணியின் நட்சத்திர வீரா் றவுப் அடித்தபோது பந்து கோல் கம்பத்தை உரசி மேலால் சென்றது.

இரண்டு அணிகளும் சம பலத்துடன் விளையாடியதால் இரு அணிகளினதும் கோல் எல்லைக்குள் பந்து வருவதும் போவதுமாக இருந்தது.

ப்ரில்லியன்ட் அணியின் வீரா்களான றவுப், ஹாறூன் இருவரும் கோல் ஒன்றை அடிப்பதற்கான முழுமையான முயற்சிகளை எடுத்த போதிலும் அது பலனளிக்கவில்லை.

போட்டியின் 30வது நிமிடத்தில் றவுப் கோல் எல்லைக்குள் கொண்டு சென்று கம்பத்தை நோக்கி உதைத்தபோது பந்து கோல் கம்பத்திற்கு மேலால் சென்றது. மிக இலகுவாக கோல் பெறும் வாய்ப்பு இதன் மூலம் ப்ரில்லியன்ட் அணிக்கு இல்லாமல் போனது.  

அதேபோன்று சனிமவுண்ட் வீரா் றிபாஸ் இடது பக்கத்திலிருந்து பந்தை அடித்தபோது ப்ரில்லியன்ட் கோல் காப்பாளர் சப்ராஸ் மிகவும் திறமையான முறையில் மேல் உயர்ந்து பந்தை குத்தி வெளியில் அனுப்பினார்.  

சனிமவுண்ட் அணிக்கு இதன்மூலம் கோணர் கிக் கிடைத்தது. இன்ஷாப் பந்தை உதைத்தபோது மீண்டும் கோல் காப்பாளர் சப்ராஸ் பந்தை குத்தி வெளியேற்றினார்.  

இவ்வாறு இரண்டு அணிகளும் வேகமாக விளையாடிய போதிலும் எந்த தரப்பினராலும் கோல் பெற முடியவில்லை. அவ்வாறே முதலாவது பாதி ஆட்டம் நிறைவுக்கு வந்தது.  

முதல் பாதி: ப்ரில்லியன்ட் விளையாட்டுக் கழகம் 0 – 0 சனிமவுண்ட் விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பித்ததிலிருந்து இரண்டு அணிகளும் மிக வேகமாக தமது ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

போட்டியின் 55வது நிமிடத்தில் ப்ரில்லியன்ட் வீரா் றவுப் கொண்டு சென்ற பந்து கோலாக மாறும் என்று எதிர்பார்த்த வேளை அவர் அடித்த பந்து கோல் கம்பத்திற்கு அருகினால் சென்றது. கோல் காப்பாளர் முன்னகர்ந்து வந்ததால் மிக இலகுவாகக் கோல் போடும் வாய்ப்பு இருந்தது. எனினும் அந்த வாய்ப்பு தவறிவிடப்பட்டமை ப்ரில்லியன்ட் அணிக்கு தொடர்ச்சியான ஏமாற்றமாக இருந்தது.  

போட்டியின் 70வது நிமிடத்தில் றில்கான் பரிமாற்றிய பந்தைப் பெற்றுக் கொண்ட ஹினாஸ், மிக வேகமாக ப்ரில்லியன்ட் அணியின் பின்கள வீரா்கள் இருவரைத் தாண்டி கொண்டு சென்று பந்தை உதைத்தபோது பந்து கோல் கம்பத்திற்குள் சென்றதால் முதலாவது கோலை சனிமவுண்ட் பெற்றது.

ப்ரில்லியன்ட் வீரா்களும் போட்டியை சமப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக பலமாக பந்துகளை முன்னகர்த்திச் சென்ற போதிலும் அந்த வாய்ப்புக்கள் பலனளிக்கவில்லை.   

போட்டியின் 78வது நிமிடத்தில் சனிமவுண்ட் வீரர் றிஸ்னி வலது பக்கத்திலிருந்து மிக வேகமாக உதைத்த பந்து கோல் காப்பாளரையும் தாண்டி கோலாக மாறியது. இதனால் இரண்டு கோல்களால் சனிமவுண்ட் முன்னிலை பெற்றது.  

கடைசி நேரத்தில்கூட ப்ரில்லியன்ட் வீரர்கள் பந்துகளை சனிமவுண்ட் கோல் எல்லைக்குள் கொண்டு சென்ற போதிலும் கோல் காப்பாளரின் சாதுர்யமான செயற்பாட்டினால் அவை முறியடிக்கப்பட்டன.  

போட்டியின் முழுமையான நேர முடிவில் 2-0 என்ற கோல்கள் அடிப்படையில் சனிமவுண்ட் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று நீண்டகால இடைவெளிக்குப் பிறகு சம்பியன் கிண்ணத்தை வென்றது.

முழு நேரம்: ப்ரில்லியன்ட் விளையாட்டுக் கழகம் 0 – 2 சனிமவுண்ட் விளையாட்டுக் கழகம்

வெற்றி பெற்ற சனிமவுண்ட் அணியின் பயிற்றுவிப்பாளர் எம்.. எம்.. மனாப் ThePapare.com இற்கு கருத்துத் தெரிவிக்கும்போது, எமது வீரர்களின் அர்ப்பணிப்பு மிக்க திறமையின் மூலம் கிண்ணத்தை வென்றதில் மகிழ்ச்சியடைகின்றேன். அணியின் ஒற்றுமையும், சிறந்த பந்துப் பரிமாற்றமும் இப்போட்டியில் வெற்றி பெறக் காரணமாக அமைந்தது” என்றார்.

தோல்வியடைந்த ப்ரில்லியன்ட் அணியின் பயிற்றுவிப்பாளர் எஸ் பால்.எம்.பழீல் கருத்துத் தெரிவிக்கும் போது, இப்போட்டியில் பல கோல்களைப் பெறும் வாய்ப்புகள் தவறவிடப்பட்டமை தோல்விக்கு முக்கிய காரணமாகும். எதிர்காலத்தில் பிழைகளைத் திருத்திக் கொண்டு வெற்றி பெற முயற்சிப்போம்” என்றார்.

சுற்றுத் தொடரின் சிறந்த வீரர் – எம்.ஹினாஸ் (சனிமவுண்ட்)

சுற்றுத் தொடரின் சிறந்த கோல் காப்பாளர் – சப்ராஸ் (ப்ரில்லியன்ட்)