பறக்கத் டெக்ஸ் மின்னொளி கால்பந்தாட்ட சமர்-2017 முதல் சுற்று முடிவுகள்

279
Barakath Tex Football 2017

மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் அம்பாரை மாவட்ட உதைபந்தாட்ட சங்கம் நடாத்தும் ”பறக்கத் டெக்ஸ் மின்னொளி உதைப்பந்தாட்ட சமர்-2017” சுற்றுப் போட்டி கடந்த 10 ஆம் திகதி மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது.

முதலாவது போட்டியில் மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து மருதமுனை கோல்ட்  மைன் விளையாட்டுக் கழகம் மோதியது. இந்தப் போட்டி  1-1 என்ற கோல்கள் கணக்கில் சமநிலையில் முடிவடைந்த போதும் இறுதியில் பெனால்டி உதையில் 5-4 என்ற கோல்கள் வித்தியாசத்தில் ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று முதலாவது அணியாக அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவானது.

இரண்டாவது போட்டியில் ஏறாவூர்  யங் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து கல்முனை லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகம்  மோதியது. இதில் 3-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் கல்முனை லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று இரண்டாவது அணியாக அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவானது.

காலநிலை தடைகளை தாண்டி  ஏற்பாட்டாளர்களால் மிகச் சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட இந்த ஆரம்ப போட்டியின் பாதி ஆட்டத்திலும் பின்னர் முதலாவது போட்டியின் முடிவின் போதும் சில நடக்கக் கூடாத விடயங்கள் ரசிகர்களின் மனதை புண்படுத்தியது.

கால்பந்தாட்டத்தில் சிகரத்தை தொட்ட மருதமுனை மண்ணில் இவ்வாறான சம்பவங்கள் அரங்கேறுவது வேதனையளித்ததாக ரசிகர் ஒருவர் குறிப்பிட்டார்.

நாகரிகமான விளையாட்டு வீரர்களையும்,  விளையாட்டுத் துறையையும் உருவாக்குவது பொறுப்பு வாய்ந்தவர்களின் தலையாய கடமையாகும்.

பதுளையில் திஹாரிய யூத் அணி வீரர்கள் மீது தாக்குதல்

இந்த பருவகாலத்திற்கான டிவிஷன் 1 ( பிரிவு 1) கால்பந்து சுற்றுப்போட்டியில், கெலிஓய…

சுற்றுப் போட்டியின் இரண்டாம் நாள் நேற்றிரவு  11ஆம் திகதி மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் 8.00 மணிக்கு நடைபெற்றது.

முதலாவது போட்டியில் மருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து கல்முனை சனி மவுண்ட் விளையாட்டுக் கழகம் மோதியது. 

இதில் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் கல்முனை சனி மவுண்ட் விளையாட்டுக் கழக அணி வெற்றி பெற்று மூன்றாவது அணியாக அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவானது.

இரண்டாவது போட்டியில்  கல்முனை பிர்ளியன்ட் விளையாட்டுக் கழகத்தை  எதிர்த்து  காத்தான்குடி பாலமுனை நெஸனல் விளையாட்டுக் கழகம் மோதியது.

இதில் கல்முனை பிர்ளியன்ட் விளையாட்டுக் கழக அணி 3-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நான்காவது அணியாக அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவானது.

இதன்படி இன்று இரவு இடம்பெறவுள்ள இரண்டு அரையிறுதிப் போட்டிகளிலும் கல்முனை பிரதேசத்தின் மூன்று அணிகளும், மருதமுனைப் பிரதேசத்தின் ஒரு அணியும் கலந்து கொள்கின்றது.

ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்திற்கும், பிர்ளியன்ட் விளையாட்டுக் கழகத்திற்குமிடையில் முதலாவது அரையிறுதிப் போட்டி இரவு 8.00 மணிக்கு இடம்பெறுவதுடன் சனி மவுண்ட் விளையாட்டுக் கழகத்திற்கும், லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகத்திற்குமிடையில் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இரவு 10.00 மணிக்கும் இடம்பெறவுள்ளது.

வெற்றி பெறுகின்ற இரண்டு அணிகளும் இறுதிப் போட்டியில் நாளை இரவு 800 மணிக்கு விளையாடவுள்ளதாக ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் எம்.எல்.எம்.தாஹிர் தெரிவித்தார்.